Saturday 12 January 2013

சரவண பவன் இன்று திறந்து இருக்குமா? (October 26th, 2011)

காலை வணக்கம்; தீபாவளி வாழ்த்துக்கள்” என்று காலை ஐந்து மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்காவிட்டால் இந்த நாட்குறிப்பை நான் எழுதியிருக்க மாட்டேன்.  ஐந்து மணிக்குக் கூட நம்மைப் பற்றி நினைக்க ஒரு ஆத்மா இருப்பது நல்ல விஷயம்தான்.  இருந்தாலும் ஒரு பண்டிகை நாள் அன்று காலை உணவுக்காகக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் இந்தக் குறுஞ்செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது?
வழக்கம் போல் நான்கு மணிக்குத் துயில் எழுந்து ஸீரோ டிகிரியின் ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தேன்.  நான் இரவு உணவு சாப்பிடும் வழக்கம் இல்லாததால் காலையில் கொலைப் பசி தெரியும்.  என்ன செய்யலாம் என்ற கவலை நான்கு மணிக்கே தொற்றிக் கொண்டது.  தீபாவளி நாள் அன்று எல்லோரும் குதூகலத்துடன் இருப்பார்கள்; நாய்களுக்குத்தான் அன்றைய தினம் தண்டனை தினம்.  நானும் நாய்களுக்குப் பிரியமானவன் என்றபடியால் எனக்குமே இது தண்டனை தினம்தான்.  வழக்கம்போல் நடைப் பயிற்சிக்குப் போக முடியாது.  நேற்று கூட போய் வந்து விட்டேன்.  மழைக் காலத்தில் மெரினா கடற்கரை அற்புதமாக இருக்கும்.  இன்று வெடிச் சத்தம்.   பப்பு, ஸோரோ மாதிரியே உள்ளுக்குள் அடங்கி விட்டேன்.  அதிலும் ஸோரோ ரொம்பவே பயப்படுகிறது.  வெளியே செல்லவே அச்சப்பட்டு நேற்று வீட்டுக்குள்ளேயே மூத்திரம்.  இன்று அதனால் ஸோரோவிடம் கடினம் காண்பித்து வெளியே அனுப்பி காலைக் கடனை முடிக்கச் செய்தேன்.
தெருமுனையில் உள்ள அண்ணாச்சி கடை காலை ஆறு மணிக்கே திறந்து விடும்.  மாவாவது வாங்கிக் கொண்டு வந்து நாமே இட்லி போட்டுச் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்து வெடிகளுக்கு இடையே கஷ்டப்பட்டு நடந்து சென்றேன்.  அங்கேயும் மாவு கிடைக்கவில்லை; அன்பான வார்த்தைகள்தான் கிடைத்தன.  “தீபாவளி வாழ்த்துக்கள்; இன்று கடை விடுமுறை.”
சென்ற வாரம் இப்படித்தான் ஒருநாள் காலை உணவுக்காக மாட்டிக் கொண்ட போது நானே மாவு வாங்கி வந்து எனக்குப் பிடித்தமான இட்லியைச் செய்தேன்.  தொட்டுக் கொள்ள ஒரு 25 காய்ந்த மிளகாயையும், மூன்று பூண்டு பல்லையும் கல் உப்பையும் போட்டுத் துகையல் அரைத்துக் கொண்டேன்.  சுடச் சுட இட்லியின் மீது செக்கில் அரைத்த நல்லெண்ணையை ஊற்றி, நாக்கைத் துண்டாடும் அந்தச் சிவப்பான துகையலைத் தொட்டுக் கொண்டு ஒரு 15 இட்லியைக் காலி செய்தேன்.  அது இப்போது ஞாபகம் வருகிறது.
வாசகர் வட்ட முகநூலைத் திறந்தேன்.  ”பண்டிகைக்கு முதல் நாள் இரவு குழிப் பனியாரமும் கோழிக் குழம்பும், நிற்காமல் தூறிக் கொண்டே  இருக்கும் வானமும், பட்டாசு சத்தமும், மத்தாப்பு ஒளியும், எண்ணெய் குளியலும், விதவிதமான பலகாரங்களும், புதுத் துணியும், பண்டிகை காசும், புதுப் படமும் இப்படி எதுவுமே இல்லாமல் நாளைக்கு வேலைக்குப் போகும் என்னை மாதிரி ஒரு துரதிர்ஷ்டசாலிக்கு தீபாவளி வாழ்த்து சொல்லும் உங்களை என்ன சொல்வது… சரி நீங்களாவது சந்தோசமா தீபாவளிய கொண்டாடுங்க…. Happy Diwali Folks … இப்படிக்கு துபாய்ல குடும்பத்தோட குப்பை கொட்டுற ஒரு அப்பாவி தமிழன்…!” என்று ஜனார்தனன் காசி விஸ்வநாதன் எழுதியிருந்ததைப் படித்தேன். அவராவது துபாயில் இருக்கிறார்.  மயிலாப்பூரில் இருந்து கொண்டே எனக்கு இந்த நிலை.  என்னைப் போல் அனாதையாக வாழும் ஆத்மாக்கள் பண்டிகை தினங்களில்தான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போகிறார்கள்.
மெயில்பெட்டியில் சுமார் 300 தீபாவளி வாழ்த்துக்கள் வந்து குவிந்திருக்கின்றன.  எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நான்?  ஸீரோ டிகிரியில் உள்ள வார்த்தைகளால் ஆனது வாழ்க்கை என்ற கவிதை ஞாபகம் வந்தது. எனக்குக் கிடைத்த வார்த்தைகள் அதிகம்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் சில மனிதர்களிடமிருந்து வார்த்தைகள் கூட கிடைப்பதில்லை. ”எனக்கு அம்மா ஒரு புடவை வாங்கித் தந்தார்; அப்பா ஒரு புடவை வாங்கித் தந்தார்; பெரியப்பா ஒரு புடவை வாங்கித் தந்தார்; அண்ணா ஒரு புடவை வாங்கித் தந்தான்; தம்பி ஒரு புடவை வாங்கித் தந்தான்; கணவர் மன்மந்திரிலிருந்து புடவை வாங்கித் தந்தார்.  (”விலை என்ன?”  ”12000 ரூபாய்க்கு ஒரு அட்டகாசமான புடவை இருந்தது.  ஆனால் அதை விசேஷங்களுக்கு மட்டும்தான் கட்டிக் கொள்ள முடியும்.  அவ்வளவு வேலைப்பாடு.  அதனால் 8000 ரூ. புடவையையே வாங்கிக் கொண்டேன்)”
“இவ்வளவு சொல்கிறாய்… எனக்குப் புத்தாடை வாங்கி ஆயிற்றா என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே நீ?”
எப்போதுமே நாம் ஒரு தவறைச் செய்தால் அதை விட பெரிதாக ஒரு தவறைச் செய்தால்தானே நம் மனம் அடங்கும்.  என் கேள்விக்கு தோழி சொன்ன பதில்:  “என் கணவரிடம் அப்படிக் கேட்டு எனக்குப் பழக்கம் இல்லையே?” (கவனியுங்கள் அராத்து)
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை; நேற்று நான் எழுதியிருந்த பொருவிளங்காய் உருண்டை பற்றியும் சொன்னார் தோழி. ”அது ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது; அதே சமயம், சீனி உருண்டை மாதிரி உதிர்ந்து விடுவது போலவும் இருக்கக் கூடாது. என் அம்மா பிரமாதமாகச் செய்வார்…”
ஆமாம்; என் அம்மாவும் பிரமாதமாகச் செய்வார்கள்.  யோசித்துப் பார்க்கிறேன்.  என் அம்மா தனது 78 வயது வரை அடிமையாக வாழ்ந்தவரா?  78 வயது வரை அவர் தலைமுடி நரைக்கவில்லை.  ஆறு குழந்தைகளைப் பெற்றார்.  மருத்துவமனையே சென்றதில்லை.  எந்தக் குழந்தையும் சிஸேரியன் இல்லை.  பிள்ளைப் பேறு பார்க்கும் கிழவி வந்து பிள்ளையை எடுத்துப் போட்டு விட்டு மூன்று ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விடுவார்.  அல்லது, என் அம்மாச்சியே பிள்ளைப்பேறு பார்ப்பார்.  வீட்டைப் பொறுத்தவரை என் அம்மா வைத்ததுதான் சட்டம்.  நைனா ஒரு அப்புரானி.  ஒரு ராணியைப் போல் வாழ்ந்தார் அம்மா.  அவர் என்ன பெண்ணடிமையா?  எனக்கு அப்படித் தோன்றவில்லை.  இப்போது வந்துள்ள நவீன மோஸ்தர் பெண்  விடுதலை பொருவிளங்காய் உருண்டையைப் பறித்துக் கொண்டு ஹல்வாவையும் லட்டையும் கொடுத்திருக்கிறது.
சரி, அதெல்லாம் இருக்கட்டும்…  பசி ஆரம்பித்து விட்டது. எனக்கு வந்துள்ள 300 தீபாவளி வாழ்த்துக்களை வைத்து நான் பசியாற முடியாது. சரவண பவன் இன்று திறந்து இருக்குமா?  இதோ கிளம்பிப் போய் பார்க்க வேண்டும்…
26.10.11.
7.25 a.m.

No comments:

Post a Comment