Tuesday 2 July 2013

இந்தப் புகழ் அனைத்தையும் என் குரு நித்யாவுக்கே சமர்ப்பிக்கிறேன்

கொஞ்சம் சுயபுராணம்

டியர் சாரு,
நான் உங்கள் எழுத்துக்களின் மிகத் தீவிரமான விசிறி. உங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த நண்பனுக்கு நன்றி. அதோடு உங்கள் புத்தகங்கள் இங்குள்ள வாடகை நூலகத்திலும் கிடைக்கின்றன. அங்கிருந்துதான் உங்கள் புத்தகங்களை எடுத்துப் படித்து வருகிறேன். உங்களிடம் என்னை வசீகரித்த முக்கியமான பண்பு, நீங்கள் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் எழுதுகிறீர்கள். மற்ற எழுத்தாளர்கள் அப்படி இல்லை. உங்கள் மனதில் பட்டதை – அது சரியோ தவறோ அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் – அப்படியே பட்டவர்த்தனமாக எழுதுகிறீர்கள். அதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். ஆனால் உங்கள் எழுத்தை எதிர்கொள்வதற்கான மனோதிடமோ, முதிர்ச்சியோ, நகைச்சுவை உணர்வோ தமிழர்களாகிய எங்களிடம் இல்லை என்பதை எண்ணி வருத்தமடைகிறேன்.
உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று என் நண்பர்கள் கேட்கும் போதெல்லாம் உங்கள் பெயரைத்தான் சொல்கிறேன். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா? ” ஓ அவனா, எப்போதும் செக்ஸ் பற்றியே யோசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பானே ... “ இதைக் கேட்டு எனக்கு எரிச்சல்தான் வரும். ஆனால் உடனே குஷ்வந்த் சிங் இந்தியர்களைப் பற்றி சொன்னதும் ஞாபகம் வந்து விடும். அவர் சொன்னார்,“இந்தியர்களுக்கு எப்போதும் கடவுள், செக்ஸ், பணம் என்ற மூன்றைப் பற்றித்தான் கவலை ” என்று.
அவர்கள் இப்படிச் சொல்வதற்கு இன்னொரு காரணம், இன்றைய இளைஞர்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. நான் படிக்கும் பொறியியல் கல்லூரியில் (மூன்றாம் ஆண்டு) நான் எப்போதும் இலக்கியப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து என் சக மாணவர்கள் என்னைக் கிண்டல் செய்யாத நாள் இல்லை. ஒருநாள் என் நண்பன் என்னைப் பார்த்து “உன் மனைவியோடு செக்ஸ் கொள்ளும்போது கூட புத்தகம்தான் படிப்பாயா? ” என்று கேட்டான். பாவம், இந்த உலகத்தில் அவர்கள் எத்தனை அருமையான விஷயத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் கொடுத்தால் மிக ஆர்வமாகப் படிக்கிறார்கள். அது மட்டும் அல்ல; சினிமா நடிகர்களுக்கு இருப்பது போல் உங்களுக்கு எங்கள் கல்லூரியில் ஒரு பெரிய ரசிகர் மன்றமே இருக்கிறது.
Keep rocking Charu…
எஸ். செழியன்,
தஞ்சாவூர்.
30.1.2010.
***
அன்புள்ள சாரு ,
சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நான் சிறப்பு பெற்றவன் இல்லை. நீங்கள் ஆலமரம் என்றால் நான் அதன்கீழ் கிடக்கும் சருகு போல் தான் தகுதி கொள்வேன். ஆனால் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லோரும் உங்கள் எழுத்தின் மீது கொண்டுள்ள அபிமானத்தை அவர்களின் கடிதங்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். நான் அதிகம் பயன்படுத்தும் இணைய உலாவி கூகிள் நிறுவனத்தின் கூகிள் குரோம். அதில் அடிக்கடி உலாவப்படும் இணைய தளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அம்சமாக முதல் எட்டு தளங்களின் முதல் பக்கங்கள் திரைப்பிடிப்பாக முகப்புத் திரையில் இருக்கும். அப்படியான எனது கணினியின் குரோம் பயன்பாட்டில் , தங்களது வலைத்தளம் ஐந்தாவது இணைப்புப் படமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கும் மேல் இருப்பதாகும்.
சொல்லப்போனால் தங்களுடையதுதான் பொதுத் தளங்களாக நான் படிப்பவற்றில் முதலிடம். இதில் பெருமையும் கொள்கிறேன். அதனால் இதனை உங்களிடம் இப்பொழுது பகிர்ந்து கொள்கிறேன். அது எப்படி என்றால், முதல் நான்கு வலைத்தளங்களில் மூன்று என் தொழில் சார்ந்தவை; நான்காவது நான் அவ்வப்போது - இல்லை அடிக்கடி - விளையாடச் செல்லும் இணைய விளையாட்டுத் தளமாகும்.
ஆக , வெளியுலக ரீதியாக நான் செல்லும் முதல் தளம் உங்கள் சாருஆன்லைன் டாட் காம் தான். இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை அல்லது குறைந்தது ஒரு நாளைக்கு பத்து தடவையாவது சென்று தங்களின் புதிய பதிவுகள் உள்ளனவா என்று பார்ப்பேன். அதிலும் முதலில் பார்ப்பது டைட்டில் பார் தான். உங்கள் தளத்தில் புதிய பதிவுகளின் தலைப்பு டைட்டில் பாரில் தெரிவது ஒரு நல்ல அம்சம். பக்கம் முழுமையாக பதிவேறுவதற்குள் டைட்டில் மாறியிருந்தால் உள்செல்வேன் , இல்லையென்றால் மூடிவிடுவேன். என் கூகிள் குரோமில் உங்கள் தளம் முதலிடம் பெற வேண்டும். அதற்காக தினமும் நிறைய பதிவுகளை வெளியிடுங்கள்.
தங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தங்களுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு ,
இன்பராஜ் .
1.2.2010.
***
இந்தப் புகழ் அனைத்தையும் என் குரு நித்யாவுக்கே சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னால் அது ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டது போல் உங்களுக்குத் தோன்றும். ஆனாலும் எனக்கு வேறு மாதிரி சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால், இந்த திடீர்ப் புகழுக்கு தர்க்கரீதியான விளக்கம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் 35 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், 2008-இல் கூட நான் எழுதிய 10 புத்தகங்கள் வந்தன. எந்த சலனமும் இல்லை. திடீரென்று இந்த ஆண்டுதான் இப்படி.
ஆனால் இந்தப் பிராபல்யத்துக்கு உயிர்மையும் மனுஷ்ய புத்திரனும் முக்கியமான காரணம். அவர் மட்டும் உயிர்மையை ஆரம்பிக்காமல் காலச் சுவடிலேயே இருந்திருந்தால் நானும் 300 பேருக்கு மட்டுமே எழுதிக் கொண்டிருந்திருப்பேன்.
இன்னொரு காரணம், கணினி வசதி, இணைய தளம். என் நண்பர் வாசு சொன்னார். சென்னையிலிருந்து அவர் தில்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் கையிலிருந்த அடியேனின் புத்தகத்தைப் பார்த்து விட்டு பக்கத்திலிருந்த பெண்மணி என்னைப் பற்றிப் பேச ஆரம்பித்தாராம். தில்லி போய் சேரும் வரை பேச்சு நீடித்தது. என் எழுத்தை அவ்வளவு கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கிறார். ” விமர்சனமோ பாராட்டோ, அவ்வளவு நேரம் உங்கள் எழுத்தைப் பற்றி நடு வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது விவாதித்துக் கொண்டிருந்தது த்ரில்லிங்-ஆக இருந்தது ” என்றார் வாசு.
“அவருக்கு என்ன 60 வயது இருக்குமா? ” என்றேன்.
” எப்படி அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்? ”
“ இளைஞர்களுக்குத்தான் என் எழுத்து பிடிக்கிறது; அதனால் சொன்னேன். ”

***

சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம். என் தோழி ஒருவர் அழகு நிலையத்துக்கு சென்றிருக்கிறார். தற்கொலைப் படை என்று சொல்கிறோமே, அந்த ரகம் அவர். அவர் கையிலிருந்த என் புத்தகத்தைப் பார்த்து விட்டு அங்கே வந்த மற்றொரு பெண் ஆர்வத்துடன் பேசியிருக்கிறார். ’ தற்கொலைப் படை ’ யின் போனிலிருந்து என்னோடும் பேசினார்.
” மிகவும் சோர்வான முகத்துடன் வந்த அந்தப் பெண் உங்களோடு பேசும் போது அடைந்த உணர்வை பரவசம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சினிமா நட்சத்திரம் அல்லது மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி பாப் ஸ்டாருக்குத்தான் இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் ” என்றார் தோழி.
அந்த முகம் தெரியாத வாசகி பேசியதிலிருந்து நானும் அதை உணர முடிந்தது.
” அவ்வளவு பரவசம் அடையும் அந்தப் பெண்ணிடம் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்தீர்களா? ” என்று தோழியிடம் கேட்டேன். முறைத்தார்.

***
சமீபத்தில் உயிர்மையில் சாருஆன்லைன் பற்றி வந்துள்ள ஒரு தகவல் மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்தது. இதை மனுஷ்ய புத்திரனைத் தவிர வேறு யாரும் இவ்வளவு வெளிப்படையாக சொல்லியிருக்க மாட்டார்கள். அந்தக் கட்டுரையில் அவர் உயிர்மையை விட அதிக வாசகர்களால் சாருஆன்லைன் படிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். இதற்குக் காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும், என்னுடைய கட்டுரைகளை இரவு பகல் பாராமல் பதிவேற்றம் செய்து வரும் தங்கவேலுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***
ஆயிரத்தில் ஒருவன் பற்றி பல வாசகர்கள் கேட்டுள்ளனர். உயிர்மையில் அது பற்றிய என் கட்டுரை வெளிவந்து விட்டது. படித்துக் கொள்ளவும். படிக்க முடியாதவர்களுக்கு சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அந்தப் படம் ஒரு அருவருக்கத்தக்க, ஆபாச குப்பை. மட்டுமல்லாமல், ஒரு இனத்தையே மிகக் கேவலமாக அவமானப்படுத்தியிருக்கிறார் செல்வராகவன். சோழ மக்கள் என்ன நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகளாகவா வாழ்ந்தார்கள்? அப்படித்தான் காட்டியிருக்கிறார் இயக்குனர். இதை எப்படித் தமிழ் மக்கள் பொறுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதை விட ஆச்சரியம், லக்கிலுக், அபிலாஷ் போன்ற ’ பின்நவீனத்துவ ’ விமர்சகர்கள் இந்தப் படத்தைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். அந்தக் கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை.
***
1.2.2010.
6.20 p.m.