Sunday 15 December 2013

"நீயா நானா" கோபி, அந்தோணி சமூக விரோதிகள் - சாரு தாக்கு

சைமன் கோபிநாத் மற்றும் ஆண்டனியின் சமூக விரோதப் போக்கு
June 30th, 2010
என் எழுத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரியும், நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்பது.  கடவுள் நம்பிக்கை உள்ளவனே தவிர எனக்கென்று மத அடையாளம் கிடையாது.  எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் வழக்கம் உள்ளவன்.  ஆனால் எந்த மதத்தையும் இன்னொரு மதத்தினர் புண்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும்.  இந்த நிலையில் விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து இந்து மதத்தினரை மிகக் கேவலமாக அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்பது பற்றி ஏற்கன்வே எழுதியிருந்தேன்.  கூடவே சமயம் கிடைத்தால் இஸ்லாமையும் அவர்கள் சீண்டிப் பார்ப்பதும் எதிர்ப்பு வந்தால் உள்ளே அடங்கிக் கொள்வதுமாக இருக்கின்றனர்.  இதற்குக் காரணமானவர்கள் இரண்டு பேர்.  ஆண்டனி மற்றும் சைமன் கோபிநாத்.

ஒரு தாலி தேவையா இல்லையா என்ற நிகழ்ச்சியில் தாலி தேவை என்று வாதிடுகிறார் ஒரு பெண்.  ஆனால் குழந்தைப் பேறு சமயத்தில் டாக்டர்  தாலியைக் கழற்றி வைக்கச் சொன்ன போது என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார் சைமன் கோபிநாத்.  கழற்றி வைத்தேன் என்கிறார் அந்தப் பெண்மணி.  உடனே கோபிநாத் என்ற சமூக விரோதி அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆபாசமாகக் கேட்கிறார்: டாக்டர் என்ன சொன்னாலும் கேட்பீர்களா?

ஆண்டனி, கோபிநாத் என்ற இரண்டு சமூக விரோதிகளும்  என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள்.   உடனடியாக அந்த நீயா நானா நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும்.  இதற்கு வாசகர்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக ஒரு இணைப்பு இதோ:
http://www.tamilhindu.com/2009/11/tele-medias-degrading-hindu-religious-feelings/

-----------------------------------------------
மன்னிப்புக் கேள் (4)
June 3rd, 2010
ஹாய் சாரு,

நான் உங்களின் தீவிர விசிறி.  அந்த நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஏன் கோபி உங்களை மன்னிப்புக் கேட்க வைப்பதிலேயே தீவிரமாக இருந்தார் என்று யோசித்தேன்.  நீங்கள் சொல்வதை அவர் கேட்பதாகவே தெரியவில்லை.  கோபிநாத்தை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன்.  உங்கள் நிலைமை எனக்கு நன்றாகப் புரிகிறது.  ஏனென்றால், நானும் உங்களைப் போலத்தான்; எதற்கும் எதிர்வினை புரிய நீண்ட நேரம் எடுத்துக் கொள்வேன்.

அன்புடன்,
சுப்பு
***
டியர் சாரு,

’நீயா  நானா’ நிகழ்ச்சி மேல் இருந்த மரியாதையே போய்விட்டது,  அது ஒரு வெறி பிடித்த கூட்டம் போல் தோன்றுகிறது,
தவறே செய்யாத மனிதர்கள் யார் இந்த உலகில்?  ஆண்டனியும் கோபிநாத்தும் தங்கள் வாழ்க்கையில் தவறே செய்ததில்லையா? அல்லது ஒரு ஆன்மீகவாதியின் மீது நம்பிக்கை வைத்தது தவறா?
விடுங்கள்.  இதெல்லாம் ஒரு கேவலமான சூழலையே காட்டுகிறது.
அன்புடன்,
செல்வன்.
***

டியர் சாரு,
நான் உங்கள் தீவிர வாசகன்.

நீங்கள் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியை நான் நேற்று பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் திட்டமிட்டு உங்களை அவமானப்படுத்தினார்கள்.  நீங்கள் உணர்ச்சிவசப்பட்டது உங்கள் முகத்தில் அப்பட்டமாகத்  தெரிந்தது. அதனால்தான் உங்களால் அங்கு சரளமாக பேசமுடியவில்லை. என்னதான்  பிரபலமான  டாக் ஷோவாக இருந்தாலும் தமிழகத்தின் மிகப்பெரிய எழுத்தாளரை இப்படியா கூப்பிட்டு அவமானப்படுத்துவார்கள்?

தாங்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக உங்களின் கட்டுரையை தமிழிஷில் நான் இப்போதுதான் படித்தேன். அந்த கட்டுரையின் மையக்கருத்தை புரிந்துக்கொள்ளாமல் ஒருவர் உங்களை மிகவும் கடுமையாக த் தாக்கி தமிழிஷ் இல் பின்னூட்டம் இட்டுள்ளார். அவரின் இந்த தாக்குதலுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.

இப்படிக்கு,
V. சண்முகம்

***
அன்புள்ள சாரு,
ஞாயிறு இரவு நான் பயணத்தில் இருந்தமையால் தாங்கள் பங்கேற்ற நீயா நானா நிகழ்ச்சியைக் காண இயலவில்லை.  எனது நண்பன் என்னைத் தொலைபேசியில் விளித்து அந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றுள்ளீர்கள் என்று சொன்னபோது காண  முடியாமல் போனதற்கு வருந்தினேன். ஆனால் தங்களின் ’மன்னிப்புக்கேள்!’ கட்டுரையைப் படித்த பின்பு அந்த வருத்தம்  காணாமல் விட்டது பார்க்காமல் விட்டது பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஒரு எழுத்தாளன் மேல் வெட்ட வெளிச்சமாக இப்படிப்பட்ட ஒரு வன்முறையைச் செய்ய அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது என்று புரியவில்லை.  அவர்களும் இந்தத் தமிழ் சமூகத்தின் பகுதி தானே, எழுத்தாளனிடம் இப்படித்தான்  நடந்து கொள்ளத்  தெரியுமோ என்னவோ? நான் இது பற்றித்  தனியாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. எனினும் இனிமேல் இது போன்ற போலியான சமூக அக்கறை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அன்புடனும் கண்டிப்புடனும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
தயாநிதி.
***
கோபிநாத் ஏன் என்னை மன்னிப்புக் கேட்க வைப்பதிலேயே தீவிரமாக இருந்தார் என்றால் அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.  அந்த நிகழ்ச்சியில் வெளியே தெரியும் உருவம் மட்டுமே கோபிநாத்; மற்றபடி கேள்விகள் அனைத்தும் ஆண்டனியின் மூளையிலிருந்து வருவது.  அன்றைய தினம் கோபியின் காதுகளில் உள்ள ஒலிவாங்கியில் ஆண்டனியின் குரல் இவ்விதமாக ஒலித்திருக்குக்கும்…  “விடாதே; மன்னிப்புக் கேட்கிற வரைக்கும் விடாதே… ’உங்களுக்கென்று பெரிய வாசகர் கூட்டம் இருக்கிறது.  அவர்களைத் திசை திருப்பி விட்டதற்காக நீங்கள் இப்போது மன்னிப்புக் கேட்பீர்களா சாரு?’ மன்னிப்பு கேட்கிற வரைக்கும் விடாதே..” இந்த வாக்கியத்தில் ஒற்றை மேற்கோள் குறிக்குள் இருப்பதை மட்டும்தான் தமிழ் மக்கள் கேட்டிருப்பார்கள்.  மற்றவற்றை கோபி மட்டுமே கேட்டிருப்பார்.  நானும் கெட்ட வார்த்தை பேசுவேன்.  ஆனால் என் வீட்டுக்குள்தான் பேசுவேன்.  இப்படிப் பலர் முன்னிலையில் – அதுவும் நம் நிகழ்ச்சியை மதித்து எங்கிருந்தோ வந்து பேசிக் கொண்டிருப்பவரை குரங்கு மூஞ்சிக்காரன் என்று வர்ணிக்க மாட்டேன்.

ஆண்டனியின் பக்கத்தில் உட்கார்ந்து நிகழ்ச்சியின் ஆரம்பக் கட்டங்களைப் பார்த்த போது எனக்கு ஒரு wwf நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் இருந்தது. ”விடாதே… அந்தப் பச்சை சட்டைக்காரனை விடாதே…  நீ என்ன நினைக்கிறேன்னு கேளு… விடாதே விடாதே அமுக்கு….” என்று குறைந்த குரலில் – ஆனால் படு ஆவேசமாகக் கத்துவார் ஆண்டனி.  அந்த் சேடிஸத்தை நான் எழுதி நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.  விடாதே என்று ஆண்டனி கோபியிடம் சொல்லும் ஆவேசத்தை நான் எப்படி எழுத்தில் மொழிபெயர்க்க முடியும்? அதனால்தான் ஒரே வாக்கியத்தில் “என்னைக் கொலைவெறியுடன்  தாக்கினார்கள்” என்று எழுதினேன்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சேலத்தைச் சேர்ந்த என் வாசக நண்பர் ராஜா தொலைபேசியில் என்னை அழைத்தார். அவர் இயற்கை உணவை மக்களிடையே பரப்பும் களப்பணியாளர்.  இயற்கை விஞ்ஞானி ஆழ்வாரின் நண்பர்.  அவர் ஆழ்வார் கலந்து கொண்ட ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் ஆண்டனிக்குப் பக்கத்தில் அமர்ந்து மேடையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அனுபவத்தை என்னிடம் விளக்கினார்.  ஆண்டனி கோபிநாத்திடம் “மைக்கை அந்தப் பச்சை சட்டைக்காரனிடம் கொடு; அவனைப் பேசச் சொல்லு… இப்போ அந்தக் குரங்கு மூஞ்சிக்காரண்ட்ட குடு…” என்றே கத்திக் கொண்டிருந்தாராம்.  இதையேதான் நானும் பார்த்தேன்.

ஆண்டனி சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.  நாம் கடுமையாக வெய்யில் அடிக்கக் கூடிய ஒரு பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அதனால் நம் எல்லோருக்குமே குரங்கு மூஞ்சியாகத்தான் இருக்கிறது.  சுவிட்ஸர்லாந்து போன்ற சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் இருந்திருந்தால் வெள்ளைத்தோல் மனிதர்களாக இருந்திருப்போம்.  எனவே மற்றவர்களைக் குரங்கு மூஞ்சி என்று சொல்வதற்கு முன்னால் உங்களுடைய முகத்தைச் சற்று கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், நீங்கள் குரங்கு மூஞ்சி என்று வர்ணிக்கும் மக்கள்தான் உங்களுடைய நீயா நானா நிகழ்ச்சி இவ்வளவு பிரபலம் ஆனதற்குக் காரணம்.  எனவே உங்கள் வெற்றிக்குக் காரணமான மக்களைப் பழிக்காதீர்கள்.

இப்படியாக நீயா நானா நிகழ்ச்சி என்னை மட்டுமல்ல; எல்லோரையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்னொரு முறை கூப்பிட்டால் போவேன்.  ஏன் என்று என்னுடைய முந்தைய கட்டுரையில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் என்னை இனிமேல் நீயா நானாவுக்கு அழைக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  நான்தான் மானம் ரோஷம் எதுவுமே இல்லாதவன் என்றால்  மற்றவர்களும் அப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

சண்முகத்திற்கு என் பதில்: என் கருத்தோடு முரண்படுவதற்கும் என்னை விமர்சிப்பதற்கும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.  நீங்கள் குறிப்பிடும் அன்பரின் பின்னூட்டத்தைப் படித்தேன்.  அவருக்கு பதில் எழுதி அவரிடம் என்னுடய நேர்மையையும் சுபாவத்தையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஒரு கல்லை நான் சாமி என்று வணங்குகிறேன்; இன்னொருவர் அதை செருப்பால் அடிக்கிறார்.  இந்த இரண்டு செயல்களாலும் அந்தக் கல்லுக்கு எந்த பாதிப்பும் இல்லை.  அவர் என்னைத் திட்டுவதை நான் வாங்கிக் கொண்டால்தானே கவலைப்பட வேண்டும்?  நான் வாங்கிக் கொள்ளவில்லை.  எனவே அவர் மீது கோபமும் இல்லை.
3.6.2010.
11.55 a.m.

-----------------------------------------------
மன்னிப்புக் கேள் (5)
June 5th, 2010

டியர் சாரு,
உங்களிடம் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம்.  விஜய் டி.வி.யின் நீயா நானா குழுவில் பணியாற்றுபவர்களில் நானும் ஒருவன்.  என் பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம்.

நீயா நானாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஆண்டனி கருப்பாக இருப்பவர்களை குரங்கு மூஞ்சி என்று குறிப்பிடுவது பற்றி எழுதியிருந்தீர்கள்.  உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன எழுதுவீர்களோ தெரியாது.  நிறத்தையும் உருவத்தையும் வைத்து ஏளனம் செய்தால் ஐரோப்பாவில் அதை இனவாதம் என்று சொல்லி ஜெயிலில் போட்டு விடுவார்கள்.  இங்கே ஆண்டனி செய்வது அது மட்டும் அல்ல.  கிட்டத்தட்ட ஒரு மத வெறியரைப் போல் அவர் நடந்து கொள்கிறார்.  முக்கியமாக இந்து மற்றும் இஸ்லாம் மீது தன் மீடியாவை வைத்து பிரச்சினை கொடுக்கிறார்.

சில உதாரணங்கள்:
சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் பர்தா அணியலாமா கூடாதா என்று ஒரு டாக் ஷோவுக்குத் திட்டமிடப் பட்டு, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பால் அது கை விடப் பட்டது. பர்தா அணியலாமா கூடாதா என்று சொல்ல அல்லது விவாதிக்க ஆண்டனி யார் என்பது என் கேள்வி.

சென்ற வாரம் – அதாவது, நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஷூட் செய்வதற்கு மறுநாள் ஒரு டாக் ஷோவை ஷூட் செய்ய இருந்தோம்.  பொது இடங்களில் மக்கள் மத அடையாளத்துடன் வரலாமா கூடாதா என்பதே விவாதத்தின் தலைப்பு.  இதிலிருந்தே நீங்கள் ஆண்டனி என்பவரின் இந்து விரோதப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.  மத அடையாளம் என்றால் என்ன? நெற்றியில் விபூதியோ, ஸ்ரீசூர்ணமோ அணியலாமா கூடாதா என்பதே அந்தத் தலைப்பின் உள்குத்து.  இதை விவாதிக்க இந்த ஆண்டனி என்பவர் யார்?  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பற்றி பணம் பண்ணுவதற்காகவும், தன் டாக் ஷோவை பிரபலப் படுத்துவதற்காகவும் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல ஆண்டனியின் நோக்கம்.  இந்து மதத்தின் மீது மற்றவர்களுக்கு துவேஷத்தை ஏற்படுத்துவதே அந்தத் தலைப்பின் நோக்கமாக இருந்தது.  மத அடையாளம் என்றால் அது நேரடியாக இந்து மதத்தைத் தாக்குவதே ஆகும்.   ஏனென்றால், ஒருவரின் மத அடையாளத்தை அவருடைய வர்க்க பேதம் எதுவும் இல்லாமலேயே உடனே தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் சீக்கியர்கள்.  அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.  அதனால்தான் அந்த விவாதத் தலைப்பு இந்துக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிறேன்.

இந்த டாக் ஷோவில் உங்கள் நண்பர் மனுஷ்ய புத்திரனும் பிரதம விருந்தாளியாக கலந்து கொள்ள இருந்தார்.  உன்னைப் போல் ஒருவன் என்ற இஸ்லாமிய விரோதப் படத்தில் பாட்டு எழுதியதற்காக அவரையும் மன்னிப்புக் கேட்க வைப்பதற்காக அழைத்தார்களா என்று தெரியவில்லை.  ஆனால் அவர் உங்களைப் போல் வெகுளி அல்ல.  நிச்சயம் அன்றைய தினம் கோபியின் விழிகள் பிதுங்கி இருக்கும்.  மனுஷ்ய புத்திரனின் விவாதத் திறமையும் கூரிய புத்தியும் உயிர்மையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகின்றன.  (ஆமாம், நான் உயிர்மையின் நீண்ட நாள் வாசகன்).

ஆனால் இந்த டாக் ஷோ ரத்து செய்யப்பட்டு விட்டது;  ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால்.

நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை மீண்டும் சற்று கவனித்துப் பாருங்கள்.  ஒருவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.  அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது.  இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் சேர்க்கப்பட்டதன் காரணம், அவர் ஆண்டனியின் பினாமி.  அவர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? கிறிஸ்தவ மதத்தில் நித்யானந்தா போன்ற போலிகள் இல்லை என்றார்.  பிறகு பவா செல்லத்துரை கண்டனம் செய்ததால் “அங்கேயும் சில பாதிரியார்கள் தவறு செய்கிறார்கள்” என்று ஒத்துக் கொண்டார்.  ‘நாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளை மட்டும் தாக்கவில்லை; பொதுவாகத்தான் இருக்கிறோம்’ என்று போலியாகக் காண்பித்துக் கொள்வதற்காகவே தமிழ் பேசத் தெரியாத அந்த நபர் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டார்.

நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் ஆண்டனி இந்து மற்றும் இஸ்லாமுக்கு எதிராகவே தொடர்ந்து நடந்து கொள்கிறார்.  இதை உங்கள் இணைய தளம் பகிரங்கப் படுத்த வேண்டும்.
அன்புடன்,
3.5.2010.
***
அன்பு நண்பருக்கு,

நான் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளுக்கு எதிரானவன்.  என்றாலும் எந்த ஒரு மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள ஆண்டனி போன்ற ஊடக நண்பர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.  தமிழ்நாட்டில் மட்டுமே எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  விநாயகர் ஊர்வலத்தில் திருவல்லிக்கேணியில் எத்தனையோ முஸ்லீம்கள் ஊர்வலத்துக்கு உதவியாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அதே போல் இங்கே தேவாலயங்களும் தர்ஹாக்களும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களாகவே உள்ளன.

இந்த அமைதியைக் குலைக்க விரும்பும் செயல்கள் மிகவும் கண்டிக்கத் தக்கவை.  ஆண்டனிக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்.  கடவுளுக்கு மதம் கிடையாது.  எல்லா மனிதர்களும் கடவுளுக்கு முன்னால் சமமானவர்களே.
5.6.2010.
7.20 a.m.
(இந்தப் பதிவை எல்லா பதிவர்களும் தங்கள் வலைமனைகளில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்).
-----------------------------------------------
 மன்னிப்புக் கேள் (8)
June 9th, 2010
உயர்திரு சாரு அவர்களுக்கு

வணக்கம்.
பத்து தலைமுறையாக உயர்கல்வி கற்று,  ஒரு பெரு்நகரத்தில் வாழ்ந்து வரும்  ஒரு பரம்பரையில்
வருகின்ற வாரிசின் பண்பியல் தொகுப்பை உங்கள் எழுத்தை ஐந்து வருடங்களாகப்  படித்து வருவதன் மூலம்  நான் அடைந்துள்ளேன். (எனது அப்பா மற்றும் அம்மாவின் படிப்பு முறையே ஐந்து மற்றும் எட்டு. நான் பனிரெண்டாம் வகுப்பு)
 நிற்க.
உங்களின் தரத்திற்கு நீங்கள் ‘நீயா நானா’  நிகழ்ச்சியிலெல்லாம் கலந்து கொள்வது தேவையில்லாதது என்பது என் தாழ்மையான கருத்து. என்னதான் உங்கள் கருத்து அந்த நிகழ்ச்சியின் மூலம்  மக்களுக்குச் சென்றடைய  வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும் அந்த நிகழ்ச்சி பார்க்கும் மக்களின் சிந்தனைத் திறன் மீது எனக்கு நம்பிக்கையில்லை.

பணிவன்புடன்
உங்கள் மாணவன்
பெருமாள்
கரூர்.
பெருமாள்,
***
இனிமேல் அவர்களும் அழைக்க மாட்டார்கள்; நானும் கலந்து கொள்வதாக இல்லை.  இதுவே என் முடிவான முடிவு.
9.6.2010.
4.24 p.m.   
--------------------------------------
மன்னிப்புக் கேள் (கடைசி, கடைசி, கடைசி!)
June 11th, 2010

ஹாய் சாரு,
நீங்கள் பங்கேற்ற நீயா நானா நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன். கடுமையான கோபம் ஏற்பட்டது.  எப்போதாவதுதான் தமிழ் சேனல்களை நான் பார்ப்பது வழக்கம்.  அதில் நீயா நானாவும் ஒன்று.  காரணம், அந்த நிகழ்ச்சி எனக்குப் பிடித்திருப்பதால் அல்ல; மற்ற குப்பைகளை விட இந்தக் குப்பை பரவாயில்லை; அவ்வளவுதான்.  அன்றைய தினம் கோபிநாத் உங்களிடம் கேட்டது அந்த நேரத்தில் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது.  முழுக்க முழுக்க பழிவாங்கும் உணர்வே அவரிடம் தென்பட்டது.  ஒரு சிறுமியை சாலையோரத்தில் வைத்து வன்புணர்ச்சி செய்வதற்கு ஒப்பான செயல் அது. உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் மதுரை பாஷையில் பதில் சொல்லியிருப்பேன்.  நான் மதுரைக்காரன்.

இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.  இவ்விஷயத்தை நீங்களே கையாள்வதற்கு உங்களுக்கு முழுத்தகுதியும் உள்ளது. இருந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
மகேந்திரா
4.6.2010.
***
சாரு,
நீங்கள் குறிப்பிட்ட அந்த வீடியோவைப் பார்த்தேன்! நீங்கள் சொல்வது சரிதான்! கோபி கேள்வி கேட்கும்போது, தானாக தோன்றி கேட்கும் பட்சத்தில் பொறுமையாக கேட்பார்! ஆனால், கேள்வி கேட்கும்போது, சடாரென்று ஒரு கோபத்துடன் கேட்கிறார்! What a fraud!
அதே போல, மன்னிப்பு கேட்கச்சொல்லிய விஷயத்தில் கோபியின் a.k.a. விஜய் டி.வி.யின் தரம் அதலபாதாளத்துக்கு போய்விட்டது!
அடுத்த முறை எவனாவது இப்படி கேட்டால், “மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது! நாளைக்கு என் ப்ளாக்கில் எழுதுகிறேன்! அதைப் படிச்சுக்கோ” என்று சொல்லிவிடுங்கள்!
நான் உங்களுடைய ரசிகனாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் எழுத்தில் தெரியும் நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
ரவி பாலகிருஷ்ணன்
4.6.2010.
***
பாசமுள்ள சாரு,
நான் உங்களுடைய தீவிர ரசிகன்.உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் .மீண்டும் ஒரு முறை நீங்கள் நீயா நானா-வில் கலந்து கொண்டு கோபி மற்றும் அந்தோனி -யின் மூக்கை உடைக்குமாறு வேண்டி கொள்கிறேன்.
பாசமுள்ள,
அருண்.
4.6.2010.
***
டியர் சாரு,
எண்பதுகளில் நடந்த சம்பவம் இது.  தூர்தர்ஷனில் ஒரு டாக் ஷோவுக்காக சுஜாதாவை அழைத்திருந்தார்கள்.  கல்லூரி மாணவர்களோடு சுஜாதாவின் கலந்துரையாடல்.  மாணவர்கள் கேள்வி கேட்க சுஜாதா பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.  ஆனால் போகப் போக சுஜாதாவின் மீதான தாக்குதல் என்பதாகப் போய் விட்டது அந்த நிகழ்ச்சி.  சுஜாதா அதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.  அவரால் பதில் சொல்ல முடியவில்லை.  உடனே மாணவர்கள் அதைத் தங்களின் வெற்றியாக எடுத்துக் கொண்டு அவரை மேலும் துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.  பார்க்கவே பயங்கரமாக இருந்தது.  உங்களுக்கு அந்தச் சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? அந்த நிகழ்ச்சியின் போது சுஜாதாவின் முகம் எப்படி இருந்தது என்று இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.  உங்களுடைய விஜய் டி.வி. அனுபவம் எனக்கு அதைத்தான் நினைவு படுத்துகிறது.
மாலா,
யு.எஸ்.
8.6.2010.
***
சாரு,
விஜய் டி.வி.யில் கலந்து கொள்வதில்லை என்ற உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.  உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு உங்களுக்குப் பூரண உரிமை இருக்கிறது. So,  go there fight with them, have fun with them,do watever u want. don t give any restriction to yourself. charu nivedita , the great liberal writer can t tolerate such situations.
பாமினி,
ஆம்ஸ்டர்டாம்
10.6.2010.
***
சாரு,
அருகதைப்பட்டதை விட அதிகமாய் விமர்சிக்கப்பட்டாலும், சாரு,விஜய்  டிவி போண்றவற்றின் நிரந்தரப்  பயனாளர் என்பதாலும் வினையாற்றுவதில் தவறில்லை என்பதாய் உணர்கிறேன்.
சாரு, நித்யானந்தா , விஜய் டிவி ஆகியவற்றை முன்னிறுத்தி செய்யப்படும் பெருவாரியான விமர்சனங்கள் பெருத்த ஏமாற்றத்தையே அளிப்பதாக உள்ளது. விமர்சனங்கள் வெறும் தட்டையான தனி மனிதத் தாக்குதலாகவும், ‘மடக்கி விட்டேன் பாரு ‘ என்று மொண்ணையாகக் கொக்கொரிப்பதாகவும் சுருங்கி விடுகிறது.
நித்யானந்தாவை அறிமுகப்படுத்தவோ, விளம்பரப்படுத்தவோ வல்லமை கொண்ட ஒரு நிறுவனம் அல்லது ஊடகம் என்ற வகையில் சாருவின் வலைத்தளம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை. நித்யானந்தாவே ஒரு பெரிய நிறுவனம்தான்.

சாருவின் வாச‌க‌ர்க‌ளோ த‌மிழ்த் திருநாட்டின் பெருவாரியான‌ ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌  ‌ரசனைக‌ளிலிருந்து மாற்று சிந்த‌னைகளுக்கும், மாற்று எழுத்துக்கும் வேண்டி சாருவையும் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள்.ஆக‌வே ஒரு த‌வ‌றான‌ த‌த்துவ‌த்தை சாருவினால் ‌தன‌து வாச‌க‌ர்க‌ள் மீது திணிக்க‌ முடியாது. சாரு எழுதும் எல்லாவ‌ற்றையும் படிப்ப‌வ‌ன் என்றாலும் கூட‌ சாருவின் மிக்க‌ மிகு க‌ருத்துக்க‌ளிலும் உட‌ன்பாடு
இல்லாத‌வ‌ன். இந்த‌ ‘க‌ட‌வுளை க‌ண்டேன் ‘ தொட‌ரையும், இன்ன‌ பிற‌ பாபா  தொட‌ர்க‌ளையும் , சாருவின் வைன்,பெண்,யாத்திரை ப‌ற்றிய‌ எழுத்துக்களைப்போல‌ வெகு லாவ‌க‌மாக‌வே எதிர் கொண்டேன். அத‌னால் எனக்கு ஏமாற்ற‌ம் இல்லை. இப்பொது குய்யோ, முய்யோ என்று குதிக்கும் ‌இவர்க‌ளில் எத்த‌னை பேர் சாருவின் இந்தத் ‌ தொட‌ர் கால‌த்தில் எதிர்வினை ஆற்றினார்க‌ள் என்று சாரு தெரிவிக்க‌ வேண்டும்.

விஜ‌ய் டிவி குறித்து:  ச‌ந்தேக‌ம் இல்ல‌மால் சாருவைப் போல த‌மிழின் சிற‌ந்த‌ டிவி.. Sterotype த‌மிழ் சேன‌ல்க‌ளுக்கு இடையில் கொஞ்ச‌ம் ச‌ந்தோச‌மாக‌ வைத்திருக்கும் ஒரே டிவி.  ஆனால், அற‌ம் ப‌ற்றிப்  பேச‌ அவ‌ர்க‌ளுக்கு எந்த‌ உரிமையும் இல்லை. கார‌ண‌ம் 12 ம‌ணிக்கு மேல் த‌மிழ‌க‌த்தின் மிக‌ப் பெரிய‌ திருட‌ர்க‌ளுக்கு புக‌ழூட்டும் ஊட‌க‌ வேலையையே அது செய்கிற‌து. ச‌ராச‌ரி ம‌னித‌னின்  செக்ஸ் பிரச்சினையையும், ப‌ய‌ங்க‌ளையும் காசாக்குகிற‌ மூலிகை ம‌ருத்துவ‌ர்க‌ள், ஜோதிட‌ வியாபாரிக‌ள், துர‌திர்ஷ்ட‌க்க‌ல் விற்ப‌னையாள‌ர்க‌ளுக்கு அது துணை போகிற‌து. என‌வே விஜ‌ய் டிவிக்கோ, ஆன்றணிக்கோ சாருவை விம‌ர்சிக்க‌வோ , ம‌ன்னிப்புக் கேட்க‌ வைக்க‌வோ அருக‌தை இல்லை.

நித்யான‌ந்தா , ஸேரோ, ப‌ப்புவைப் போல் சுவ‌ராசிய‌மாக‌ உங்க‌ள் ப‌க்க‌ங்க‌ளில் க‌ட‌ந்து போனார் என்ப‌தை விட‌ , எந்தத்‌ தாக்கீடும் த‌ர்க்க‌ ரீதியாக‌ சிந்திக்கிர‌ வாச‌க‌ர்க‌ளில் உண்டாக்கி இருந்திருக்க‌ முடியாது என்பதாகவே என‌தும் அனுமானம்.

ந‌ல்ல‌ ஆயுள் வேண்டிக் கொண்டு,
சிராஜ்
11.6.2010.
***

இதுபோல் இன்னும் ஒரு 50 கடிதங்களாவது இருக்கும்.  எல்லாவற்றையும் பதிவேற்றம் செய்ய இயலாது.  இத்துடன் நீயா நானா சர்ச்சையை முடித்துக் கொள்கிறேன். அதற்கு முன்னால் சில விஷயங்கள்:

பாமினி சொல்வது போல் பலரும், ‘வேண்டாம்; கலந்து கொள்ளாதீர்கள்’ என்று மிகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.  எனக்கு இது விஷயத்தில் ஒரு முடிவான கருத்தை எட்ட முடியவில்லை.  அதுவும் சரி, இதுவும் சரி என்றே குழப்பமாகத் தோன்றுகிறது.  மேலும், நீயா நானா கும்பல் என்னை இனிமேல் அழைக்காது என்பது நிச்சயம்.

ஆண்டனி என் மீது கொண்டிருக்கும் வன்மத்துக்கான காரணத்தை விஜய் டி.வி.யின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தெரிவித்தார்.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஆண்டனி பணம் எதுவும் தருவதில்லை என்ற விஷயத்தை நான் அம்பலப்படுத்தியதை விஜய் டி.வி.யின் நிர்வாகக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.  நம் சீர்திருத்தவாதி ஆண்டனி எல்லோருக்கும் பைசா கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கணக்கு காண்பித்து அதையெல்லாம் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வது நிர்வாகத்துக்குத் தெரிந்து ஆண்டனிக்கு அன்றைய தினம் விழி பிதுங்கியிருக்கிறது.  அந்த வன்மத்தையே அவர் என் மீது காண்பித்திருக்கிறார்.

இப்போதும் பாருங்கள்; எனக்கு 4000 ரூபாய்க்குக் காசோலை அனுப்பியிருக்கிறார்.  ஆனால் பவா செல்லத்துரைக்கு பட்டை நாமம்.  போன் செய்து கேட்டதற்கு “நீங்கள் ஆண்டனியின் நண்பர்; உங்களுக்கு எதற்கு பைசா?” என்று கேட்டாராம் ஆண்டனியின் உதவியாளர்.  என்னிடம் புலம்பித் தள்ளினார் பவா.  அந்த போன் உரையாடலை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

அடுத்தவன் காசை அபகரித்து வாழும் இப்படிப்பட்டவர்கள்தான் சமூக சீர்திருத்தம் பற்றி டாக் ஷோ நடத்துகிறார்கள்!

அது மட்டுமல்ல; மகேந்திரா எழுதியிருக்கும் அந்த உதாரணத்தையே நான் என் நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என்னைப் பொறுத்தவரை, நடுத்தெருவில் வைத்து ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்தது போலவே உணர்ந்தேன்.  அதே உணர்வை மகேந்திரா எழுதியிருக்கிறார்.  அதனால்தான் இப்போது வரிந்து வரிந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நான் ஒன்றும் ராம்ஜெத்மலானி அல்ல.  என்னுடைய இடம் எழுத்து.  பேச்சு என்று வந்தால் அப்படித்தான் ஒன்று கிடக்க ஒன்று பேசி வைப்பேன்.

இப்போதும் ஞாபகம் இருக்கிறது.  என் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் செல்ல வேண்டி வந்த போது நீதிபதி என்னிடம் என் முகவரியைக் கேட்டார்.  எனக்கோ என் முகவரி எப்போதுமே ஞாபகம் இருந்ததில்லை; இப்போது கூட.  நான் திருதிரு என்று முழித்ததும் அந்த நீதிபதி செம கடுப்பாகி விட்டார்.  நல்லவேளை, என் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைப் போடவில்லை.

ஆனால் இனிமேல் டி.வி. நிகழ்ச்சிகளில் இது போன்ற கெரில்லாத் தாக்குதல்களுக்கு எப்போதுமே தயாராக இருப்பேன்.

மாலா சொல்லும் சுஜாதா டாக் ஷோ பற்றி எனக்குத் தெரியாது.  நான் அப்போது தில்லியில் இருந்தேன்.  அப்போது எனக்குத் தமிழ்நாடு பற்றி எதுவுமே தெரியாது.  கவுண்டமணியைப் பார்த்து “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்ட ஆள் நான்.  தூர்தர்ஷனாவது, மண்ணாங்கட்டியாவது.  அது மட்டுமல்ல; பயங்கர திமிர் பிடித்தவனாகவும் இருந்தேன்.   ஒரு பிரபலமான தொலைக்காட்சியின் காலை வணக்கம் நிகழ்ச்சிக்கு அழைத்த போது “முதலில் ரஜினிகாந்தை அழையுங்கள்; அப்புறம் நான் வருகிறேன்” என்று சொன்னேன்.

இப்போது எனக்கு என்ன ஆயிற்று?  என் கருத்து பரவலாகச் சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்; அவ்வளவுதான் வித்தியாசம்.  மேலும், மாலா, சுஜாதாவைக் கேள்வி கேட்ட மடையர்கள் யாருமே அவருடைய கணையாழி கடைசி பக்கங்களைப் படித்திருக்க மாட்டார்கள்.  ஆனால் ஒன்று, முன்னாள் ஜெயகாந்தனிடம் இவர்கள் மாட்ட வேண்டும். கதற அடித்திருப்பார்.  நானும் அப்படித்தான் இருந்தேன்.  இந்த தியானம் யோகா எல்லாம் செய்துதான் இப்படி மிருதுவாக மாறி விட்டேன்.  என்ன செய்வது?

நித்தி மேட்டரை வைத்துக் கொண்டு என் மீது அவதூறு செய்பவர்கள் யாருமே என் வாசகர்கள் கிடையாது.  சந்தர்ப்பம் கிடைத்தால் எனக்கு தர்ம அடி கொடுக்க வேண்டும் என்று காத்திருந்த ரௌடிகளுக்கு இப்போது நானே ஒரு ஆயுதத்தை வழங்கி விட்டேன்.  அவ்வளவுதான்.  என் வாசகர்கள் என்னை விட புத்திசாலிகள்…
11.6.2010.
10.58 a.m.

Sunday 8 December 2013

மண்டையும் ஞானதிருஷ்டியும்

a prediction…November 12th, 2011
தேர்தல் நடப்பதற்கு முன்னதாக எல்லா பத்திரிகைகளும் திமுக வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது திமுகவுக்கு 30 சீட்டுக்குள்தான் கிடைக்கும் என்று எழுதினேன்.  உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது சொல்கிறேன்… இந்த முறை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும்.  எனக்கு இது எப்படித் தெரியும்?  தியானத்தில் கிடைத்த செய்தி.
பின் குறிப்பு:  இதற்கும் என்னுடைய அரசியல் கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…
மேற்கண்ட பதிவை 12-ஆம் தேதி எழுதினேன்.  அப்போது பலரும் கிண்டல் செய்தார்கள்.  இப்போது 16 தினங்களில் நான் சொன்ன வாக்கு பலித்திருக்கிறது.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று திருஷ்டியில் தெரிந்ததுமே வஸந்தி ஸ்டான்லிக்கு இது பற்றிக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
தாந்த்ரீகமும் மாந்த்ரீகமும் சரியாகப் பின்பற்றப் பட்டால் நமது திருஷ்டி கூர்மையாகும் என்பதற்கு இது எனக்கு இன்னும் ஒரு சான்று.
குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது நமது சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு.  நாளையே அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர் இதுவரை அனுபவித்த சிறைத் தண்டனைக்கும் அது அவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் துயரங்களுக்கும்  யார் பொறுப்பு?
கனிமொழியை வரவேற்கிறேன்.  சிறையில் அவர் தியானம் கற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளில் வாசித்தேன்.  அவர் அதை நிறுத்தி விடாமல் தொடர வேண்டும்…

Monday 2 December 2013

பாட்டா ஷூ...
April 19th, 2010

சில தினங்களுக்கு முன்பு பாலா போன் செய்தான்.  வயது 24.  என் மகன் கார்த்திக்கின் நண்பர்கள் அனைவரும் என்னை அங்கிள் என்று அழைப்பதால் அவர்களுடன் நெருங்க முடிவதில்லை.  ஆனால் பாலா அப்படி அல்ல.  பெயர் சொல்லியே அழைப்பான்.  இவ்வளவுக்கும் அவனுடைய அம்மாவின் மூலம் நண்பனானவன் பாலா. ஒருநாள் என் நண்பர் ஜோவுக்கு போன் செய்து செருப்பு வாங்க வேண்டும்; எங்கே போகலாம் என்று கேட்டேன்.  அவர் பாட்டா ஷோ ரூம் இருக்கும் இடத்தைச் சொன்னார்.  என் எழுத்தின் மிகத் தீவிர வாசகராக இருந்தும், ரெமி மார்ட்டின் குடித்தும், Calvin Klein ஆடைகள் அணிந்திருந்தும் இப்படி பாட்டா பெயரைச் சொல்லி விட்டாரே என்று அன்றைய நாள் முழுதும் எனக்கு விசனமாகப் போனது. எத்தனை முறை எழுதியிருக்கிறேன், எனக்கு இந்த ஹமாம் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், பனியன், பாக்கெட்டில் சொருகிய ரெனால்ட் பேனா போன்ற மிடில் க்ளாஸ் விஷயங்களெல்லாம் பிடிக்கவே பிடிக்காது என்று.  ஜோ மறந்து விட்டார். காரணம், வயது.  ஜோவின் வயது 35.  உடனே பாலாவுக்கு போன் செய்தேன்.  ஆழ்வார்ப்பேட்டையில் காப்லர் செல்லுங்கள் என்றான்.
சில தினங்களுக்கு முன்பு “இன்று ஐ.பி.எல். மேட்ச் இருக்கிறது; எங்கேயாவது போய் குடித்துக் கொண்டே மேட்ச் பார்க்கலாமா?” என்று கேட்டான் பாலா.    நான் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை என்பதால் இந்த ஐ.பி.எல். என்ற விஷயத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  ஆனால் பாலா பார்ப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்பதால் மாலை நான்கு மணிக்குக் கிளம்பினோம். பாலா ஷூ அணியாமல் வந்து விட்டதால் டென்.டௌனிங் செல்ல முடியவில்லை.  செருப்புக் காலோடு போவதானால் டாஸ்மாக்தான் போக வேண்டும்.  பிறகு யோசித்துப் பார்த்த போது செருப்புக் காலோடு அனுமதிக்கும் இடம் சவேரா ஓட்டலில் உள்ள மூங்கில் பார் தான் என்பது ஞாபகம் வந்தது.
பாலாவின் செருப்புக் காலைப் பார்த்ததும் இன்னொரு பாலா ஞாபகம் வந்தார்.  அல்மோஸ்ட் ஐலண்ட் கருத்தரங்கிற்காக தில்லி சென்ற போது அதே விமானத்தில் வந்த இயக்குனர் பாலா.  நான் கடவுளுக்காக ஜனாதிபதி விருது வாங்கச் செல்கிறார்.  அவருடைய செருப்புக் காலைப் பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  இப்படியேதான் ஜனாதிபதி மாளிகைக்கும் போவாரோ என்று நினைத்தேன்.  பிறகு புகைப்படங்களைப் பார்க்கும் போது ஜனாதிபதியிடம் விருது வாங்கும் போதும் அதே செருப்புக் கால்தான்.  அதோடு சட்டையில் வேறு இரண்டு பட்டன்களைத் திறந்து விட்டிருந்தார்.  கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.  அதிகாரிகளுக்காக நம்மை மாற்றிக் கொள்ளவே கூடாது.
மூங்கில் பாரில் தொலைக்காட்சிப் பெட்டி என் முதுகுப் பக்கம் இருக்குமாறு பார்த்து அமர்ந்து கொண்டு பாலாவிடம் “ஐ.பி.எல். மேட்சில் எத்தனை ஓவர்?” என்று கேட்டேன்.  அப்போது அந்தப் பக்கமாக வந்த பேரர் என்னை வெளிநாட்டுக்காரன் என்று நினைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் ஐ.பி.எல். பற்றி விளக்க ஆரம்பித்தார்.  ஐ.பி.எல். பற்றித் தெரியாதவர் நிச்சயமாக இந்தியராக இருக்க முடியாது என்ற அவருடைய எண்ணத்தை மெச்சிக் கொண்டே “நான் லோக்கல் மைலாப்பூர்காரன்தான்” என்றேன்.
***
இப்போதெல்லாம் அவ்வளவாக ராயர் கஃபே பக்கம் செல்வதில்லை.  கொழுப்பைக் குறைக்க கன்னாபின்னா என்று நடைப் பயிற்சி செய்து விட்டு ராயர் கஃபேயில் இட்லியாக முழுங்கினால் சரி வராது என்றுதான் அங்கே அடிக்கடி செல்வதில்லை.  சென்ற வாரம் ஒருநாள் காலையில் ஏழு மணிக்குச் சென்றேன்.  சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண், பார்த்த முகமாகத் தெரிந்தது.  பிறகு அவரே ஹலோ சொன்னதும் தெரிந்து விட்டது.  முன்னாள் நடிகை சங்கீதா.  அவர் பக்கத்தில் அவர் கணவர் சரவணன்.  இருவரையும் இரண்டொரு முறை தியான வகுப்புகளில் சந்தித்திருக்கிறேன்.  எனக்கு சங்கீதாவைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் விஜய்யின் ஞாபகம் வரும்.  பிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்க்கு நல்லதொரு திருப்பத்தைக் கொடுத்த படம் ’பூவே உனக்காக’.  அதில் விஜய்யின் ஜோடி சங்கீதா. அந்தப் படம் வந்து இந்தப் பதினான்கு வருடங்களில் விஜய்யின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.  விஜய்யின் வளர்ச்சியைப் போன்றதுதான் ஜெயமோகனின் வளர்ச்சியும்.  இப்படிப்பட்ட நடிகரும் இப்படிப்பட்ட எழுத்தாளரும் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.
ராயர் கஃபேயின் அன்றைய தினம் சோமனையும் சந்திக்க முடிந்தது.  அவரைப் பார்த்து நீண்ட காலம் ஆகிறது.  சங்கீதக் கலைஞர்.  சங்கீத விஷயங்களை அவர் பேசக் கேட்க வேண்டும். நேரம் போவதே தெரியாது.  கர்னாடக சங்கீதத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பிரசித்தி பெற்ற அத்தனை கலைஞர்களின் கச்சேரியையும் நேரிலேயே கேட்டிருக்கிறேன்.  நான் ஆழ்ந்து ரசித்து, ஆனால், எழுதாதமல் விட்டிருக்கும் விஷயங்களில் கர்னாடக சங்கீதமும் ஒன்று.  சோமன் கே.வி. நாராயணஸ்வாமியின் சிஷ்யர்.  கே.வி.என். அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் சிஷ்யர்.
அன்றைய தினம் சோமன் ஒரு விஷயம் சொன்னார்.  அய்யங்காரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஒருமுறை கேவிஎன் எங்கோ போய் விட்டாராம்.  இரண்டொரு தினங்களில் கே.வி.என். திரும்பி வந்த போது அய்யங்கார் தன் சுருக்குப்பையைத் திறந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து “பணம் வேண்டுமானால் என்னிடம் கேள்; எங்கேயும் போய் விடாதே” என்று சொல்லியிருக்கிறார்.  அய்யங்கார் எந்தக் காரணத்திற்காகவும் ஒரு தம்பிடிக் காசு செலவு செய்ய மாட்டார் என்பதும், 80 ஆண்டுகளுக்கு முன்பு 10 ரூபாய்க்கான மதிப்பு எவ்வளவு இருந்திருக்கும் என்பதும் இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள். குரு சிஷ்ய பாரம்பரியத்தின் அருமைக்கு இது ஒரு உதாரண சம்பவம்.
1938-இல் மியூசிக் அகாதமியில் அய்யங்கார் ஆற்றிய உரை அந்தக் காலத்தில் மிகவும் புரட்சிகரமான ஒன்று.
19.4.2010.
12.40 p.m.