Monday 14 January 2013

லாக்கப்பில் தள்ளுவேன் (May 20th, 2010)

போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர் என்னுடைய நெருங்கிய நண்பர். ஓரிரு முறை சவேரா ஓட்டல் மூங்கில் பாரில் சந்தித்திருக்கிறோம். ஆனால் எங்கள் பேச்சில் என் எழுத்து இடம் பெற்றதில்லை.  எப்போதும் பிஸியாகவே இருக்கும் அவர் என் எழுத்தைப் படிக்கக் கூடும் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை. சென்ற மாதம் ஒருநாள் போன் செய்து “இணைய தளத்தை இப்படி சும்மாவே போட்டு வைத்தால் என்ன அர்த்தம்? தினமும் காலையில் ஆஃபீஸ் வந்ததும் உங்கள் எழுத்தைப் படித்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடிகிறது” என்று சொல்லி என்னைத் திட்டிய போதுதான் அவர் என் எழுத்தின் தீவிர வாசகர் என்று எனக்குத் தெரிந்தது.
அவர் சென்ற வாரமும் போன் செய்து “விரைவில் கமிஷனர் பதவியை எதிர்பார்க்கிறேன்.  அப்படி ஆனதும் உங்களைப் பிடித்து லாக்கப்பில் தள்ளுவதுதான் முதல் வேலை” என்றார்.
“ஐயோ என்ன சார் இது? நித்யானந்தா மாதிரி நான் எந்தத் தப்பும் பண்ணவில்லையே?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.  அப்புறம் அவர் விளக்கியதும்தான் விஷயம் புரிந்தது.
என்னை லாக்கப்பில் தள்ளி ஒரு கம்ப்யூட்டரைக் கொடுத்து எழுத வைப்பாராம்.  சென்ற மாதம் அவர் என்னிடம் சொன்ன பிறகும் இணைய தளத்தில் எழுதாமலேயே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
”கம்ப்யூட்டரோடு சேர்த்து தினமும் கொஞ்சம் அப்ஸொலூட் வோட்காவும் அனுப்பி விடுங்கள்” என்றேன்.
நீங்கள் எழுதுவதாகச் சொன்னால் அதையும் செய்யத் தயார் என்றார்.  பிறகு ஒரு யோசனையும் தெரிவித்தார்.  ”மிகவும் அவசர வேலையாக இருந்தால் பழைய கட்டுரைகளையாவது பதிவேற்றம் செய்யுங்கள்; உங்கள் எழுத்தை இரண்டு முறை படிக்கலாம்; சுவாரசியம் குறையாது” என்றார்.
“I will do it, officer.”
***
20.5.2010.
8.54 a.m.

No comments:

Post a Comment