Friday 11 January 2013

ஆண்மை குறைவா உடனே படியுங்கள் எக்ஸைல்

சாரு எழுதிய எச்சகலை சாரி எக்ஸைல் வெளிவரும் முன்பு அதை ப்ரோமோட் செய்வதற்காக சாரு லேகியம் வக்குறவன் மாதிரி எப்படி கூவிக் கூவி விக்குதுன்னு பாருங்க.

எக்ஸைல் நாவலில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற விபரமும் இருக்கிறது என்று எழுதியது பலருக்கும் கடுப்பைக் கிளப்பி விட்டிருக்கும் போல. அப்படி நான் எழுதியது நாவலின் விற்பனை முயற்சிக்காக அல்ல. எக்ஸைல் நாவலில் அந்த விபரம் இருக்கிறது. அவ்வளவுதான். பணம் சம்பாதிப்பது எப்படி என்ற விபரத்தைக் கொண்ட ஒரு நூல் எப்படி ஒரு தேர்ந்த இலக்கியமாக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஒரே ஒரு விபரம். தெர்மோ டைனமிக்ஸ் பற்றித் தெரிந்து கொள்ளாமல் தாமஸ் பிஞ்ச்சோனின் gravity’s rainbow என்ற நாவலைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார்கள். நானும் படித்தேன். புரியவில்லை. பிறகு தெர்மோ டைனமிக்ஸ் பற்றி ஒரு பௌதிக அறிஞரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு க்ராவிட்டி’ஸ் ரெயின்போ படித்தேன். புரிந்தது. ஆக, ஒரு நாவலில் தெர்மோ டைனமிக்ஸ் இருக்கலாம்; சுய முன்னேற்ற விபரம் இருக்கக் கூடாதா? எக்ஸைலில் அது மட்டும் அல்ல; இந்தியத் தத்துவ இயலின் சாரமும் இருக்கிறது. சித்தர் மரபின் வரலாறும் இருக்கிறது. கருவூரார் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். சித்தர் மரபின் ரகசியங்கள் சில தமிழில் முதல் முறையாக எக்ஸைல் மூலம் வெளி வருகின்றன

மேலும், எக்ஸைலை நீங்கள் ஒரு சமையல் கலை புத்தகமாகவும் வைத்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கிய விஷயம். ஆண்மைக் குறைவுக்கு சிட்டுக் குருவி லேகியம் விற்பதைப் பார்த்து இருப்பீர்கள். உலகிலேயே மிகச் சிறந்த aphrodisiac செய்வது எப்படி என்ற விபரமும் எக்ஸைலில் உண்டு. ஆண்டாளின் பாசுரங்களில் காம ரஸம் கொட்டும் போது எக்ஸைலில் aphrodisiac செய்யும் முறை வரக் கூடாதா? இலக்கியம் என்றால் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது. களிமண் கூட ஒரு கலைஞனின் கையில் சிற்பமாக மாறுவதைப் போல், சமையல் குறிப்பும் வீரிய விருத்தி லேகியம் செய்வது எப்படி என்ற விபரமும் கூட கலையாக மாற்றம் எடுக்க முடியும். அதை நீங்கள் எக்ஸைலில் காணலாம். 

ஒருவேளை எக்ஸைல் இலக்கியம் அல்ல என்று நீங்கள் கருதினால், உங்களைத் தோற்கடிக்க அதில் அஞ்சலி என்ற கதாபாத்திரம் வருகிறாள். அவளை உங்களால் உங்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. இதிகாசங்களில் மட்டுமே அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை நீங்கள் பார்த்திருக்க முடியும். இப்போது இதைச் சொல்வது உயர்வு நவிற்சியாகத் தோன்றலாம். டிசம்பர் 6 வரை பொறுத்திருங்கள். இனிமேல் எக்ஸைல் பற்றி நான் பேச மாட்டேன். மற்றவர்கள் பேசுவார்கள்…

இதனால் எக்ஸைல் எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது ஒரு குப்பை என்று சொன்னால் அதைச் சொல்லவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சென்ற வருடம் எனக்கு அந்த மனப்பக்குவம் இல்லை. அதனால்தான் மிஷ்கினோடு மல்லுக்கு நின்றேன். இப்போது அய்யப்பன் என்னை மாற்றி விட்டார். மிஷ்கின், உங்களிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டு விட்டேன். டிசம்பர் 6-ஆம் தேதி காமராஜர் அரங்கம் வாருங்கள். பேசுங்கள். இந்த முறை உங்களுக்காக நானே கரகோஷம் எழுப்புகிறேன். படிக்க நேரம் இருக்கும் என்றால், உங்களுக்கு இப்போதே எக்ஸைல் நாவலின் கைப்பிரதி ஒன்றை அனுப்பி வைக்கிறேன். I miss you so much in my life. பழசை மறக்கும் பெருந்தன்மை உங்களிடம் உண்டு என்று எனக்குத் தெரியும்.

எனவே, மீண்டும் சொல்கிறேன். எக்ஸிலை நீங்கள் கொண்டாடலாம். ரசிக்கலாம். அல்லது, காலில் போட்டு மிதித்துத் துவைக்கலாம். இரண்டையும் வரவேற்கிறேன்… டிசம்பர் 6 வரை காத்திருங்கள்


 

No comments:

Post a Comment