Sunday 13 January 2013

உங்கள் மகளைப் பார்த்து விட்டீர்களா?

எழுதுவது என்பது இவ்வளவு பெரிய போராட்டமாக இருந்தாலும் ஏன் எழுதுகிறேன் , அதுவும் ஒரு நாளில் 18 மணி நேரம் , 20 மணி நேரம் என்றால் , தன்யாவின் கடிதத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். அந்த உணர்வை ecstasy என்றோ frenzy என்றோ சொல்லலாம். தமிழில் சுமாராக பரவசம் என்கலாம். இந்த உணர்வு எனக்கு எழுத்திலும் , வாசிப்பிலும் கிடைக்கிறது என்பதாலேயே இத்தனை மணி நேரம் இதில் ஈடுபடுகிறேன்.
எனக்கு எழுதுவதை விட வாசிப்பதுதான் அதிகம் பிடிக்கும். ஆனால் இப்போது என் மனம் பூராவும் கதைகள் கொட்டிக் கிடப்பதால் அதையெல்லாம் தீர்த்துக் கட்டி விட்டுத்தான் வாசிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.
இப்போது அடுத்த கேள்விக்கு வருவோம். உங்கள் மகளைப் பார்த்து விட்டீர்களா ?
எந்த மகளைக் கேட்கிறீர்கள் ? எனக்கு ஏகப்பட்ட மகள்கள் உண்டு. ஏன் , உத்தமத் தமிழ் எழுத்தாளனின் மகளைக் கூட என்னுடைய மகளாகவே கருதுவேன் ; அவளிடம் அவள் அப்பனிடம் உள்ள வக்கிரமெல்லாம் இல்லாதிருந்தால். ஆனால் அவள் ஒரு நல்ல பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் , அயோக்கியர்களுக்கு நல்ல குழந்தைகளே பிறப்பர். பல இடங்களில் இப்படிப் பார்த்திருக்கிறேன். அரசியலை விட்டுத் தள்ளுங்கள். அது ஒரு விதி விலக்கே இல்லாத சாக்கடை. நான் நம்மைப் போன்ற மனிதர்களைப் பற்றிப் பேசுகிறேன்.
உதாரணம் , கார்த்திக். என் அனுபவத்தில் நான் பார்த்த அற்புதமான மனிதன். ஆனால் அவனுடைய biological தகப்பன் ஒரு அயோக்கியன். அவந்திகா கார்த்திக்கை உண்டாகியிருக்கும் போது மாட்டை அடிப்பது போல் அவளை அடித்திருக்கிறான். அவனுடைய நோக்கம் அவளையும் அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அடிப்பானாம். அலுவலகத்திலிருந்து வரும் அவளுக்கு
வீட்டைத் திறந்து விடாமல் “ எவனோடு படுத்து விட்டு வந்தாய் ? ” என்று திட்டி விட்டு உள்ளே போய் விடுவானாம். வெளியில் உள்ள வாசற்படியிலேயே இரவு ஒன்பது வரை அழுதபடி அமர்ந்திருப்பாள் அவந்திகா. இவனுக்குப் பயந்து கொண்டு எதிர் வீட்டுக்காரர்கள் இவளுக்குக் கொஞ்சம் பச்சைத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள்.
பிறகு ஒன்பது மணி அளவில் எதிர்வீட்டுக் காரர்கள் , பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து ” புள்ளத்தாச்சிக்காரிப்பா , கொஞ்சம் கதவத் தொறந்து வுடுப்பா தம்பி ” என்று கெஞ்சிய பிறகுதான் திறந்து விடுவான். சாப்பாடு போட்டால் சாப்பாட்டோடு சேர்த்து தட்டை அவள் மூஞ்சியில் விட்டு எறிவான், ” எவனை நினைத்துக் கொண்டு சமைத்தாய் ? ” என்று கேட்டபடி. அவனுடைய துணிமணிகளையும் அவள்தான் துவைக்க வேண்டும். வாஷிங் மெஷினெல்லாம் கிடையாது. அவனோ ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். வண்டி வண்டியாக வந்து விழும் துணி.
அவந்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது ஒருநாள் அவளை வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறான். மறுநாள் அவனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து ஒரு வாரம் மருத்துவமனையில் கிடந்து இறந்து போனான். அவனை அவனுடைய வெறுப்பே கொன்றது. அதனால்தான் நான் வெறுப்பு என்ற விஷயத்திலிருந்து விலகி நிற்கிறேன். அதனால்தான் உத்தமத் தமிழ் எழுத்தாளன் மீதும் பரிதாபம் கொள்கிறேன். அவனை வெறுப்பு என்ற நோய் முழுமையாகப் பீடித்திருக்கிறது.
அது போகட்டும். அப்பேர்ப்பட்ட ஒரு குரூரமான மனிதனுக்குப் பிறந்த என் மகன் கார்த்திக் ஒரு ஈ எறும்பைக் கூட கொல்ல மாட்டான்.
( அவந்திகாவின் வாழ்க்கை பற்றி விரிவாக ஸீரோ டிகிரியில் உண்டு; இ-புக்காகவோ அல்லது வேறு எப்படியோ வாங்கிப் படியுங்கள்).
மகள் பற்றிச் சொல்ல வேண்டும் இல்லையா ? என் தம்பி மகள் ஜனனியும் என் மகளைப் போலத்தான். இப்படி ஒருமுறை அவளை யாரிடமோ அறிமுகப்படுத்தியதற்காக என்னை செம திட்டு திட்டினாள் ஜனனி. ‘ போல ’ என்று சொல்லக் கூடாதாம்.
பத்து ஆண்டுகளாக அவள் என்னைப் பார்க்காமல் தனிமைப்படுத்தப் பட்டாள். என்னை என் குடும்பத்தினருக்குப் பிடிக்காது என்பதுதான் ஒரே காரணம்.
எப்படிப் பிடிக்கும்? என் தங்கை வந்து கேட்பாள், “எப்போண்ணே சீரியலுக்கெல்லாம் கதை வசனம் எழுதுவீங்க? ”
“நீ என்ன, நாகூரில் இருந்த மாதிரி இன்னும் எருமைப் புத்தியோடே இருக்கே? ” இது நான்.
இதிலிருந்து என்னை குடும்பத்தில் நடக்கும் அடுத்த கல்யாணம் அல்லது அடுத்த மரணம் வரை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அதிலும் என் தம்பி அவனுடைய மனைவியின் மரணத்துக்குப் பிறகு ஒரு பிசாசை (அப்படித்தான் ஜனனி அவள் சித்தியை அழைக்கிறாள்) கல்யாணம் செய்து கொண்டதிலிருந்து ஜனனி ஏதேதோ ஊர்களில் ஏதேதோ ஹாஸ்டல்களில் தங்கி அனாதையைப் போல் படித்துக் கொண்டிருந்தாள்.
நான் வளர்க்கிறேன் என்று சொன்னதற்கும் என் தம்பி ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அவளை நான் பத்து ஆண்டுகளாகவே பார்க்க முடியாமல் இருந்தது.
ஜனனியும் குடும்பத்திலுள்ள தடையை மீறி என்னுடன் பேசும் அளவுக்கு அப்போது துணிச்சல் உள்ளவளாக இல்லை. இடையில் ஏதோ ஒரு திருமண வைபவத்தில் கும்பலோடு கும்பலாகப் பார்த்ததுதான்.
இப்போது வளர்ந்த பெண்ணாக ஆகி விட்டதால் குடும்பத்தின் தடையை மீறுவதென்று முடிவு செய்து ஒருநாள் எனக்கு போன் செய்தாள். அவளுக்குக் கைத்தொலைபேசியும் வாங்கிக் கொடுக்க அவளுடைய சித்தி சம்மதிக்கவில்லை.
( ‘ அந்தத் தேவுடியா யாரையாவது முஸ்லீம் பையனை இழுத்துக் கொண்டு ஓடிடுவா ’ ).
( ‘ ஆமா, ஒரு நாளைக்கு நூறு தடவையாவது அவ என்னைத் தேவுடியான்னு சொல்லாம் இருக்க மாட்டா ’ )
தன் தோழியின் கைத்தொலைபேசியின் மூலம் பேசினாள். கல்லூரிக்கு வரச் சொன்னாள்.
பெண்கள் கல்லூரிக்குள் சென்று 35 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். திருச்சியில் படித்த போது ஹோலி க்ராஸ் கல்லூரிப் பக்கம் சென்றிருக்கிறேன். அவ்வளவுதான்.
ஏதோ உலக அழகிப் போட்டியில் முதல் பரிசு வாங்குபவர்களைப் போல் இருந்தாள்.
“என்னடி இது, இவ்ளோ அழகா இருக்கே? நான் எதிர்பார்க்கவே இல்லையே? ”
” அப்படியா சொல்றீங்க? அவ்வளவா அழகா இருக்கேன்? ”
“ஆமாம் செல்லம்...உன்னை அந்தக் கல்யாணத்தில் பார்த்தபோது நீ இப்படித் தெரியவில்லையே? ”
“எனக்கு நம்முடைய உறவினர்களைப் பிடிக்காது. அதனால் ‘ டல் ’ லாக இருந்திருப்பேன். அதனால் அப்படித் தெரிந்திருக்கும்... ”
” இருந்தாலும் என்னால் நம்பவே முடியவில்லை...பசங்கள்ளாம் துரத்தித் துரத்திக் கொண்டு வருவான்களே? ”
“பசங்க வந்தா கூட பரவால்லியே; இந்த லெஸ்பியன்ஸ் தொல்லைதான் தாங்க முடியவில்லை...: ”
வீட்டுக்கு வந்தோம். பேசிக் கொண்டிருந்தோம். சித்தி கதைதான். எப்போது பார்த்தாலும் “வெளியே போடி தேவுடியா ” என்று சொல்கிறாளாம்.
“ரொம்ப நல்லதாப் போச்சு...இங்கே நம் வீட்டுக்கு வந்து விட வேண்டியது தானே? ”
அதற்கு அவள் தந்தை ஒத்துக் கொள்ளவில்லையாம். ஹாஸ்டலும் வேண்டாம் என்கிறானாம் என் தம்பி.
“ஏன்? ”
“கெட்டுப் போய் விடுவேனாம். ”
என் இணைய தளத்தைப் படிக்கிறாள். ” உங்கள் எழுத்து என்றால் எனக்கு உயிர்... ஆமாம்; என்னுடைய மார்க்கை ஏன் நீங்கள் கேட்கவே இல்லை? ” என்று கேட்டாள் சிரித்துக் கொண்டே.
” பொதுவாக நான் யாரிடமும் மார்க் கேட்க மாட்டேனே கண்ணே? ”
“அது தெரியும் எனக்கு. ஆனால் நான் உங்களுடைய செல்ல மகள் இல்லையா? என்னிடம் கேட்க வேண்டாமா? ”
அவளிடம் கேட்காததற்குக் காரணங்கள் பல இருந்தன. சித்தி கொடுமை தாங்காமல் அவளுடைய அண்ணன் வீட்டை விட்டே ஓடி விட்டான். இப்போது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை.
அப்படியெல்லாம் வீணாகி விடாமல் உருப்படியாகப் படித்து இப்போது கல்லூரி வரை வந்துள்ள ஒரு பெண்ணிடம் எப்படி என்னால் மார்க் கேட்க முடியும் என்பதை அவளிடம் சொன்னேன்.
“ம்...கேட்டிருக்கலாம் ” என்றாள் குறும்புச் சிரிப்புடன்.
“என்னடி சிரிக்கிறே? என்ன விஷயம்? ”
சென்ற ஆண்டு பேப்பரை எடுத்துப் பாருங்கள். அதில் என் போட்டோ இருக்கும். ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட். ஸ்கூலிலும் நான்தான் ஃப்ர்ஸ்ட். ”
” ஆகா...உன்னை இப்போது முத்தமிட வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் வளர்ந்து விட்டாயே கண்ணே... ”
ஜனனியும் அவளுடைய அம்மாவைப் போலவே என்னை எந்த விதமாகவும் அழைத்துப் பேசுவதில்லை என்பதை கவனித்தேன். அவளுடைய அம்மா என்னை நேரில் எப்படியும் அழைப்பதில்லை. மற்றவர்களிடம் ‘ அண்ணன் ’ என்று குறிப்பிடுவாள்.
அதைப் போலவே ஜனனியும் என்னைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிடும்போது ‘ பெரிய நைனா ’ என்றும், என் அருகில் இருக்கும்போது எந்த விதமாகவும் அழைக்காலும் இருக்கிறாள்.
ஜனனிக்கும் அவள் அம்மாவுக்கும் இன்னொரு ஒற்றுமை இருந்தது. ஜனனியைப் போலவேதான் அவளுடைய அம்மாவும் 35 ஆண்டுகளுக்கு முன்னால் தன் சொந்த அம்மாவிடம் பட்ட கஷ்டத்தை என்னிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறாள். அதே வார்த்தைகள். அதே கஷ்டங்கள்...
இதுதான் நான் என் மகளைச் சந்தித்த கதை...
ஆனால் எனக்குப் பிறந்த என் சொந்த மகளை நான் என் வாழ்நாளில் சந்திக்க மாட்டேன். சந்திக்கவும் விரும்பவில்லை. அவளை நான் disown செய்து விட்டேன். காரணம்? ஏற்கனவே சொன்னதுதான். அயோக்கியனுக்கு நல்ல பிள்ளை பிறக்கும். நல்லவனுக்கு?
அவந்திகாவின் முதல் கணவனையும் மிஞ்சக் கூடிய வகையில் குரூரமாகவும், வக்கிரமாகவும் என் மகள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். அது பற்றி நாளை, விரிவாக.
6.7.2008.
3.00 p.m.
---------------------------------------------------------------
னனியைச் சந்தித்த போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொல்ல மறந்து போனேன்.
இதுவரை என்னுடைய சாப்பாட்டு மேஜையில் என்னைத் தவிர வேறு யாரும் என்னோடு அமர்ந்து சாப்பிட்டதில்லை. விஷாலோடு ஓரிரு முறை சாப்பிட்டு இருக்கிறேன். என் குடும்ப உறுப்பினர்களோடு அப்படிச் சாப்பிட்டதில்லை. அவந்திகா , கார்த்திக் இருவரின் சாப்பாட்டு நேரமும் என்னுடைய சாப்பாட்டு நேரமும் ஒத்து வராது என்பதே காரணம். என்னுடைய நேரம் ஏழரை , பனிரண்டரை , ஏழரை. அவர்களுடைய நேரம் பதினொன்றரை , மூன்றரை , பத்தரை. ' இப்படி இரண்டு ஹிப்பிகளோடு வாழ வேண்டியிருக்கிறதே ' என்று புலம்பியபடி "ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படி அனாதையைப் போல் தினம் தினம் தனியாகச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பேனா ?" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவேன்.
அதோடு என் அம்மாவைத் தவிர வேறு யாரும் எனக்கு சாப்பாடு பரிமாறியதும் இல்லை. எனக்கு யாரேனும் சாப்பாடு பரிமாறினால் அது பிடிக்கும். அவந்திகாவிடம் கேட்டால் ' சமைப்பதே பெரிய விஷயம் ; இதில் பரிமாறவும் வேண்டுமா , போய்யா ' என்று சொல்லி விடுவாள்.
அன்று ஜனனி என் வீட்டுக்கு வந்த போது அவந்திகா அலுவலகம் சென்றிருந்தாள். பனிரண்டரைக்கு எனக்குப் பசி மணி அடித்தது.
ஜனனியிடம் "சாப்பிடலாமா ?" என்று கேட்டேன். "ஓ , சாப்பிடலாமே" என்றாள் உடனடியாக. "பொதுவாக எத்தனை மணிக்கு சாப்பிடுவாய் ?" என்று கேட்டேன். "பனிரண்டரைக்குப் பசிக்கும் ; ஆனால் இரண்டு மணிக்குத்தான் அந்தப் பிசாசு சமைத்து முடிக்கும்" என்றாள்.
முதல் முதலாக எனது சாப்பாட்டு மேஜையில் இன்னொரு மனித ஜீவி. எனக்குச் சாப்பாடு பரிமாறி விட்டுத் தானும் போட்டுக் கொண்டாள் ஜனனி.
இப்படிப் பல விஷயங்களில் என்னைப் போலவே இருந்தாள் அந்த அழகு தேவதை.

என் மகள் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் ஒரு பக்கம் இருக்கும். எனக்கு அவ்வப்போது வருமே ஆபாச வசை கடிதம், அதைப் போல் இருந்தது அந்தக் கடிதம். நீ ஒரு குடிகாரன், ஸ்த்ரீ லோலன், ஆபாச எழுத்தாளன், உன்னுடைய ஸீரோ டிகிரி ஒரு போர்னோ (இரண்டு பக்கத்துக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை), நீ ஒரு பெண்ணை ரேப் பண்ணியிருக்கிறாய் என்று பல விதமான புதிய செய்திகள் இருந்தன அதில்.
அவள் பெயரில் வேறு யாரோ அனுப்பிய மெயில் அல்ல அது. விஷயம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் அவள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினாள். என்னைச் சந்திக்கக் கூட முயற்சி செய்யாமல் மகள் மகள் என்று என்ன ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அதில் கண்டிருந்தது.
நான் என்னுடைய நிலையை விளக்கிப் பதில் எழுதினேன். அதாவது, மகளைப் பார்க்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போது “நீர் உமது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இருக்கிறீர் என்று தெரிகிறது. நீர் விரும்பினால் இது பற்றி உமது மகள் நீதி மன்றத்தில் சாட்சி கூறத் தயாராக இருக்கிறாள் ” என்று பதில் நோட்டீஸ் வந்தது.
அந்த நிமிஷத்திலிருந்தே என் மகளைச் சந்திக்கும் ஆசையை விட்டு விட்டேன். சிறைச்சாலைக்குப் பயந்து அல்ல; அப்படி சாட்சி சொன்னால் பின்னாளில் என் மகள் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகலாம்; அல்லது, மனப் பிறழ்வு ஏற்பட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைக்கப்படலாம்.
இப்படியாக என் மௌனத்தின் மூலம் என் மகளின் வாழ்வையும், உயிரையும் நான் காப்பாற்றினேன்.
இதையும் அவளிடம் சொன்னேன். “நல்ல வேளை; அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து நான் அப்படிச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ” என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பினாள். அந்தக் குறுஞ்செய்தி இன்னமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
தான் என்னைத் தொடர்பு கொண்ட விஷயம் பற்றி யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்றும், எதிலும் எப்போதும் எழுதி விடவும் கூடாது என்றும் சத்தியம் வாங்கியிருந்தாள்.
அதனாலேயே இது பற்றியெல்லாம் நான் வாயையே திறக்காமல் இருந்தேன். தினம் ஒரு 50 குறுஞ்செய்திகள் வரும். இப்படியெல்லாம் அனுப்பினால் பிறருக்குத் தெரிந்து போய் மீண்டும் நம்முடைய தொடர்பு விட்டுப் போகும் என்று எச்சரிக்கை செய்தேன். என் அம்மா ஒரு தெய்வம் என்று பதில் வந்தது. வாயை மூடிக் கொண்டேன்.
சன் தொலைக்காட்சியில் தன்னுடைய பேட்டி வருவதை ஒரு டஜன் தடவை நினைவு படுத்தினாள்.
இடையில் ஒரு குறிப்பு: என்னை ஒரு முறை கூட அப்பா என்னை அப்பா என்று அழைக்கவில்லை. அது பற்றி நான் கவலையும் படவில்லை. இது பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையை நான் தாண்டியிருந்தேன்.
பிறகு திடீரென்று குறுஞ்செய்தி நின்று போனது. நானும் தொடர்பு கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மேற்கண்ட ஆபாச வசைக் கடிதம் அவளிடமிருந்து வந்தது.
இப்படி அவளிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டு இப்போது இதை ஏன் பகிரங்கமாக எழுதுகிறேன் என்று ஒருவர் என்னைக் கேட்கலாம். சத்தியம் என்பதற்கு இரண்டு பேர் நட்புடன் இருக்கும் வரைதான் அர்த்தம் இருக்க முடியும். நட்பு முறிந்து போனால் சத்தியமும் முறிந்து போகும். அவ்வளவுதான்
இந்த ஒரு பக்கக் கடிதத்திற்கு நான் 200 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை பதிலாக எழுதி வருகிறேன். இந்த நாவலில் வரும் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் (ஒரு பெண், ஒரு ஆண், ஒரு குழந்தை) ஒரே விஷயத்தை அவரவர் கோணத்தில் சொல்வதாக அமையும். கிட்டத்தட்ட அகிரா குரஸவாவின் ரஷோமான் பாணியில் இருக்கும்.
பாபாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என் மகளின் மீது எனக்கு ஒரு தீராத பாசமும் பிணைப்பும் ஏக்கமும் இருந்தது. அது தொடர்ச்சியான உள்வலியாகவும், வேதனையாகவும் என்னைத் தின்று கொண்டேயிருந்தது. இப்போது அந்த வலி போய் விட்டது; எனக்கு அப்படி ஒரு மகள் இல்லை என்ற தெளிவு பிறந்து விட்டது.
* * *
6.7.2008.
7.00 p.m.


1 comment:

  1. Okkalamvanga450@@gmail.com ஒக்க அட்கள் தேவை விரைத்தா சுன்னிய்யா okka pundai thavai

    ReplyDelete