Wednesday 30 January 2013

மழையா பெய்கிறது?

இரவு பனிரண்டு மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது.  தண்ணி அடித்து விட்டுப் படுத்தாலும் நான்கு மணிதான்.  ஒருக்கணம் ‘என்னடா வாழ்க்கை இது?’ என்று தோன்றும்.  ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளில் 24 மணி நேரம் என்றால் இப்படி நான்கு மணிக்கு எழுந்து கொள்வதால் நமக்கு 30 மணி நேரம் கிடைத்தது போல் இருக்கும்.  அதனால்தான் ஆண்டுக்கு பத்து புத்தகங்களை எழுத முடிகிறது.  இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எனக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு.  இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமை உண்டு. நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்காதீர்கள்.
என்னுடைய எழுத்து எக்காரணம் கொண்டும் நாட்குறிப்பாக ஆகி விடக் கூடாது என்று கவனமாக இருப்பேன். ஆனால் அதையும் மீறி ஓரிரு சமயங்களில் அப்படி ஆகிவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.  அப்படி ஒருநாள் நேற்று.  வழக்கம் போல் நேற்றும் நான்கு மணிக்கே எழுந்தேன்.    ஆனால் காலையில் எழுந்ததும் வழக்கமாகச் செய்யும் ஆயில் புல்லிங், தியானம் போன்ற எந்த வேலைகளையும் செய்யவில்லை.  மெரீனா பீச்சுக்கு வாக்கிங் செல்லவில்லை. (வாக்கிங் செல்லும் போது ஒரு குழப்பம்.  காலை ஐந்தரைக்கு சரியாக விவேகானந்தர் இல்லம் அருகே நான் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஒரு நடிகை முழங்கால் வரை நீளும் ட்ரௌசர் போட்டுக் கொண்டு வாக்கிங் செல்கிறார்.  ஆனால் யார் என்று எனக்குத் தெரியவில்ல. ஆனால் நடிகைதான்.) மெரினா வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆறரை ஆகியிருக்கும்.  அதன்பிறகு பப்பு, ஸோரோவை வாக்கிங் அழைத்துச் செல்வேன். அந்த வேலையும் செய்யவில்லை.
எழுந்ததும் கணினியின் முன்னால் அமர்ந்து டைப் செய்ய ஆரம்பித்து விட்டேன்.  செமத்தியான கோடை மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.  அதுவும் கோடை மழை அக்னி நட்சத்திரத்தில் பெய்தால் ரொம்ப அதிர்ஷ்டம்.  பின்னி எடுத்துக் கொண்டிருந்தது மழை.  ஆனால் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.
சாலக்குடியில் நின்ற போது ஒரு பத்திரிகைக்காக ஒரு பெண் என்னைப் பேட்டி எடுத்தார்.  காலை உணவை சாப்பிட்டுக் கொண்டே (எனக்குப் பிடித்த புட்டு, கடலை) பேட்டி கொடுத்தேன்.  பிறகு உடனே போராட்டக் களத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் கேள்விகளை மின்னஞ்சல் செய்யச் சொல்லி விட்டு வந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு என் பதில்களை அனுப்பி வைக்க வேண்டும்.  ஒவ்வொரு கேள்விக்கும் என் பதில்கள் இரண்டு இரண்டு வரிகளே இருந்தன.  என்றாலும் அதற்காக மிகவும் யோசிக்க வேண்டியிருந்தது.
மாத்யமம் பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள்.  அதையும் நேற்று மதியமே அனுப்ப வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்மை கட்டுரை பாதியிலேயே தொங்கிக் கொண்டிருந்தது.  எந்தப் பத்திரிகைக்கும் தாமதமாக அனுப்புவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.  அந்தத் தவறை நான் ஒருமுறை கூட செய்ததில்லை. இவ்வளவு வேலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டியிருந்ததால் நேற்று பெய்த கோடை மழையைக் கூட ரசிக்க முடியவில்லை.
இதற்கிடையில் தூர தேசம் ஒன்றிலிருந்து அழைத்த தோழி “கோடை மழையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று வேறு கேட்டு வெறுப்பைக் கிளப்பினார்.
சில சமயங்களில் என் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது மழையில் சென்னை பூராவும் மிதந்து கொண்டிருப்பது கூடத் தெரியாது.  ஒருமுறை இரண்டு தினங்கள் அறைக்குள்ளேயே கிடந்து எழுதிக் கொண்டிருந்த போது ஹமீது போன் செய்தார்.
“மதியத்துக்குள் எழுதி முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்; நேரில் வருகிறேன்; பேசலாம்” என்றேன்.
”என்னது, நேரில் பேசலாமா?”
”ஏன், என்ன விஷயம்?”
”நீங்கள் வெளியூரில் – கேரளாவில் – இருக்கிறீர்களா?”
”இல்லையே, வீட்டில்தான் இருக்கிறேன்.”
”அப்படியானால் உங்களுக்கு விஷயம் தெரியாதா?”
“என்ன விஷயம்?”
”என்னங்க இது, ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது. உங்களுக்குத் தெரியாதா?”
”என்னது, வெள்ளமா? மழையா பெய்கிறது?”
ஹமீது அதற்கு மேல் பேசவில்லை; இணைப்பைத் துண்டித்து விட்டார்.
சத்தியமாக இப்படித்தான் நடந்தது.  நம்ப முடியாவிட்டால் ஹமீதிடம் கேட்டுப் பாருங்கள்.
20.5.2010.
10.28 a.m.

No comments:

Post a Comment