Thursday 24 January 2013

போன வருட ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் மண்டையின் காமெடி

நாலைந்து நெருங்கிய நண்பர்களுக்கு போன் போட்டு திங்கள்கிழமை சென்னைப் பல்கலைக்கழகம்  lingua fest -இல் என்னுடைய பேச்சைக் கேட்க வருகிறீர்களா என்று கேட்டேன்.  அந்த ஐந்து பேருமே திங்கள் கிழமை காலை விடுப்பு கிடைப்பது கடினம், ஸாரி என்று சொல்லி விட்டனர்.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஒரு மாலை விருந்தின் போது சேட்டன் பகத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்.  மறுநாள் காலை பத்து மணிக்கு Front Lawns இல் நானும் கவிஞர் சேரனும் காஷ்மீரைச் சேர்ந்த சித்தார்த்தா கிகூ, பாங்க்ளா தேஷைச் சேர்ந்த தஹ்மிமா ஆனம் ஆகியோரின் அமர்வு இருந்தது.  ஜெய்ப்பூர் விழா நடந்த டிக்கி அரண்மனையில் அந்த front lawns தான் மிகப் பெரிய இடம்.  சுமார் 2000 பேர் கொள்ளளவு.   அதே நாள், அதே நேரத்தில் சேட்டன் பகத்தின் அமர்வும் இருந்தது.  அது mughal tent.  அதன் கொள்ளளவு 1000.  எனக்குக் கொஞ்சம் பயம்.  சேட்டன் பகத் இந்தியாவில் பிரபலமான பெயர் என்பதால் எல்லா கூட்டத்தையும் அவர் அள்ளிக் கொண்டு போய் விடுவாரோ என்று.  அதை அவரிடம் சொன்னேன்.  அதற்கு அவர் “நான் உங்களைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறேன்…  என்ன பேச்சு பேசுகிறீர்கள்?” என்றார் என்னிடம்.  என்னுடைய ப்ரூஃப் ரீடராக மாறி இருக்கும் எளுத்தாளருக்கு இது சிரிப்பை வரவழைக்கும்.  ஆனால் மறுநாள் அதுதான் நடந்தது.  front lawns-இல் இடம் போதாமல் வெளியே இருந்த டிவி திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அது மட்டும் அல்ல.  அதே தினம் 11 மணிக்கு இன்னொரு அமர்வு பாமா மற்றும் நமீதாவுடன் (இது வேறு நமீதாங்க)  இருந்தது.  முதல் அமர்வு 11 மணிக்கு முடியாததால் என்னைக் கையைப் பிடித்து அவசர அவசரமாக அடுத்த அமர்வுக்கு அழைத்துச் சென்றார் விழா அமைப்பாளர்களில் ஒருவர்.  அப்போது ஒரு இளம் பெண் அவசர அவசரமாக ஓடி வந்து “நான் உங்களுடைய தீவிரமான ரசிகை…  இந்த அமர்வு முடிந்ததும் அடுத்த அமர்வில் நீங்கள் பேசப் போவதைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே என்னோடு வேக நடையில் வந்து கொண்டிருந்தார்.
அடுத்த அமர்வில் நான் “இங்கே வந்திருக்கும் எழுத்தாளர்களெல்லாம் ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ், ஸெய்ண்ட் ஸ்டீஃபன்ஸ் போன்ற இடங்களில் பேராசிரியர்களாக இருப்பவர்களாக இருக்கிறார்கள்.  எனக்கு இது பயத்தை ஏற்படுத்துகிறது…  ஏனென்றால், நான் ஒரு கல்லூரி ட்ராப் அவுட்” என்றேன்.   உடனே ஒரு பெண் எழுந்து “thats why we like you charu…” என்று கத்தினார்.  என்னோடு ஓடி வந்த அதே பெண்.  ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்திருந்த வட இந்தியப் பெண்.   (சும்மா புருடா விடவில்லை… இந்த இணைப்பில் அந்த விடியோவை நீங்கள் காணலாம்…
அந்த அமர்விலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.  பலரும் இடம் இல்லாமல் வெளியே திரையில்தான் பார்த்தார்கள்.  அப்போதுதான் நான் ஒரு crowd puller என்று நினைத்தேன்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் உலகம் பூராவிலிருந்தும்  262 எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள்.  அதில் அடியேனுக்கு மட்டுமே மூன்று அமர்வுகளில் பேச வாய்ப்பு அளிக்கப் பட்டிருந்தது
ஆனால் இப்போது தமிழ்நாடு வந்ததும் crowd puller பற்றி ஐயம் வந்து விட்டது.  யாரைக் கேட்டாலும் திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு இலக்கியமா என்று அலறுகிறார்கள்.  300 பேர் அமரக் கூடிய அரங்கில் 30 பேருக்கு எப்படி லெக்சர் பண்ணுவது என்று குழம்புகிறேன்.  எது எப்படியோ, மார்க்கி தெ ஸாத்-இலிருந்து மிஷல் ஃபூக்கோ, மிஷல் வூல்பெக் வரை பேசி விடலாம் என்று முடிவு.  இது சம்பந்தமாக இன்று யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு அபூர்வமான விஷயம் கண்ணில் தென்பட்டது.  காமரூப கதைகள் நாவலில் பக்கம் 268-இலிருந்து 274 வரை விக்தோர் யூகோ எழுதிய hunch back of notre dame  நாவலின் இசை நாடகத்தைப் பற்றி (notre dame de paris : musical) எழுதியிருக்கிறேன்.  அப்படியே உள்ளத்தை உருக்கும் இசையும் நடிப்பும்…  நீங்களும் பாருங்கள். http://www.youtube.com/watch?v=aBXeXBpTVOk
எல்லோரும் காமரூப கதைகளைப் படித்ததோடு நிறுத்தி இருப்பார்கள்.  நாவலிலேயே இந்த இசை நாடகத்தின் லிங்கைக் கொடுத்திருக்கிறேன்.  யாரேனும் பார்த்தீர்களா?  இந்த இசை நாடகத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் விடியோவில் போட்டுக் காண்பித்து விட்டு என் லெக்சரை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.  (காயத்ரி, கவனிக்கவும்… உங்கள் பல்கலைக்கழகத்தில் அந்த வசதியெல்லாம் இருக்கிறதா?)
***
வரும் 13-ஆம் தேதி (13-2-2012) திங்கள் கிழமை காலை பத்து மணி அளவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் Paris Musings என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையினரால் நடத்தப்படும் Lingua Fest 2012 – Polyglots Paradise என்ற மூன்று நாள் விழாவின் தொடக்கவுரை அடியேனுடையது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக் கேம்பஸில் உள்ள தந்தை பெரியார் ஹாலில் (F-50) (Main Building, First Floor) என்னுடைய உரை இருக்கும்.    250 பேர் கொள்ளளவு உள்ள ஹாலில் சுமார் 30 மாணவர்கள்தான் வருவார்கள் என்று தெரிகிறது.  நடிகர்களை அழைத்து கூட்டம் கூட்டலாம் என்ற யோசனை ஃப்ரெஞ்ச் துறையினருக்குத் தெரியாது போல் இருக்கிறது.  அதனால் என்னுடைய பேச்சில் ஆர்வம் உள்ள நண்பர்கள் யாவரும் திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு மேற்கண்ட இடத்தில் கூடலாம்.  ஒரே ஒரு நிபந்தனை:  உரையின் போது யாரும் சீட்டி அடிக்கக் கூடாது.  மற்றபடி சிரிக்கலாம்; அதற்குத் தடை இல்லை.  பெரும்பாலும் மாணவிகள்தான் இருப்பார்கள் என்பதால் கூட  இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கலாம்.
ஃப்ரெஞ்ச் கலாச்சாரம், இலக்கியம், தத்துவம் ஆகியவை எனக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசலாம் என்று இருக்கிறேன்.  ஒரு மணி நேரம் லெக்சர்.  அவசியம் வந்து கலந்து கொள்ளுங்கள்.  திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு அழைக்கிறேன்.  நியாயமே இல்லைதான்.  இருந்தாலும் ஒரு உற்சாகத்தில் அழைக்கிறேன்.  வந்து விடுங்கள்…

No comments:

Post a Comment