Saturday 12 January 2013

சரவண பவன் இன்று திறந்து இருக்குமா? (2) (October 26th, 2011)

டியர் சாரு,
உங்களின் 300 தீபாவளி வாழ்த்துகளுடன் சேர்த்து மற்றும் ஒரு தீபாவளி நல்வாழ்த்து.
“என்னைப் போல் அனாதையாக வாழும் ஆத்மாக்கள்” என்ற வார்த்தையை பார்த்த உடன் மிகவும் மனது கஷ்டமாகப் போய் விட்டது சாரு. இந்த வார்த்தையை நேற்று பார்த்திருந்தால் கண்டிப்பாக கோவையில் இருந்து சென்னை வந்து இனிப்பு மற்றும் புத்தாடைகளுடன்  உங்களை சந்தித்திருப்பேன். அப்படிச் செய்யாமல்  போனதற்கு என்னை மன்னித்து விடவும்.
டிசம்பர் 6 புத்தக வெளியீட்டிற்கு (தீபாவளி) வாழ்த்துக்கள். உங்களுக்குப் புத்தாடை வாங்கித் தராவிட்டாலும் எக்ஸைல் நாவலின் ஐந்து பிரதிகள் வாங்கி டிசம்பர் 6 தீபாவளியில் உங்களை மகிழ்விப்பேன்.
நன்றி.
தினேஷ் பாபு
கோயம்புத்தூர்.
டியர் தினேஷ் பாபு,
உங்கள் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டதற்காக வருந்துகிறேன்.  ஆனால் சிலருக்காவது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  சென்ற ஆண்டு தீபாவளியின் போதும் இதேபோல் ஒரு புலம்பல் கட்டுரையை எழுதியிருந்தேன்.  அன்றைய தினம் என் கணினியில் ஞாநியின் பெயரில் பச்சை நிறத்தைப் பார்த்தேன்.  ”என்ன, முறுக்கு சாப்பிட்டீர்களா ஞாநி?” என்று கேட்டேன்.  “யாராவது கொண்டு வருவார்களா என்று காத்திருக்கிறேன்” என்றார்.  அப்போதே மணி காலை ஒன்பது இருக்கும். இதெல்லாம் நகர வாழ்க்கையின் சோகம் என்று நினைக்கிறேன்.  கிராமங்களில் இந்தப் பிரச்சினை இல்லை.  யாராவது தனியாக இருந்தால் அவர் வீட்டில் தான் பலகாரம் அதிகமாக இருக்கும்.  எல்லாருடைய வீட்டிலிருந்து வந்து குவியும்.  இங்கே நகரத்தில் கேட்பதற்கே நாதி இல்லை.
எல்லாப் பண்டிகைகளிலும் இப்படித்தான். நான் இருக்கும் தெரு பணக்கார முஸ்லீம்கள் வசிக்கும் தெரு.  பக்கத்து வீட்டில் இரண்டு முறை ஏ.ஆர். ரஹ்மானைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் ரம்ஸான், பக்ரீத் போன்ற பண்டிகை தினங்களில் அல்வா கொடுப்பார்கள்.  அவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டோடு மிகுந்த அன்போடு பழகுபவர்கள்.  அப்படி இருந்தும் ஏன் பிரியாணி தராமல் அல்வா தருகிறார்கள் என்று எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும்.  பிறகு ஒருநாள் பக்கத்து வீட்டு வாட்ச்மேனிடமே நேரடியாகக் கேட்டு விட்டேன்.  ”நீங்கள் ப்ராமின் வீடு என்பதால் பிரியாணி கொடுக்காமல் அல்வா கொடுக்கிறோம்” என்றார். ”அட, உங்களை அல்லா வச்சுக் காப்பாத்த!” என்று ஆச்சரியத்தில் எங்கள் ஊர்ப் பாணியில் சொல்லி விட்டேன்.  அவந்திகாவினால் விளைந்த நன்மை!
இப்போது இவள் என்ன செய்கிறாள் என்றால், ஸ்ரீ மிட்டாய் கடைக்குப் போய் – மயிலாப்பூரிலிருந்து சேத்துப்பட்டு வரை போக வேண்டும் – சிரமம் பார்க்காமல் அவ்வளவு தூரம் போய் 2000 ரூபாய்க்கு அல்வாவும் லட்டும் வாங்கிக் கொண்டு வந்து எல்லா வீடுகளுக்கும் விநியோகம் செய்தாள்.  நான் தொடக் கூட முடியாது என்று மறுத்து விட்டேன்.  நேற்று வீட்டுக்கு வந்த பாஸ்கருக்கும் கொஞ்சம் அல்வாவும், லட்டும், மிக்ஸரும் கிடைத்தது.  (பாவம், பாஸ்கர்!)
என்னுடைய வருத்தம் என்னவென்றால், முறுக்கும் சீடையும் பலவித உருண்டைகளும் சுழியமும் பணியாரமும், இது எல்லாம் செரிமானம் ஆவதற்கு தீபாவளி லேகியமும் இல்லாமல் அது என்னய்யா தீபாவளி என்பதுதான்.  இன்னொரு வருத்தம், இங்கே உள்ள முஸ்லீம் குடும்பங்களைப் பற்றி.  அவந்திகா கொடுக்கும் லட்டு, அல்வாவை வைத்து ’தீபாவளி தினத்தில் இதுதான் விசேஷம் போல’ என்று அவர்கள் நினைத்து இருப்பார்கள்.  பாவம்.
இதற்கிடையில் ஒரு வாசகி தன்னுடைய வீட்டுக்கு சாப்பிட அழைத்தார்.  அவரது அன்புக்கு நன்றி.  எனக்கு சிதம்பர நினைவுகள் நூலில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  பாலாவின் இளவயதில் நடந்த சம்பவம் அது.  அவருடைய கவிதைகள் அப்போது இளைஞர்களிடையே மிகவும் பிரபலம்.  நெருப்பு மாதிரி இருக்கும்.  அவரும் ஒரு ஹிப்பியைப் போல், சந்நியாசியைப் போல், பிச்சைக்காரனைப் போல் இந்தியா பூராவும் சுற்றிக் கொண்டிருந்தார்.  ஒருநாள் அவருக்கு நல்ல பசி.  அது ஒரு ஓணம் நாள்.  கேரளத்தில் – ஊர் மறந்து விட்டது – ஒரு ஊரில் பசியில் கண்கள் அடைக்க, நீண்ட நாள் வளர்ந்த தாடியுடன், அழுக்கு வேஷ்டியுடன் ஒரு வீட்டில் சாப்பிட எதுவும் கிடைக்குமா என்று கேட்கிறார்.  ஓணம் நாளில் இப்படி ஒரு இளம் வயதுப் பிச்சைக்காரனா என்று வீட்டில் உள்ளவர்கள் திகைத்துப் போய் அவரை வீட்டுக்குள் அழைத்து சாப்பிடச் சொல்கிறார்கள்.  பாலா பல நாள் பசியுடன் அள்ளி அள்ளிப் போட்டுக் கொள்கிறார்.  அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் – கல்லூரி மாணவி – “ஸார், நீங்கள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுதானே? எங்கள் கல்லூரிக்கு வந்து கவிதை வாசித்திருக்கிறீர்களே?” என்று கேட்கிறாள்.
அப்போது பாலா எந்த அளவு வெட்கப்பட்டு, கூசிக் குறுகிப் போயிருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.  இந்த தீபாவளி தினத்தன்று என் சரவண பவன் கட்டுரையைப் படித்து விட்டு மனக் கஷ்டம் கொண்டு, மிகுந்த அன்புடனும் பிரியத்துடனும் அந்த வாசகி தன் வீட்டுக்கு என்னை சாப்பிட அழைத்த போது பாலாவின் வாழ்வில் நடந்த அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தேன்.  என்னை யாரென்றே தெரியாத அந்த வாசகியின் குடும்பத்தினருக்கு அவர் என்னை எப்படி அறிமுகப்படுத்துவார்?  ஒரு தீபாவளி தினத்தின் காலையில் தங்கள் வீட்டில் வந்து அமர்ந்து சாப்பிடும் ஒரு நபரை அந்த வீட்டு மனிதர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
நண்பர்களே, உங்கள் மனதைக் கஷ்டப்படுத்துவதற்காக இதை நான் எழுதவில்லை.  நகர்ப்புறம் சார்ந்த வாழ்வின் கலாச்சாரப் பிரச்சினைகளில் இந்த அல்வாவும் ஒன்று.
உங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி.  எனக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பிய 300 வாசகர்களையும் நான் சும்மா விடப் போவதில்லை.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு எக்ஸைல் பிரதியை வாங்கியே ஆக வேண்டும்.
சாரு

No comments:

Post a Comment