Sunday 14 September 2014

ராஜேஷுக்கு ஒரு கடிதம்…

ராஜேஷ் என்னுடைய மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்.  கருந்தேள் என்ற புனைப்பெயரில் எழுதுகிறார்.  எனது நீண்ட கால நண்பரும் கூட.  அதோடு தனது தந்தையைப் போல் என்னை மதிப்பவர்.  அதை அடிக்கடி அவர் என்னிடம் சொல்லியும் இருக்கிறார்.  அவர் ஆங்கிலத்தில் அற்புதமாக மொழிபெயர்த்துக் கொடுத்த என்னுடைய ”நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்” என்ற சிறுகதையை ஒரு முக்கியமான பத்திரிகைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.  அந்தப் பத்திரிகை ஆசிரியர் என்னிடம் கேட்டுக் கொண்டதன் பேரில்.  இதற்கிடையில் இன்னொரு முக்கியமான ஆங்கிலப் பத்திரிகையான the four quarters magazine –இலும் ஒரு கதை கேட்டு எனக்கு எழுதியிருந்தார்கள்.  ராஜேஷிடம் நேநோ சிறுகதையை மொழிபெயர்க்குமாறு சொன்னேன்.  அவரும் ஆரம்பித்தார்.  இரண்டே தினங்களில் கதையில் பாதியை முடித்து விட்டார்.  இடையில் நேற்று எனக்கு போன் பேசி “ஒரு இரண்டு நாள் கதையில் உட்கார முடியாது; மூன்றாம் நாளிலிருந்து மறுபடியும் தொடங்கி விடலாம்” என்றார்.  சரி, ஏதோ அவசர வேலை, அலுவலக வேலை, குடும்பப் பணி என்று நினைத்து நானும் கேட்டுக் கொண்டேன்.   ஆனால் வேறொரு வேலையாக இன்று அவருக்கு போன் செய்த போது ’அந்த இரண்டு நாள் வேலை என்ன?’ என்பது பற்றி விளக்கினார்.
ஏதோ ஒரு தமிழ்ச் சிறுபத்திரிகைக்கு உலக சினிமா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுக்க வேண்டுமாம்; போன மாதமே வாக்குக் கொடுத்து விட்டாராம்.  ”நீங்கள் ”மிமி” பத்திரிகைக்கு மாதாமாதம் கட்டுரை எழுதும் போது கடைசி தேதியில் எழுதுவீர்களே, அந்த மாதிரி கடைசிக் கெடுவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.  மிமி என்பது நான் ஒன்பதரை ஆண்டுக் காலமாக எழுதிக் கொண்டிருந்த ஒரு எத்தியோப்பியப் பத்திரிகை.  அதில் பத்தாண்டுக் காலம் தொடர்ந்து எழுதினால் எத்தியோப்பியக் குடியுரிமை க்ரீன் கார்டு கிடைக்கும்.  நான் ஒன்பதரை ஆண்டோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டதால் எனக்கு அந்த க்ரீன் கார்ட் கிடைக்கவில்லை.  சரி, அதை விடுங்கள்.
இப்போது ராஜேஷுக்கு நான் தமிழ் இலக்கியவாதிகளின் வரலாற்றையே எழுத வேண்டியிருக்கிறது.  அது ஏன் ஐயா நீங்களெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளனாக ஆவதில் அவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்?  இது என் முதல் கேள்வி.
அந்தக் குறிப்பிட்ட சிறுபத்திரிகை எத்தனை பிரதிகள் போகும் என்றேன்.  ஒரு 200 என்றார்.  அடப் பாவிகளா…  இந்த இண்டர்நெட் யுகத்திலும் 200 பிரதி போகும் சிறுபத்திரிகையா?  என்னைப் பொறுத்தவரை இண்டர்நெட்டின் வருகைக்குப் பிறகு சிறுபத்திரிகை என்பதே அர்த்தமில்லாமல் போய் விட்டது.  உங்களுக்கு என்ன விபரம் வேண்டுமோ அது எல்லாமே இண்டர்நெட்டில் கொட்டிக் கிடக்கிறது. அகிரா குரஸவா பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு புத்தகம் எழுத வேண்டுமா?  இதோ இரண்டு நிமிடத்தில் 2000 பக்கங்களை டவுன்லோடு செய்து விடலாம்.  இந்த நிலையில் எந்தப் படத்தைப் பற்றி எதை எழுத?  சரி, 50 லட்சம் பேர் படிக்கும் ஜூனியர் விகடனில் எழுதினாலாவது ஒரு புகழ் கிடைக்கும்.  ஆனால் நீங்களோ 200 பேருக்காக எழுதுகிறீர்கள்.  சரி, ஜூவியில் எழுதினால் கிடைக்க்கும் புகழிலும் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.  நீங்கள் ஏதாவது ஒரு பெண்ணிடம் சாட் செய்தால் அது பத்திரிகைகளில் வெளிவந்து உங்களை ஏதோ செக்ஸ் கிரிமினல் லெவலுக்கு ஆக்கி விடுவார்கள்.  இதைத் தவிர வேறு என்ன கிடைக்கும் சொல்லுங்கள் ராஜேஷ்?  அஜயன் பாலா விகடனில் எழுதியதால் தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆனாரே என்று சொல்கிறீர்களா? அது ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் ஜனாதிபதி ஆன மாதிரி ஒரு அதிர்ஷ்டம்.  மற்றபடி நீங்கள் விகடனில் எழுதினாலும் பயன் இல்லை.
எனக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது.  தமிழ் எழுத்து என்பது ஒரு ஆவிகள் உலவும் புளியமரம்.  இதன் பக்கத்தில் போனாலே ஆள் ரத்த வாந்தி எடுத்து செத்து விடுவான்.  பாரதி செத்தார்; கு.ப.ரா. செத்தார்; புதுமைப்பித்தன் செத்தான்; சமீபத்தில் கோபி கிருஷ்ணன்.  35 வயதுதான் அதிக பட்சம்.  கோபிக்கு மட்டுமே கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தது.  இப்படிப்பட்ட புளிய மரத்தில் வாசம் செய்ய வேண்டும் என்று எவனுக்காவது ஆசை வருமா?  நேற்று ஒரு சீனியர் சினிமா நடிகர் ஒருவர் “என் கவிதை ஒன்று இந்த வாரக் குங்குமத்தில் வந்துள்ளது; படியுங்கள்” என்று எஸ்ஸெம்மெஸ் அனுப்பினார்.  அப்படி அவர் தனது நண்பர்கள் 1000 பேருக்காவது அனுப்பி இருப்பார்.  அடப் பாவிகளா என்று நினைத்துக் கொண்டேன்.  ராஜேஷ், நீங்கள் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.  அவருக்கும் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை. தமிழில் ஏன் நீங்கள் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள்.
32 ஆண்டுகளுக்கு முன்பு சே கெபாரா பற்றித் தமிழ்நாட்டில் ஒரு ஆத்மாவுக்கும் தெரியாது.  தர்மு சிவராமு மட்டுமே ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்.  அப்போதே படிகள் என்ற பத்திரிகையில் சே கெபாரா பற்றி 20 பக்கத்துக்கு ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன்.  படிகள் அப்போது 200 பேர் படிக்கும் பத்திரிகை.  அந்தக் கட்டுரை எழுதுவதற்காக நான் 15 நாட்கள் ஆபீஸுக்கே போகவில்லை.  சே எழுதிய கெரில்லா வார்ஃபேர், பொலிவியன் டைரி என்ற இரண்டு புத்தகங்களையும் வரிக்கு வரி படித்து அதிலிருந்து அதிக அளவில் மொழிபெயர்த்து மேற்கோள் காட்டி எழுதப்பட்ட கட்டுரை அது.  அந்தப் புத்தகங்கள் அப்போது இந்தியாவில் கிடைக்கவில்லை.  தில்லியில் உள்ள ராணுவ அமைச்சக நூலகத்திலிருந்து ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் எடுத்துக் கொடுத்தார்.  படித்து எழுதினேன்.  உலகம் முழுவதும் ராணுவத் துறைகளில் அப்புத்தகம் கட்டாயம் உண்டு.  இன்று அந்த சே சினிமாக்காரர்களின் டீ ஷர்ட்டில் தொப்பியுடன் காட்சி அளிக்கிறார்.
அந்தக் கட்டுரையை எழுதிய போது என் வயது 26.  அந்தத் தப்பை நீங்களும் செய்யாதீர்கள் ராஜேஷ்.  என் கட்டுரைத் தொகுதிகளில் அந்தக் கட்டுரை இருக்காது.  இது போல் அதே படிகள் பத்திரிகையில் ஜான் பால் சார்த்தரின் இண்ட்டிமஸி என்ற குறுநாவலை ரவி என்ற பெயரில் மொழிபெயர்த்தேன்.  இப்படி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம் நாம் வெள்ளைக்காரர்களின் அடிமைகளாகவே இன்னமும் இருக்கிறோம் என்பதையே நிரூபிக்கிறோம்.
இதேபோல் 17.11.11 அன்று என்னுடைய மொழிபெயர்ப்பாளரான ஜி.க்கு நான் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.  அதுவும் கிட்டத்தட்ட இதே கடிதம் மாதிரிதான் இருந்தது.  என்ன பிரச்சினை என்றால், என்னுடைய நாவலை மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டு விட்டால் அப்புறம் நீங்கள் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது.  சில வாக்குறுதிகளை மீறித்தான் ஆக வேண்டும்.  அப்போது சொன்னேன்; இப்போது சாருவை மொழிபெயர்க்கிறேன்; முடியாது; வருந்துகிறேன் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.
முக்கியமாக தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியதன் வரலாற்றுக் கடமையைப் புரிந்து கொள்ளுங்கள்.  தமிழ் எழுத்தாளர்கள் நூறாண்டுத் தனிமையில் கிடக்கிறார்கள்.  ஜி.க்கு நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்:
தொடரும்…
Comments are closed.

No comments:

Post a Comment