கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடைய கேரளப் பயணங்களில் சமூக நீதிக்கான இயக்கங்களின் செயல்பாடுகளில் பங்கெடுப்பது ஒரு முக்கிய அம்சமாக இருந்து வந்திருக்கிறது. கேரளத்தின் உட்புறங்களில் நீண்ட பயணம் செய்து அத்தகைய போராட்ட இயக்கங்களின் கூட்டங்களில் பங்கெடுத்து வந்திருக்கிறேன்.
முதலில் இது பத்தனம்திட்டா என்ற மலைப்புற மாவட்டத்தில் உள்ள செங்கரா என்ற பகுதியில் நடந்த நிலமீட்புப் போராட்டத்துடன் துவங்கியது. காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிகளையும், தலித்துகளையும் அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டி விட்டு அந்த இடத்தை ஹாரிஸன் என்ற விதேசி கம்பெனிக்குக் கொடுக்க நினைத்த கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், தங்கள் நிலத்தை மீட்கவும் செங்கரா பூர்வகுடிகள் 2007-இல் தங்களின் சத்தியாக்ரகப் போராட்டத்தைத் துவக்கினர். தாங்கள் விரட்டியடிக்கப்பட்ட இடத்திலேயே தங்கி அவர்கள் சமரம் செய்தனர். மலைப்பாங்கான அந்தப் பகுதியில் மரங்களுக்குக் கீழேயே தங்கி, அங்கேயே உண்டு உடுத்தி உறங்கி அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போராடினர். மழை பெய்தால் ஒதுங்க மரங்களுக்கிடையே ஓலைத் தடுப்புகள் மட்டுமே இருந்தன.
அந்த இரண்டு ஆண்டுகளில் அந்தப் பூர்வகுடிகளின் பிரச்சினை என்ன என்று கேட்பதற்கு அச்சுதானந்தன் தயாராக இல்லை; அவர்களைச் சந்திக்கவும் வரவில்லை. மாறாக, தன்னுடைய போலீசை விட்டு அச்சுறுத்தினார்; போராட்டத் தலைவர்களின் மீது தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி பல பொய் வழக்குகளைப் போட்டார். ஆனால் இதற்கெல்லாம் அந்தப் படிப்பறிவில்லாத பூர்வகுடிகள் அஞ்சவில்லை. அப்போதுதான் அருந்ததி ராய், மேதா பட்கர் போன்றவர்கள் அந்த இடங்களுக்குச் சென்று அந்த மக்களுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்கள். அந்தக் களச்செயலாளிகளோடு கூட, தங்கள் மொழியைச் சார்ந்த ஒரு எழுத்தாளனையும் தங்கள் ஆதரவாளராக முன்னிறுத்த செங்கரா சமரக்காரர்கள் விரும்பிய போது அவர்கள் தேர்ந்தெடுத்த நபர் அடியேன்.
செங்கராவோடு மேலும் பல இடங்களில் அரசுக்கு எதிராக மக்களின் சமரம் நடந்து கொண்டிருந்தது. உதாரணமாக, பாலக்காட்டுக்கு அருகிலுள்ள பிளாச்சிமடாவில் கொக்கோ கோலாவுக்கு எதிராக நடந்த சமரம். இப்படிப் பல இடங்களுக்குச் சென்று போராட்டங்களிலும், பாத யாத்திரைகளிலும் கலந்து கொண்ட பிறகு அச்சுதானந்தனுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் மாத்ருபூமியிலும், தமிழில் உயிர்மையிலும் வெளிவந்தது. அந்த நேரத்தில் மஹாஸ்வேதா தேவியும் இந்த சமரங்களைப் பற்றி அச்சுதானந்தனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதற்கெல்லாம் அச்சுதானந்தன் பதில் எழுதவில்லை என்றாலும் இக்கடிதங்கள் மக்களின் துயரங்களையும், அதற்கு எதிராக அவர்கள் சத்தியாக்ரக முறையில் நடத்தும் சமரங்களையும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதில் ஒரு சிறிய பங்கை ஆற்றின.
அச்சமயம் ஒரு தொலைக்காட்சி நிருபர் அச்சுதானந்தனிடம் என் கடிதத்தைச் சுட்டிக்காட்டி “ஏன் இதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை?” என்று கேட்டபோது, தமிழ்நாட்டில் வாழும் சாரு நிவேதிதா இவ்வளவு காட்டமாக தமிழ்நாட்டு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுவாரா என்று பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில் ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து, தான் ஒரு அரசியல்வாதி என்பதை நிரூபித்தார். (”ஒரு கம்யூனிஸ்டாகிய நீங்கள் இப்போது விதேசி கம்பெனிகளுக்கு ஊழியம் செய்பவராக மாறி சுதேசி மக்களை விதேசிகளுக்குக் காட்டிக் கொடுக்கத் தயாரானது எப்படி?” என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தேன். சமரம் செய்து கொண்டிருந்த பூர்வகுடி மக்களின் துயரங்களை நேரில் கண்டிருந்ததால் இன்னும் கடுமையாகவே எழுதியிருந்தேன். இது மட்டும்தான் தமிழில் மேற்கோள் காட்டக்கூடிய அளவுக்கு நாகரிகமாக உள்ளது).
இந்தக் கடிதத்தால் கோபமடைந்த முதலமைச்சர் நான் கலந்து கொள்ளும் போராட்டங்களில் போலீசை விட்டுத் தாக்குவார் என்று அஞ்சி சமரக்காரர்கள் அதிலிருந்து எனக்குக் கடுமையான பாதுகாப்பு அளித்தனர். ஆனால் அவர்கள் பயந்தது போல் ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. கேரளம், தமிழ்நாடு இல்லை அல்லவா?
இப்படி பல மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்ட அளவில் நான் அவதானித்த ஒரு விஷயம், மலையாள இலக்கிய உலகின் பிரபலமான ஒரு எழுத்தாளர் கூட இந்தப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிச் செயல்படத் தயாராக இல்லை என்பதுதான். ஓரளவு களத்துக்கு வரத் தயாராக இருந்த ஸாரா ஜோஸஃப் கூட எனக்கு ஏமாற்றத்தையே அளித்தார். ஒருமுறை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரும், ஸாரா ஜோஸஃப்பும் நானும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. தன் முதிய வயதிலும் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்தார் கிருஷ்ணய்யர். சென்னையிலிருந்து 13 மணி நேரம் பயணம் செய்து நான் சென்றிருக்கிறேன். ஆனால் ஸாரா ஜோஸஃப் வரவில்லை. ஏதோ தவிர்க்க இயலாத காரணமாக இருக்கும் என்று நினைத்து விட்டு விட்டேன். ஆனால் இப்போது மே மாதம் சாலக்குடியில் நடந்த ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற போதும் ஸாரா ஜோஸஃப் வரவில்லை. சாலக்குடியிலிருந்து திருச்சூர் ஒரு மணி நேரப் பயணம். கேட்ட போது ’உடம்பு சரியில்லை’ என்று பதில் வந்தது என்றார் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த நண்பர் ஃபஸல். ’போராட்டத்துக்கு வருகிறேன்’ என்று ஒப்புதல் அளித்த போது அவர் ஆரோக்கியமாக இருந்திருக்கலாம்.
பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் சொகுசாக அமர்ந்து கொண்டு யாருக்கும் பிரச்சினை இல்லாத கதைகளை எழுதுவதே போதும் என்று நினைக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. சிறிதளவு சிரமத்தைத் தாங்கிக் கொள்வதற்குக் கூட அவர்கள் தயாராக இல்லை.
மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொச்சியில் நடந்த பாப் மார்லி விழாவின் இறுதி நாள் நிகழ்வுக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். கொச்சி கடற்கரையின் முகத்துவாரத்தில் ஒரு திறந்த வெளியில் மிக ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது விழா. துவக்கப் பேச்சு என்னுடையது. தொடர்ந்து, செண்டை மேளக்காரர்கள் மூன்று மணி நேரம் வெளுத்துக் கட்டினார்கள். தமிழ்நாட்டைப் போல் அல்லாது கேரளம் வெளிநாட்டுப் பயணிகளை பெரிதும் வரவேற்கக் கூடிய தேசம் என்பதால் பல வெளிநாட்டுப் பயணிகளும் செண்டையையும் அதற்கடுத்து நடந்த நாட்டார் கலை நிகழ்வுகளையும் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் Xenophobia (விதேசி விஷயங்களின் மீதான வெறுப்பு) என்ற மனோபாவம் அதிகம் உண்டு. கேரளத்தில் அப்படி இல்லை. உதாரணமாக, அந்த பாப் மார்லி நிகழ்ச்சியில் ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு பெண் கச்சை அணியாமல் வெறும் வெள்ளை நிற பனியனை மட்டுமே அணிந்து கொண்டு வியர்வையில் குளித்தபடி செண்டை மேளத்துக்குத் தோதாக ஆடிக் கொண்டிருந்தார். அங்கே உள்ள மக்கள் அதை ஒன்றும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இதுவே தமிழ்நாட்டில் முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். கலாச்சாரக் காவலர்கள் அந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விட மாட்டார்களா என்ன?
பாப் மார்லி நிகழ்ச்சி முடிந்து இரண்டே தினங்களில் கொச்சிக்கு அருகில் உள்ள சாலக்குடி போராட்டத்துக்காக மீண்டும் சென்னையிலிருந்து கிளம்பினேன். இதுவாவது போராட்டம்; ஆனால் பாப் மார்லி நிகழ்வில் சுமார் அரை மணி நேரம் மட்டுமே பேசினேன். அதற்காக கொச்சி போக வர 26 மணி நேர ரயில் பயணம், காத்திருப்பு எல்லாம். ‘இது தேவையா?’ என்று கேட்டார் என் தமிழ் நண்பர். எவ்வளவு நேரப் பயணம் என்பது முக்கியமல்ல; என்னுடைய வருகையும் சந்திப்புமே அங்கு முக்கியம்.
மேலும், ஒரு முக்கியமான விஷயம். எனக்கு மலையாளம் தெரியாது. தமிழில்தான் பேசுவேன். பாப் மார்லி கூட்டத்தில் மார்க்ஸ் பேசியதற்கு மொழிபெயர்ப்பாளர் வைத்துக் கொண்டதாக அறிந்தேன். அதே போல், நான் பேசி முடித்ததும் ஒருவர் நான் தமிழில் பேசியதை மலையாளத்தில் பேசுவார் என்று ஏற்பாடு செய்து கொண்டோம். ஆனால் நான் பேசி முடித்ததும் மொழிபெயர்ப்பாளர் மேடைக்கு வரவில்லை. கேட்ட போது மொழிபெயர்ப்பு தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள். ”நீங்கள் என்ன கோட்பாட்டு ஆய்வாளரா? ஒரு கவிஞன் தன் இதயத்தால் அல்லவா பேசுவான்? இதயத்தின் மொழிக்கு மொழிபெயர்ப்பாளன் எதற்கு?” என்று கேட்டார் பக்கத்திலிருந்த நண்பர்.
களப்போராளியாக வாழ்வதன் அதிகபட்ச சிரமத்தை சாலக்குடியில் அனுபவித்தேன். அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும். கேரளத்தில் நான் பார்த்த சமரங்கள் பெரும்பாலும் ஒரே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றன. அது, இயற்கைக்கும், பூமிக்கும், வனங்களுக்கும், நதிகளுக்கும் விரோதமான அரசாங்கத்தின் போக்குக்கு மக்களின் எதிர்ப்பு.
கேரளம் தமிழ்நாட்டைப் போன்ற வறண்ட பூமி அல்ல. காணும் இடங்களிலெல்லாம் நதிகளும் வனங்களும் மழையும் நிறைந்த பூமி அது. அதனால்தான் அதை கடவுளின் தேசம் என்று அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட பூமியை பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளை நிறுவி கருவறுத்துக் கொண்டிருக்கிறது அச்சுதானந்தன் அரசு. ஒரு உதாரணம். எர்ணாகுளம் இடப்பள்ளியிலிருந்து மங்களாபுரம் வரை செல்லும் 17-ஆவது தேசிய நெடுஞ்சாலை போடுவதற்காக அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அரசாங்கத்தால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சாலைப் போக்குவரத்து வளர்ச்சி நடவடிக்கைகளின் உண்மையான காரணம் என்னவென்று பார்த்தால், அந்தத் திட்டங்களுக்கும் மக்கள் நலனுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது; சொல்லப் போனால், அந்த மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு செய்வதாகவே இருக்கும். அதாவது, அந்த வளர்ச்சித் திட்டம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு லாபம் சேர்ப்பதற்காகச் செய்யப்படும் வேலையாக இருக்கும்.
சாலக்குடியை எடுத்துக் கொள்வோம். கேரளத்தின் வளமான பிரதேசம் அது. காரணம், அங்கே ஓடும் சாலக்குடி நதி. சாலக்குடிக்குப் பக்கத்தில் உள்ள காதிகூடம் என்ற கிராமத்தில் 1979-ஆம் ஆண்டு நிட்டா ஜெலட்டின் என்ற ஒரு ஜப்பானிய கம்பெனி தன் கொள்ளையடிக்கும் திட்டத்தைப் போட்டது. ’ஆகா, அந்த ஊர் மக்களுக்கு வேலை கிடைத்து அந்த இடம் வளமாகப் போகிறது!’ என்று பிரச்சாரம் செய்தார்கள் விதேசிகளிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்ட அரசும், அதன் அதிகாரிகளும். ஆனால் ஒருசில மாதங்களிலேயே அந்த ஜப்பானிய கம்பெனியின் சாயம் வெளுத்து விட்டது. தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயனக் கழிவை அந்த அற்புதமான சாலக்குடி நதியில் விட்டது கம்பெனி. நதி பூராவும் நாசமானது. தொழிற்சாலைக்குத் தேவையான தூய நீர், ரசாயனக் கழிவை நதியில் விடும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் நதியின் முன்பகுதியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. அதாவது, நதியில் நல்ல நீர் ஓடும் பகுதியிலிருந்து தொழிற்சாலைக்குத் தேவையான நீரை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தள்ளி ரசாயனக் கழிவை விட்டுக் கொண்டிருக்கிறது தொழிற்சாலை.
ஜெலட்டின் என்ற பொருளுக்குத் தேவையான கச்சாப்பொருளான Ossein இந்தத் தொழிற்சாலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஒஸெய்னின் கச்சாப் பொருள் மிருகங்களின் எலும்பு. இந்த ஜெலட்டினின் உபயோகம் என்ன தெரியுமா? ஐஸ்க்ரீம் மற்றும் ஜங்க் உணவுப் பொருட்களுக்குத் தேவையானது இந்த ஜெலட்டின். ஆக, நகர்ப்புறவாசிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்காக ஒரு நதியையே கொன்று விட்டது அரசாங்கம். அது மட்டுமல்ல; இந்த நதிதான் அந்தப் பிரதேசத்து மக்களுக்குக் குடிநீராகப் பயன்பட்டது. இதில்தான் அந்த மக்கள் குளித்தார்கள்.
அங்கே நான் கண்ட ஒரு துயரமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். சாலக்குடியிலிருந்து காதிகூடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது ஒரு இடத்தில் இருபது பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ரேஷன் கடையா அல்லது ஒயின்ஷாப்பா என்று பார்த்த போது பலகையில் ’தோல் மருத்துவர்’ என்று எழுதியிருந்தது. இந்தப் பகுதியில் ஏன் இவ்வளவு தோல் வியாதி என்று ஆச்சரியப்பட்டதற்கு சாலக்குடி நதியில் எனக்கு விடை கிடைத்தது. நதியில் விடப்பட்ட தொழிற்சாலையின் ரசாயனக் கழிவு அவ்வளவும் நதியில் அப்படியே திட்டு திட்டாக மிதந்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் கழிவுகளை யாரோ இரண்டு பேர் குச்சியால் எடுத்து கரையில் போட்டுக் கொண்டிருந்தார்கள். என் கூட வந்தவர் “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது “யாரோ பத்திரிகைக்காரர்கள் வருவதால் இதை சுத்தம் செய்யும்படி கம்பெனி அனுப்பியிருக்கிறது” என்றார்கள் அவர்கள்.
தோல்வியாதி மட்டுமல்ல; இவ்வளவு சிறிய கிராமத்தில் இதுவரை 60 பேர் புற்றுநோய் வந்து இறந்திருக்கிறார்கள். பிறக்கும்போதே குழந்தைகளுக்குக் கண் இல்லை; காது இல்லை; கை காலெல்லாம் வளைந்தும் சுருட்டிக் கொண்டும் பிறக்கின்றன. எல்லாவற்றையும் விட பயங்கரம் என்னவென்றால், அந்தப் பகுதியின் காற்றை சுவாசிக்கவே முடியவில்லை. ஏதோ ஒரு ரசாயனப் பொருளை சுவாசிப்பது போல் சகிக்க முடியாத நாற்றத்தில் மூச்சு அடைத்தது.
சாலக்குடி நதியையே கொன்று விட்டார்கள் என்றேன். எப்படி? நூறு பேர் மட்டுமே வேலை பார்க்கும் இந்தத் தொழிற்சாலை 24 மணி நேரமும் இயங்குகிறது. இதற்கு 120 டன் மிருகங்களின் எலும்பும், 1,20,000 லிட்டர் ஹைட்ரோக்ளோரிக் அமிலமும் தேவைப்படுகிறது. இந்த மிருக எலும்பு, ஹைட்ரோக்ளோரிக் அமிலம் இரண்டின் விஷக்கழிவும் தினமும் 60 டன் வெளியேற்றப்பட்டு சாலக்குடி நதியில் சேர்கிறது. தினந்தோறும் இந்த நதியிலிருந்து தொழிற்சாலை எடுக்கும் தண்ணீரின் அளவு 62,90,200 லிட்டர். இப்போது நதியில் வெறும் ரசாயனக் கழிவும், அதன் மேலே விஷத்தன்மை கொண்ட குளவாழாவும் மட்டுமே படர்ந்திருக்கிறது.
இவ்வாறாகத்தான் சாலக்குடி நதியும் கேரளத்தின் பல்வேறு நதிகளும் இன்று அழிந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது ஆட்சியாளர்கள் கேரளத்தையே கூறு கட்டி விதேசிகளுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
பின்குறிப்பு: இந்தக் கொடுமையை நேரில் பார்ப்பதற்காக சாலக்குடியிலிருந்து காதிகூடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். காதிகூடத்திலிருந்து சாலக்குடி நதிக்குப் போகும் வழி ஒரு காட்டு வழி. அதில் செல்வது கூட பிரச்சினையாக இல்லை. ஆனால் அதன் இடையில் ஒரு மதில் சுவர் வருகிறது. அந்த மதிலில் நடந்து சென்றால்தான் நதியிலிருந்து தண்ணீர் களவாடப்படுவதையும், கழிவுகள் நதியில் விடப்படுவதையும் நேரடியாகப் பார்க்க முடியும். மதிலிலிருந்து கீழே விழுந்தால் உயிர் போகாது; ஆனால் கை கால் முறிந்து விடும். ஹாலிவுட் படங்களில் அர்னால்ட் ஷ்வெர்ஸ்னேகர் தான் இப்படி மதில் சுவர்களின் மேல் அனாயாசமாக நடப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்போது நானே அப்படி நடக்கும்படி ஆகி விட்டது. ஆனால் இன்னொரு நடிகர் கை கொடுத்தார். சார்லி சாப்ளின் நடப்பது போல் பாதங்களைப் பக்கவாட்டில் அகட்டி வைத்து நடந்து எப்படியோ கை கால் பழுதாகாமல் பார்த்து விட்டு வந்து சேர்ந்தேன்.
அன்று மதியம் எதிர்ப்புக் கூட்டத்தில் பேசி விட்டு உடனே பாலக்காட்டுக்குப் பக்கத்தில் உள்ள பிளாச்சிமடாவுக்குக் கிளம்பினேன். கொக்கோ கோலா எதிர்ப்புக் கூட்டம். அது ஒரு தனிக்கதை.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மறுநாள் காலை கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு விமானம் ஏறும் போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் – எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை – என்னை அடையாளம் கண்டு கொண்டவராக புன்னகை புரிந்த போது இரண்டு நாள் களைப்பு சற்றே குறைந்தது போல் தோன்றியது.
நன்றி: உயிர்மை
No comments:
Post a Comment