நான் சினிமா விமர்சனம் எழுதாமல் இருப்பது பற்றிய அருணின் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தேன். இன்றும் அது தொடர்பான விவாதங்கள் நமது வாசகர் வட்டத்தில் தொடர்கிறது. சாருஆன்லைனை வாசிப்பவர்கள் வாசகர் வட்டத்திலும் இணைந்து கொள்ளலாம்.
Joseph Sugananth: ’பிரிந்து சென்ற காதலியின் பழைய காதல் கடிதங்களை ஏக்கத்துடன் படிக்கும் காதலன் போல சாருவின் பழைய திரைப்பட விமர்சனக் கட்டுரைகளையே மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன் நான்.’ .. Hats off Arun… நாங்களும் காத்துக் கொண்டிருகிறோம்… இப்பொழுதெல்லாம் சாருவின் விமரிசனங்கள் இல்லாததால் எந்தப் படத்தை பார்ப்பது, எந்தப் படத்தை விடுவது என்று தெரியாமல் அனைத்துப் படங்களையும் பார்த்துத் தொலைக்கிறேன்…
16 hours ago · Like · 2
Raja Rajendran சாருவை சினிமா விமர்சனம் செய்யச் சொல்லி எந்த வெகுஜனப் பத்திரிகையாவது அழைத்தால் நிச்சயம் எழுதுவார் என நாம் நம்பலாம். ————————————— சாரு தன் இணையத்தில், சொந்தக் காசில் படம் பார்த்து, ஒரு மட்டமான படத்தைக் கிழித்து விமர்சிப்பதன் மூலம், நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொண்டே போகிறார்… இதனால் அவருடைய அடுத்த மூவ் தடைபட்டுக் கொண்டே போகிறது! சுஜாதா கூட குமுதத்தில் சினிமா விமர்சனம் எழுதினார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் நிறுத்திவிட்டார்! அதாவது, அறத்தைப் போதிக்கும் இந்த நாட்டில் ‘உண்மை’ மட்டுமே சொன்னால் அலர்ஜி! சாரு தெளிவாகச் சொல்லிவிட்டார்… இனி நல்ல படத்தை மட்டும் விமர்சிப்பாராம்! இதை மனிதாபிமானத்துடன்தான் நாம் பார்க்கவேண்டும்!
15 hours ago · Like · 5
பாலசங்கரன் கணேசன் மிகவும் சரியாகச் சொன்னீர்கள் அருண்! நான் சாருவின் ரசிகனாக மாறியதன் முழுமுதற் காரணமே அவரின் சினிமா விமர்சனங்கள்தான்! அதன் பின்னர்தான் நாவல்கள் மற்றும் கட்டுரைகள். எனக்கும் அவர் இப்போது விமர்சனம் எழுதாமல் இருப்பதில் வருத்தம்தான்! என்ன செய்ய? ஒருமுறை கம்மிட் ஆகிவிட்டால் பின்னர் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரே!
11 hours ago · Like · 3
Arun Dir ராஜேந்திரன், எனக்கும் மனிதாபிமானம் இருக்கிறது. சாரு திரைப்பட விமர்சனங்கள் எழுதியதால் பல விரோதிகளை உருவாக்கிக் கொண்டார் என்பது உண்மைதான் என்றாலும் என்னைப் போல் திரைப்படத் துறையில் உள்ளவர்கள் மாதாமாதம் சாருவின் திரைப்பட விமர்சனத்தைக் காத்திருந்து படித்ததைக் கண்கூடாகப் பார்த்தவன் நான். உதாரணமாக, நான் முன்பு ஒரு இயக்குநரிடம் வேலை பார்த்தேன். அவர் மிகச் சிறந்த கதாசிரியரும் கூட. அவருக்கு ரஜினிகாந்த்தை சுத்தமாகப் பிடிக்காது. எனவே, எந்திரன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் “இந்தப் படம் கண்டிப்பாகத் தோல்வியடையும்” என்று சபதம் செய்துகொண்டிருந்தார். ஆனால் படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. அந்த இயக்குனரிடம் எனக்குத் துளியும் கருத்துச் சுதந்திரம் என்பதே கிடையாது. அவரது கருத்துக்கு நான் மாற்றுக் கருத்து கூறினேன் என்றால் என் கதை அம்பேல். அப்படியிருந்தும் கூட அவர் படத்தைப் பற்றி என்னிடம் கேட்டபோது நான் என்னை மறந்து, “சார் படம் பட்டாசா இருக்கு சார். எங்க ஊர்ல மொத்தமே எட்டு தேட்டர்தான் சார். அதுல அஞ்சு தேட்டர்ல இந்தப் படம் வந்துச்சு சார். அஞ்சுலயும் படம் ஹவுஸ்ஃபுல் சார்” என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தேன். (அதுதான் உண்மையும் கூட). ஆனால் அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பேசிக்கொண்டிருந்த என்னை நோக்கி ஆவேசத்துடன் பேச்சை நிறுத்துமாறு சைகை காட்டினார்.நான் வாயைப் பொத்திக்கொண்டேன். (கையை எனது வாயில் வைத்து.)
பின்னர் படத்தின் வெற்றி உறுதியான பின்னரும் அவரது மனம் அமைதியுறவில்லை.அந்த நேரத்தில்தான் அவரிடம் நல்ல பெயர் வாங்க நினைத்த ஒரு உதவி இயக்குனர் அவரது வயிற்றில் பாலை வார்த்தார். எப்படி? “சார், சாரு நிவேதிதான்னு ஒரு ரைட்டர் இருக்காருல்ல சார், அந்தாளு ஒரு பத்திரிகைல எந்திரன் படத்தப் பத்திக் கிழி கிழினு கிழிச்சிருக்கான் சார். படிச்சீங்களா சார்?” உடனே எனது இயக்குனர் பரவசத்துடன் என்னிடம், “யோவ், நீ என்ன செய்வியோ தெரியாது. எனக்கு ஒடனடியா அந்தப் பத்திரிகை வேணும். வாங்கிட்டு வா” என்று அப்பத்திரிகையின் பெயரைக் கூறி என்னை அனுப்பினார்.
Arun Dir நான் அப்போதே சாருவின் எழுத்தைத் தீவிரமாக வாசிக்கவும் நேசிக்கவும் ஆரம்பித்திருந்தேன். இருந்தாலும் எனது இயக்குனரின் மீதிருந்த பயம் காரணமாக அவரிடம் சாருவைப் பற்றி எதுவும் பேசாமல் அந்தப் பத்திரிகையை வாங்கி வந்தேன். அந்த விமர்சனத்தைப் படித்த பின் எனது இயக்குனர் செய்த செயல் என்ன தெரியுமா? அவருக்குத் தெரிந்த அனைவருக்கும் தொடர்பு கொண்டு சாருவின் பெயரைக் குறிப்பிட்டு அந்த விமர்சனத்தைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் எனது ஆசிரியர் சாருவையும் படித்திருக்கவில்லை; எந்திரன் படத்தையும் பார்த்திருக்கவில்லை என்பதுதான். நான் சார்ந்திருக்கும் திரைப்படத் துறையின் எழுதப்படாத விதி என்ன கூறுகிறது என்றால் “இதையெல்லாம் வெளியே கூறாதே. உன்னை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்” என்கிறது. ஆனால் என்ன செய்வது? சொல்ல வேண்டிய சூழ்நிலை. அதனால்தான் சொல்கிறேன்.
மேலும் நான் குறிப்பிட்டது ஒரு தவறான முன்னுதாரணம்தான். இதை நான் இங்கு ஏன் குறிப்பிட்டேன் என்றால் எனது இயக்குனரின் செயல் மிகவும் சுயநலம் வாய்ந்தது என்றாலும் மிகப் பெரிய பொருளாதார பலமும் அதிகார பலமும் கொண்ட ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு முன்னனி நடிகரைக் கொண்டு தயாரித்த பிரம்மாண்டமான படத்தை ஆழமாகப் பிரித்து ஆராய்ந்து விமர்சிக்க நான் குறிப்பிட்ட அந்த மிகப் பெரிய கதாசிரியராலேயே முடியாமல், அவர் சாருவின் விமர்சனத்தை நாட வேண்டியிருக்கிறது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட திரைப்பட விமர்சனங்கள் ஏதும் வருவதில்லையே? தமிழில் நல்ல படங்கள்தான் அதிகமாக வருவதில்லை. நல்ல விமர்சனங்களாவது வர வேண்டாமா? அதற்குத்தான் சாரு மீண்டும் விமர்சனம் எழுத வேண்டும் என்கிறேன்.
Arun Dir மீண்டும் சொல்கிறேன். சாருவை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அவர் மீண்டும் திரைப்பட விமர்சனம் எழுதப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற வாசகர்களில் ஒருவனாகவே எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
7 hours ago via mobile ·
மேற்கண்ட கருத்துக்களைப் படித்து விட்டு ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது என்னால்.
ஜோஸஃப் சுகானந்துக்கு ஒரு விளக்கம்: என் விமர்சனங்களை ஊன்றிப் படித்தால் உங்களாலேயே எந்தப் படத்துக்குப் போகலாம், போக வேண்டாம் என்று தெரிந்து போய் விடும். ஆனால் இப்படிச் சொல்லும் நானே சில சமயங்களில் முதலையிடம் மாட்டிக் கொள்வது போல் மாட்டிக் கொள்வதுண்டு. உதாரணம், சென்ற ஆண்டு வெளிவந்து தமிழகமே பாராட்டிய தெய்வத் திருமகள் என்ற படத்தைப் பார்த்து நொந்து போன அனுபவம். விக்ரம் நார்மலான மனிதராக நடிக்கவே மாட்டாரா என்று துக்கப்பட்டேன். ஊசிப் போன பண்டத்தைச் சாப்பிடுவது போல் இருந்தது. அந்தப் படத்தின் அசட்டு உணர்ச்சிகளை என்னால் சகிக்கவே முடியவில்லை. பிறகு, அது ஒரு வெளிநாட்டுப் படத்தின் தழுவல் என்றும் அறிந்தேன். தழுவல் என்பதெல்லாம் நாகரீகமான வார்த்தை. திருட்டு என்பதே சரியான வார்த்தை. எனக்குத் தெரிந்தே அந்தப் படத்தில் வரும் படுகர் இனப் பாடல் ஊட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஒருவரிடமிருந்து திருடியது. அவருடைய பெயரைக் கூட படத்தில் போடவில்லை. இந்தக் கண்றாவியைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதி என்ன பயன்? தமிழ் சினிமா ஒரு அடி கூட முன்னேறப் போவதில்லை. மேலும், என் பெயர்தான் தொடர்ந்து கெட்டுக் கொண்டிருக்கிறது. கெட்டால் என்ன? ———— போச்சு என்று இருந்து விடுவேன். ஆனாலும் எனக்கென்று வேறு வேலைகள் இருக்கின்றன…
மொழிபெயர்ப்பு மூலமாக தமிழ்நாட்டை விட்டு வெளியே போக வேண்டும். இதற்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஒரே சமயத்தில் நான்கு மொழிபெயர்ப்பாளர்களோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம். இடையில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளம் எழுத்தாளர் (ஒரு பேரழகி) என்னை அணுகி, தன்னுடைய புத்தகத்தைப் படித்து விட்டு நாலே நாலு வரி எழுதிக் கொடுத்தால் அதைப் பின்னட்டையில் போட்டுக் கொள்வேன் என்று கேட்டார். புத்தகத்தைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் எழுத நேரமில்லை. ஜெய்ப்பூரில் அவரைச் சந்தித்த போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ஏனென்றால், எழுதித் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு தவறி விட்டேன். புத்தகம் வந்து விட்டது, என்னுடைய மதிப்புரை இல்லாமலேயே.
இதற்கிடையில் இப்போது ஏஷியன் ஏஜுக்கான அடுத்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் என்னுடைய இலக்கு, குஷ்வந்த் சிங்கைத் தாண்ட வேண்டும்; சர்வதேச அளவில் (சே, இந்த வார்த்தையே இப்போது கெட்ட வார்த்தையாகி விட்டது!) ஓரான் பாமுக்
இன்னொரு வேலை. அமெரிக்க பதிப்பாளர் ஒருவர் ஒரு தொகுப்பு நூலுக்காக ஒரு gothic கதையைக் கேட்டிருக்கிறார். உலகின் மிக முக்கியமான எழுத்தாளர்களெல்லாம் அந்தத் தொகுப்பில் எழுதுகிறார்கள். மற்ற விபரங்களை வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் பதிப்பாளர். ஆரம்ப காலத்தில் நான் சில gothic கதைகள் எழுதியிருக்கிறேன். ‘காத்திக்’ கதைகளுக்கு கட்டிடக் கலையும் ஒரு பின்புலனாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் நான் எங்கே சினிமா விமர்சனம் எழுதுவது? ஆனால் ராஜ ராஜேந்திரன் சொல்வது போல், சினிமா விமர்சனம் எழுதுவதால் என்னுடைய அடுத்த ‘மூவ்’ ஒன்றும் கெட்டுப் போய் விடுவதில்லை. சினிமாத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய ‘ஜென்ம விரோதிப்’ பட்டியலில் முதலில் வைத்திருப்பார்கள்; அவ்வளவுதான்.
சரி, விவாதத்துக்கு வருகிறேன். அருண் குறிப்பிடும் இயக்குனர் யார்? கமல்ஹாசன் என்று சொல்லி எனக்கு ஷாக் கொடுத்து விடாதீர்கள். என்ன முயன்றும் என்னால் யூகிக்க முடியவில்லை. ரஜினியைப் பிடிக்காதவர் என்ற க்ளூவை வைத்துக் கொண்டு யோசித்த போது உலக …. சரி, வம்பு வேண்டாம். ஆனால் அருண், அப்படி என்னுடைய எந்திரன் விமர்சனம் பற்றி ஊருக்கெல்லாம் சொன்னாலும் அவரை ஒரு பத்திரிகை பேட்டி எடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பேட்டியில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால், அவர் திருவள்ளுவரிலிருந்து ஆரம்பித்து மு.க. வரை வந்து எஸ். ரஜினி கிருஷ்ணன் வரை சொல்லி விடுவார். பட்டியலில் அடியேனின் பெயரே இருக்காது.
எது எப்படிப் போனாலும் இனிமேல் மோசமான படங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுத மாட்டேன். நல்ல படங்களைப் பற்றி எழுதலாம் என்றாலோ அது சாத்தியமில்லை. தமிழில் உத்தரவாதமாக நல்ல படங்கள் வராது. அதனால் எப்போதாவது தேவ்.டி படங்களைப் போல் இந்திப் படம் வந்தால் எழுதுவேன்…
--------------------------------------------------------------------------------
நான் சினிமா விமர்சனம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் நண்பர்களிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதோ அவை:
தீராக் காதலி என்று ஒரு சினிமா புத்தகத்தை எழுதியிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும். சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்தியதற்குக் காரணங்களில் ஒன்று, அந்த நூலுக்குக் கிடைத்த அமோகமான வரவேற்பு. அப்போது நான் சின்மயா நகர் என்ற நரகத்தில் வசித்தேன். அங்கே இருந்து இந்திரா நகரில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்துக்கு ஆட்டோவில் வர வேண்டுமானால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே 150 ரூ கேட்பார்கள் ஆட்டோவில். அதிலும் திரும்பிப் போக ஆட்டோ கிடைக்காது. சின்மயா நகரா என்று அலறுவார்கள் ஆட்டோக்காரர்கள். சாலைகள் அந்த நிலையில் இருந்தன அப்போது. அந்த நூலகத்துக்கு அருகில் உணவகங்கள் கிடையாது என்பதால் மதியம் பட்டினிதான். 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பத்திரிகைகளை ஆய்வு செய்து எழுத வேண்டும். ஒரு பக்கத்தை எடுக்க பத்து ரூபாய். ஆக, ஒரு கட்டுரை எழுதவே ஆயிரம் இரண்டாயிரம் ஆகும். அவ்வளவு பிரயாசை எடுத்து எழுதினால் காசு கிடைக்காது. அவ்வளவு ஓசி. சரி, அந்தப் புத்தகமாவது சரியாக விற்க வேண்டாமா? எம்ஜியாரை எத்தனை கோடி மக்களுக்குத் தெரியும்? தீராக் காதலியில் எம்ஜியாரைப் பற்றி, அவருடைய இளமைக் காலத்தைப் பற்றி யாருக்குமே தெரியாத விஷயங்கள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் நம் மக்களுக்கு எம்ஜியார் படம் தான் வேண்டும். அவரைப் பற்றி எழுதப் பட்டதை படிக்க முடியாது. ஏனென்றால், புத்தகங்களை வெறுக்கும் சமூகம் இது. அதனால் எம்ஜியார் பற்றிய புத்தகமே ஆனாலும் 500 பிரதிகள் தான் விற்கிறது. (ஐயா சாமி, ”நீர் பொய் சொல்கிறீர்; புத்தகம் 612 பிரதிகள் விற்றிருக்கிறது” என்று சொல்லி எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விடாதீர்கள். நான் ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஐநூறும் ஒன்றுதான்; ஆயிரமும் ஒன்றுதான். அந்தப் புத்தகம் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும்).
சரி, புத்தகம்தான் விற்கவில்லை. அதற்கு ஏதாவது மதிப்புரையாவது வந்ததா என்றால் அதுவும் இல்லை. இப்போது ரஜினியைக் கொண்டாடும் அளவை விட மிகப் பெரிய அளவில் தமிழ்நாடே கொண்டாடிய எம்.கே.டி.யைப் பற்றி எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அந்தமான் சிறைக்குச் சென்று திரும்பி, சொத்தையெல்லாம் இழந்து, கண் பார்வையும் பறிபோய் அவர் ஒரு அம்மன் கோவிலில் அமர்ந்து இருந்த போது ‘யாரோ குருட்டுப் பிச்சைக்காரன்’ என்று அவர் மடியில் காசு போட்ட சம்பவம் பற்றி அந்த நூலில் எழுதியிருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகம் இங்கே தமிழக வரலாற்றில் நடந்தேறிய சம்பவம் அது. அழுது அழுது, உருகி உருகி என் உயிரே கரைந்து போன நிலையில் எழுதினேன். ஒரு காலத்தில் தமிழக மக்களின் கடவுளாக இருந்தவர் எம்.கே.டி. அப்படிப்பட்டவருக்கு அந்த நிலை!
அவ்வையார் என்றே நம் மனதில் குடி கொண்டிருக்கும் கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய காதல் கடிதங்கள் அந்த நூலில் உள்ளன. அதனால்தான் அந்த நூலுக்கே தீராக் காதலி என்று பெயரிட்டேன். யார் ஐயா இதற்கெல்லாம் மதிப்புரை எழுதினீர்கள்? இதோ, இப்போது நானே அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்துக்கு ஒரு மதிப்புரை கூட வரவில்லை இன்று வரை.
சரி, கோபதாபங்களை விட்டு விட்டு தர்க்கரீதியாகப் பேசுவோம். நான் சினிமா விமர்சன நூல்களை ஐந்தாறு எழுதியிருக்கிறேன். பல்வேறு சர்வதேச இயக்குனர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். உதாரணமாக, Federico Fellini, Antonioni, Pasolini, Tarkovsky, Werner Herzog என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதுவரை தமிழில் யாருமே எழுதியிராத ஃப்ரெஞ்ச் இயக்குனர் Catherine Breillat, ப்ரஸீலிய இயக்குனர் Glauber Rocha பற்றியெல்லாம் எழுதி இருக்கிறேன். எல்லாம் கூகுளில் விபரம் தேடி எழுதியவை அல்ல; அவர்களின் படங்களைப் பலமுறை பார்த்து விட்டு அவை பற்றி அணுஅணுவாக விவரித்து எழுதியிருக்கிறேன். இன்று நான் சினிமா விமர்சனம் எழுதவில்லை என்று ஆதங்கப்படும் நணபர்கள் யாராவது கேதரீன் ப்ரேயாவின் படங்களைப் பார்த்தீர்களா? கிடைக்கவில்லை என்று சொன்னால் பொய். நான் ஜெமினி காம்ப்ளெக்ஸ் கடைகளில்தான் வாங்கிப் பார்த்தேன்.
ஆக, உங்களுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால், ”எப்பொழுதும் ரொப்புவேன்” என்ற தமிழ்ப் படத்தைப் பற்றி சாரு என்ன சொல்கிறார், என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதானே? அது நம்மால் ஆகாது. எந்திரன் மாதிரி மகா ஆபாசம் ஏதாவது வந்திருக்கிறதா? அதைப் பற்றி எந்த எழுத்தாளனும் வாயைத் திறக்க பயப்படுகிறானா? அப்போது நான் எழுதுவேன். இல்லாவிட்டால், தேவ்.டியைப் போல் ஒரு படம் வந்தால் எழுதுவேன். ஆனால் என் ஆலோசனை என்னவென்றால், நான் குறிப்பிட்டு எழுதியிருக்கும் சர்வதேசத் திரைப்படங்களை ஒவ்வொன்றாக நீங்கள் பார்க்க ஆரம்பித்தால் எந்தப் படத்தைப் பற்றியும் நீங்களே ஒரு முடிவுக்கு வந்து விடலாம். குரஸவா குரஸவா என்று தவளையைப் போல் கத்திக் கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர்களை மறந்து விட்டு, பெர்க்மனிலிருந்து தொடங்குங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்…
No comments:
Post a Comment