Tuesday, 5 March 2013

ஜீரோ டிகிரி பிரெஞ்சு பதிப்பு வெளியீடு!

a hermit in disguise of a writer…
September 13th, 2011
ஜனவரி 20 முதல் 24 வரை ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன்.  ஓரான் பாமுக், ஸல்மான் ருஷ்டி போன்ற சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் விழா இது.  இதில் நான் ஒரு மணி நேரத்துக்கு என்னுடைய புனைகதைகளில் இருந்து சில பகுதிகளை (ஆங்கிலத்தில்) வாசிக்க வேண்டும்.  எந்தப் பகுதிகளை வாசிக்கலாம் என்று என் எழுத்தை அறிந்த வாசகர்களிடம் ஆலோசனை கேட்கிறேன்.  ராஸ லீலாவிலிருந்து வாசிக்கலாம் என்றால் எந்தப் பகுதி? ஒரு புத்தகத்தை எடுத்து நமக்குள் வாசிப்பது வேறு; அதையே வேறொருவர் – அதாவது, அதை எழுதியவர் அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பது வேறு.  இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. ஏனென்றால், ராஸ லீலா 700 பக்க நாவல்.  அதை முழுவதும் வாசிக்கும் போது ஏற்படும் அனுபவமும் அதே நாவலின் முதல் அத்தியாயத்தை வாசிக்கும் போது ஏற்படும் அனுபவமும் எவ்வளவு வேறுபட்டதாக இருக்கும்?  ஆக, ஒரு மணி நேரம் வாசிக்கிறேன் என்றால் அதைக் கேட்பவர்களிடம் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.  இரண்டு முறை அல்மோஸ்ட் ஐலண்ட் கருத்தரங்கில் இப்படி வாசித்திருக்கிறேன்.  என்னுடைய வாசிப்பு தில்லியில் பெரிதும் பேசப்படும் ஒன்று.  ஒருமுறை வாசித்து முடித்த போது ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஓடி வந்து கட்டிப் பிடித்து “ழார் பத்தாயே (Georges Bataille) வந்து வாசித்தது போல் இருந்தது” என்று சொன்னார்.  அப்போது நான் வாசித்தது book of fuzoos என்ற சிறுகதையிலிருந்து ஒரு பகுதி.

அதையே கூட மீண்டும் வாசிக்கலாம். அதோடு கூட, ராஸ லீலாவிலிருந்தும் ஒரு பகுதியை வாசிக்கலாம்.  எந்தப் பகுதி என்று உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன்.  காரணம், என்னால் இப்போதைய நிலையில் எக்ஸைல் நாவலிலிருந்து வெளியே செல்ல முடியாது.  இன்னும் ஓரிரண்டு தினங்களில் முடிக்கும் தறுவாயில் இருக்கிறேன்.  அது எப்படி ஒரு நாவலிலிருந்து வெளியே வர முடியாது என்று நீங்கள் கேட்கலாம்.  அந்த நாவலைப் படிக்கும் போது உங்களுக்கே காரணம் புரியும்.  ஏனென்றால், உங்களாலும் அதைப் படித்து முடிக்கும் வரை அதை விட்டு வெளியே வர முடியாது.

இரண்டாவது விஷயம்.  ஸீரோ டிகிரியின் ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பு.  அந்த வேலை இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும் என்று தெரிகிறது.  இது வரையிலான மொழிபெயர்ப்பு பிரமாதமாக இருப்பதாக அதைப் படித்தவர்கள் சொல்கிறார்கள்.  மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு கணிசமான தொகை தர வேண்டும்.  இதன் பொருட்டு தங்களிடம் தானம் கேட்கிறேன்.  எந்த வேலையும் ஓசியில் நடப்பதில்லை.  உங்களால் முடிந்தால் தாருங்கள்.  இல்லையென்றால் என்னைப் பிச்சைக்காரன் என்று எழுதி மகிழாதீர்கள்.  அப்படி எழுதுவதால் எனக்கு எந்த அவமானமும் இல்லை.  தமிழ் எழுத்தாளனாக இருப்பது ஒரு அவலம்.  ஏனென்றால், ஒரு பத்திரிகையில் பத்து ஆண்டு காலம் ஒரு முழுநேர ஊழியனைப் போல் எழுதினேன்.  120 கட்டுரைகள்.  அத்தனையும் ஓசி. பத்திரிகையின் பெயரைச் சொன்னால் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார் அந்த நல்ல மனிதர்.

இப்படிப்பட்ட அவலமான சூழலின் காரணமாகத்தான் வாசகர்களாகிய உங்களிடம் தானம் கேட்கிறேன்.  என் சக எழுத்தாளர் ஒருவர் பொது மேடையிலேயே ”சினிமாக்காரர்கள் காலில் விழுவேன்” என்று பேசி, சினிமாக்காரர்களிடம் பல் இளித்து, அவர்களுக்குத் தொண்டூழியம் செய்து நல்ல பணம் சம்பாதிக்கிறார்.  அவர் மேல் தவறு சொல்ல மாட்டேன்.  என்னைப் போல் பிச்சைக்காரனாக வாழ்வதை விட அவர் செய்வது உத்தமம்.  எனக்குத்தான் அப்படிப்பட்ட ’உத்தமமான’ வேலைகளைச் செய்ய மனம் கூசுகிறது.  உயர்வான மதிப்பீடுகளுடனேயே வாழ்ந்து விட்டு திடீரென்று பிழைப்புக்காக வேசித்தனத்தில் இறங்க முடியாதல்லவா?

சில சாமியார்கள் அரிச்சுவடி யோகமுறைகளைக் கற்பித்து விட்டு ஒரு அமர்வுக்கு 5000 ரூபாயிலிருந்து 15,000 ரூ. வரை வசூலிக்கிறார்கள்.  அங்கே ஒரே நாளில் 20,000 பேர் கூடுகிறார்கள்.  எல்லாம் அரிச்சுவடி யோகம்.  ஆனால் நான் பொருள் தானம் கேட்டால் பிச்சைக்காரன் என்கிறார்கள்.  எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகத்தில் ஆசானாக மதிக்கப்பட வேண்டியவன்.  அவன் ஞான தானம் செய்கிறான்.  அதற்கு பதிலாக சமூகம் அவனுக்குப் பொருள் தானம் செய்ய வேண்டும்.  இது சமூகத்தின் கடமை.  இதை விட்டு விட்டு அவனைப் பிச்சைக்காரன் என்று ஏசுவது அந்த சமூகம் எவ்வளவு க்ஷீணம் அடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.  சில நண்பர்கள் என்னை சந்திக்கும் போது சொல்கிறார்கள்.  நான் இப்படிப் பணம் கேட்டு எழுதுவதைப் படிக்கும் போது மிகவும் லஜ்ஜையாக இருக்கிறதாம்.  அதனால் என் ப்ளாகையே படிப்பதில்லையாம்.  படிக்காவிட்டால் எனக்கு என்ன நஷ்டம்?  ஒரு கல்லூரிப் பேராசிரியரின் மாத ஊதியம் 60,000க்கு மேல்.  எழுத்தாளனின் சம்பளம் பூஜ்யம். தனியார் கல்லூரியில் 6,000 ரூ.தான் என்று எழுதாதீர்கள்.  நான் சொல்ல வருவது அது அல்ல.  கௌரவமாகவும், சுய மரியாதையுடனும் வாழ்ந்து கோபி கிருஷ்ணனைப் போலவும், தர்மு சிவராமுவைப் போலவும் யாருக்கும் தெரியாமல் நான் செத்துப் போகலாம்.  அதில் எனக்கு இஷ்டமில்லை.  தமிழ்நாட்டு எல்லையை விட்டு என் எழுத்து கடந்து சென்றாக வேண்டும்.  துறவிகளும் சந்நியாசிகளும் சுய கௌரவமும் சுய மரியாதையும் பார்த்திருந்தால் வெறும் கௌபீனத்தைக் கட்டிக் கொண்டு திருவோட்டைக் கையில் தூக்கியிருக்க முடியாது.  நானும் அப்படிப்பட்டவன் தான்.  A hermit in disguise of a writer…

வங்கிக் கணக்கு விபரம்:

K. ARIVAZHAGAN

ICICI account number: 602601 505045

T. Nagar Branch,

Chennai

அனுப்பியது பற்றி எனக்கு ஒரு வரி தெரியப்படுத்துங்கள்.  100 ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை.  அதில் தயக்கம் வேண்டாம்.

charu.nivedita.india@gmail.com

No comments:

Post a Comment