Wednesday, 13 March 2013

பிச்சை எடுப்பதில் புரட்சி செய்யும் சாரு!

பூனைக்கு யார் மணி கட்டுவது?

Dear Charu,.
I am jealous to hear that you are residing in a beautiful house with mango trees in posh Santhome! We will certainly meet next time I visit Chennai. I miss Chennai so much. I regret for having come to Bangalore. I live in a lovely house too but the city is dead.
I know that you appreciate my writing. You were the only one to have openly praised in writing my work. Do visit us when you come to Bangalore. How is life? Does writing bring in money? I heard that your books sold like hot cakes in the book fair ! Good to hear that. It also shows that the Tamil society is intellectually very vibrant. Isn't it fantastic to think how our language has not only survived through the ages but also has reinvented itself to remain young? Your Zero Degree is proof of that. All the best and cheers,
Vaasanthi.
***
டியர் வாஸந்தி,
உங்கள் கடிதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து விட்டு அதற்கு பதில் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் Intellectually என்ற வார்த்தையை எப்படித் தமிழ்ப் படுத்துவது என்று தெரியவில்லை. நீங்கள் இந்தக் கடிதத்தைத் தமிழில் எப்படி எழுதியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.
சரி, கடிதத்திற்கு வருவோம். சான் தோமேயில் என் வீடு ஒரு தனி வீடு. மாடி வீடு. பக்கத்து வீட்டில் (அது ஒரு அரண்மனை) ஒரு முன்னாள் மந்திரி.

என் வீட்டில் ஒரு தோட்டம். நிறைய மா மரங்கள். செம்பருத்தி, செவ்வரளி மரங்கள். தினமும் செம்பருத்திப் பூக்களும், செவ்வரளியும் பறித்து பாபா மற்றும் பிற தெய்வங்களுக்கு சமர்ப்பிப்பேன். இவற்றோடு வாழை, முருங்கை, கொய்யா, வேப்ப மரம், மாதுளை, கறிவேப்பிலை மற்றும் எனக்குப் பெயர் தெரியாத சில மரங்களும் உண்டு. என் மகன் கார்த்திக் பேஸ்கட் பால் நெட் ஒன்றும் கட்டியிருக்கிறான். அவந்திகா ஒரு டெனிகாய்ட் வலை மாட்டி விளையாடலாம் என்கிறாள். இவ்வளவு பெரிய ஆடம்பரத்துக்கு ஒரு எழுத்தாளன் எப்படி வாடகை கொடுக்க முடியும்?

வீட்டு வாடகை மட்டும் அல்ல; இன்னும் இது போன்ற பல்வேறு செலவுகளையும் என் நண்பர்கள்தான் கவனித்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் என்றால் என் எழுத்தைப் படித்து விட்டு நண்பர்களானவர்கள். போன் டாப் அப் செய்வதற்கு ஒரு நண்பர்; ’ காஸ்ட்யூம் ’ ஒரு நண்பர்; சினிமா டிக்கட் எடுத்துக் கொடுக்க ஒரு நண்பர்; இப்படி.

தமிழ்நாட்டில் ஏற்படும் மின் தடங்கல் மாதிரி இதில் அவ்வப்போது சில தடங்கல்கள் நேரும். சினிமாத் துறையைக் கவனித்துக் கொள்ளும் நண்பர் குரு பெங்களூரிலிருந்து அவருடைய சொந்த ஊருக்குச் சென்று விட்டார். அங்கே ஒரு நாளில் 18 மணி நேர மின்வெட்டு. மடிக்கணினி மூலமாக இ.டிக்கட் முன்பதிவு செய்து கடன் அட்டை மூலமாகப் பணமும் செலுத்தி விடுவார். இ.டிக்கட்டை எனக்கு மின்னஞ்சல் செய்வார். நான் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வேன். அவருடைய குக்கிராமத்தில் நடைமுறையில் இருக்கும் மின்வெட்டால் அந்த முறை அவரால் எனக்கு டிக்கட்டை அனுப்ப முடியவில்லை.

எனக்கோ ரொம்ப அவசரம். ஸ்லம்டாக் மில்லியனர் வெளியான அன்றே எழுதி பத்திரிகைக்குக் கொடுக்க வேண்டும். என்னிடமோ பரம்பைசா இல்லை. என் நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். அவர் மென்பொருள் துறையில் பெரிய அதிகாரி. எப்போதும் வேலையாகவே இருப்பார். ஆனால் இ.டிக்கட் எடுத்து அனுப்புவதில் எந்தச் சிக்கலும் இராது என்று எண்ணிச் சொல்லி விட்டேன். அவரோ அதற்காக மிகவும் பிரயாசைப் பட்டிருக்கிறார் என்று பிறகு தெரிந்தது. அவருடைய உதவியாளரை நேரடியாக சிட்டி செண்டருக்கு அனுப்பி, டிக்கட்டை வாங்கி வரச் செய்து, பிறகு மறுநாள் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் என் நண்பரே நேரடியாக வந்து கொடுத்து விட்டுச் சென்றார். என் வீட்டிலிருந்து சிட்டி செண்டர் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது. ஆனாலும் என்னிடம் டிக்கட்டுக்கான 120 ரூ. இல்லை. அதனால்தான் இவ்வளவு பெரிய அலைச்சல்.

ஆனால் வாழ்க்கை இப்படி ஒரேயடியாக பிச்சைக்காரத்தனமாகவும் இல்லை. சிட்டி லைஃபில் வரும் சார்லி சாப்ளின் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். மது அருந்துவதற்கும், மதிய உணவுக்கும் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பார். அதற்கு ஏது காசு என்கிறீர்களா? வீட்டு வசதித் துறை, ஜவுளித் துறை, தொலைபேசித் துறை மாதிரி அது ஒரு தனித்துறை. மதுத் துறை. அது நண்பர் நிக்கியின் வசம் உள்ளது. நாம் பாட்டுக்கு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சஸ்பென்ஸில் வைத்து விட்டுப் போய் விடலாம். அவர் வரும்போது கட்டிவிடுவார். அது என்னவோ தெரியவில்லை; சஸ்பென்ஸ் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

ஒருநாள் நானும், நிக்கியும், பிரபஞ்சனும் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் அமர்ந்து பேசிக் கொண்டும், இடையிடையே குடித்துக் கொண்டும் இருந்தோம். ஒரு மணிக்கு ஆரம்பித்தது மாலை நான்கு மணி ஆகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்சனை சந்தித்ததால் இருக்கலாம். நிக்கி வேலை இருக்கிறது என்று கிளம்பி விட்டார். நானும் பிரபஞ்சனும் இன்னும் கொஞ்சம் குடித்து விட்டு மெதுவாகக் கிளம்பலாம் என்று திட்டம். நிக்கி பார்மேனைக் கூப்பிட்டு சஸ்பென்ஸில் வைத்து விடும்படிக் கூறி விட்டுச் சென்றார்.

நாங்கள் ஆளுக்கு ஒரு சுற்று குடித்தோம். ஐந்து மணிக்குக் கிளம்பினால் வீட்டுக்குப் போய் செண்ட் கிண்ட் போட்டுக் கொண்டு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று விடலாம் என்றார் பிரபஞ்சன். அன்றைய தினம் மாலை எஸ். ராமகிருஷ்ணனின் எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருந்தன.
கிளம்பும்போது பார்மேன் பில்லை நீட்டினார். புது மேனேஜர் வந்து விட்டாராம். இனிமேல் சஸ்பென்ஸில் வைக்க முடியாதாம்.

“அதை நீர் நிக்கியிடம் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ”

பார்மேன் தலையைச் சொறிந்தார். புரிந்தது. நிக்கியிடம் பயம். இப்போது என்ன செய்வது என்ற கவலை தொற்றிக் கொண்டது. பில் தொகை 1500 ரூ. ஆகியிருந்தது. பிரபஞ்சன் பயந்து விட்டார்.
“ஐயோ, நாம் இரண்டு பேருமே மொத்தம் இரண்டு பெக் தானே குடித்திருப்போம்; இதற்கே 1500 என்றால் மத்தியானத்திலிருந்து குடித்ததற்கு? ”

“20,000 ரூ. ஆகியிருக்கும்; ஆனால் கவலை வேண்டாம்; நிக்கி இங்கே உறுப்பினர் என்பதால் 50 சதவிகிதக் கழிவு உண்டு; ஆக, 10,000 ரூ. ஆகியிருக்கும் ” என்றேன்.

அடுத்து என்ன செய்வது? என்னிடம் வீட்டுக்குத் திரும்ப ஆட்டோவுக்கு மட்டும் 50 ரூ. இருந்தது. அவந்திகாவுக்கு போன் செய்து கொண்டு வரச் சொல்லலாமா என்று யோசனை தோன்றியது. ஆனால் அதற்கு அவசியம் இல்லாமல் பிரபஞ்ச னிடமே தொகை இருந்தது. (மறுநாள் நிக்கி அந்தப் பணத்தை பிரபஞ்சனுக்குக் கொடுத்து அனுப்பி விட்டார்).

இந்தச் சம்பவத்திலிருந்து இடத்தை 10 Downing பப்புக்கு மாற்றி விட்டோம். அந்த இடமும் குஜாலாக இருக்கிறது. 75% கல்லூரி மாணவிகள்தான். டக்கீலா எல்லாம் சர்வசகஜமாக அடிக்கிறார்கள். அன்றைக்கு ஒருநாள் ஒரு பெண் டக்கீலா இன் ஃப்ளேம்ஸ் அடித்துக் கொண்டிருந்தாள்!

10 டவ்னிங்கில் அந்த ’ சஸ்பென்ஸ் ’ விவகாரம் எல்லாம் இல்லை. கையல காசு, வாயில விஸ்கி.
ஆனால் வேடிக்கையைப் பாருங்கள்; என்னதான் குடித்தாலும் நான் ‘அலெர்ட் ’ டாக இருந்தாக வேண்டும். அதாவது, வீட்டுக்குத் திரும்பிச் செல்ல ஆட்டோ செலவுக்கு நிக்கியிடமிருந்து 100 ரூபாயை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒருவேளை மறந்து போனால் வீட்டுக்கு நடந்துதான் வர வேண்டும். அலெக்ஸ் வந்திருந்தால் தப்பினேன். அவனிடம் கார் இருக்கிறது. வீட்டில் விட்டு விடுவான். அவன் வீடும், என் வீடும் ஒரே ஏரியா.

மன்னியுங்கள் வாஸந்தி, ’ எழுத்தில் நல்ல வருமானம் வருகிறதா? ’ என்ற உங்களுடைய சுவாரசியமான கேள்விக்கு நான் எங்கெங்கோ போய் விட்டேன்.

எழுத்தில் ஒரு வருமானமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கல்கியில் பல சிறுகதைகள் எழுதினேன். 75 ரூ. மணியார்டர் வரும். சமீபத்தில் குமுதம் சினேகிதியில் உலக சினிமா பற்றி ஒரு தொடர் எழுத அழைத்தார்கள். ஒரு கட்டுரைக்கு 500 ரூ. வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இணையதளத்தில் கோணல் பக்கங்கள் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் மூன்று கட்டுரைகள் கூட வரும். இப்படி இரண்டு ஆண்டுகள் எழுதினேன். கட்டுரைகளுக்கு உலகத் தமிழர்களிடையே எக்கச்சக்க வரவேற்பு. பத்திரிகையில் எழுத அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இணையதளத்திலேயே எனக்கு குட்பை சொல்லி விட்டார்கள். இவ்வளவு ஆரவாரமான பத்தியை திடுதிப்பென்று நிறுத்தியதற்குக் காரணம் கூட சொல்லவில்லை. முக்கியமான விஷயம் இது அல்ல; அப்படி நான் இரண்டு ஆண்டுகள் – வாரம் இரண்டு கட்டுரை, மூன்று கட்டுரை, சில வாரங்களில் நான்கு கட்டுரைகள் கூட எழுதினேன் – இப்படி எழுதியதற்கு ஒரு பைசா கூட தரவில்லை. இதைச் சொன்னால் இன்று யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மை.

ஆனந்த விகடனால் வாழ்ந்த எழுத்தாளர்கள் அநேகம். ஆனால் எனக்கு நேர்ந்த அனுபவம் வேறு. இருந்தும் ஒரு முக்கியமான விஷயம். ஆனந்த விகடன் மேல் எந்தப் பிழையும் இல்லை. அவர்கள் ஆரம்பத்திலேயே மிகத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள், இணைய இதழில் எழுதினால் பணம் தருவதில்லை என்று.

அதே கால கட்டத்தில் குமுதம் இணைய இதழில் ஒரு தொடர்கதை எழுத அழைக்கப்பட்டேன். அப்போது நான் ’ நதியின் சரிதம் ’ என்ற நாவலை எழுதி முடித்திருந்தேன். இந்த நாவலை எழுதியது ஒரு குட்டிக் கதை. அந்தக் கால கட்டத்தில் நான் வேலையையும் விட்டுவிட்டு சோற்றுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த நேரம். உண்மையிலேயே அடுத்த வேளை சோற்றுக்கு வழி இருக்காது. வாடகைக்கு வரும் வீட்டு ஓனரிடம் “வாடகையை அட்வான்ஸில் கழித்துக் கொள்ளுங்கள் ” என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக் கொண்டிருப்பேன். அதனால் அவசர அவசரமாக மூன்றே தினங்களில் அந்த நாவலை எழுதி முடித்தேன். உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் 72 மணி நேரத்தில் எழுதிய நாவல் அது.

குமுதம் இணைய இதழில் மூன்று அத்தியாயங்கள் வந்தன. உடனே பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தேன். அங்கேயும் ஆனந்த விகடனில் சொல்லியது போலவே இணைய இதழில் எழுதினால் பணம் கிடையாது என்று சொல்லி விட்டார்கள். உடனே நானும் தொடரை நிறுத்தி விட்டேன்.

பிறகு தினமலர் ரமேஷிடம் அந்த நாவலைக் கொடுத்தேன். அவருக்குப் பிடித்திருந்தது. வாரமலரில் முப்பது வாரங்களுக்கு மேல் வந்ததாக ஞாபகம். நாவலை ஆரம்பித்ததுமே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். எனக்கு மட்டும் அல்ல இந்தத் தொகை. அதில் எழுதும் எல்லோருக்குமே இப்படித்தான்.

இப்போது கூட வாரமலரில் இரண்டு வரியில் ஒரு ஜோக் எழுதினால் 500 ரூபாய் சன்மானம் கொடுக்கப் படுகிறது. (ஆனால் மாலைமுரசு, தினத்தந்தி போன்றவற்றில் இன்றைக்கும் ஒரு ஜோக்குக்கு கொடுக்கப்படும் தொகை 10 ரூ). தினமலரில் நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினால் ரூ. 5000/- அநேகமாக இந்தியாவிலேயே எழுத்தாளர்களுக்கு இவ்வளவு தொகை கொடுக்கும் ஒரே பத்திரிகை தினமலராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஹிண்டுவில் நடுப்பக்கக் கட்டுரைக்கு 3000 ரூ. தரப்படுகிறது.

இங்கே ஒரு மிக முக்கியமான விஷயம் கவனிக்கப்பட வேண்டும். பத்திரிகைத் தொழில் என்பது அவ்வளவு லாபகரமானது அல்ல. விளம்பரங்களால்தான் பத்திரிகைகளுக்கு லாபம். பல ஆண்டுகள் இந்தியா டுடே ஆசிரியராக இருந்த உங்களுக்கே அது தெரியும். இந்த நிலையில் ஒரு தமிழ் தினசரியில் ஒரு இஞ்ச் விளம்பரத்திற்கு வசூலிக்கப் படும் தொகை 10 ரூ. ஆனால் ஹிண்டுவில் ஒரு இஞ்ச் விளம்பரத்திற்கு வசூலிக்கப்படும் தொகை 100 ரூ. அப்படியானால் ஹிண்டுவில் வெளியாகும் நடுப்பக்கக் கட்டுரைக்கு தினமலரில் கொடுக்கப்படும் சன்மானத்தின்படி பார்த்தால் 50,000 ரூபாய் அல்லவா கொடுக்க வேண்டும்? ஆனால் அவர்கள் கொடுப்பது வெறும் 3000 ரூ.

இது இப்படியிருக்க, பிக் பாக்கெட், முகமூடிக் கொள்ளை, பகல் கொள்ளை போன்ற சமாச்சாரங்களும் இந்த விஷயத்தில் உண்டு. கோவையில் ஒரு பிரபல புத்தக வியாபாரி. அவர் பதிப்பாளரும் கூட. என்னுடைய ஸீரோ டிகிரி நாவல் விற்றது தொடர்பாக அவரிடமிருந்து எனக்கு 7000 ரூ. வர வேண்டும். எப்போது கேட்டாலும் புத்தகம் விற்கவில்லை என்றே பதில் வந்தது. 50, 60 போன் கால்கள் வீண். புத்தகப் பிரதிகளோ இரண்டே மாதத்தில் விற்று விட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் புத்தகம் விற்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். பல நண்பர்களை நேரில் அனுப்பிக் கேட்டேன். புத்தகப் பிரதிகள் இல்லை. அந்த நேரத்தில் எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்து ஆஸ்பத்திரியில் கிடந்தேன். பயங்கர பணக் கஷ்டம். போனில் விஷயத்தைச் சொல்லி அழாத குறையாக கெஞ்சினேன். இதோ அதோ என்றார்களே ஒழிய பணம் வரவில்லை. 100 போன் கால்கள் வீண். கிட்டத்தட்ட அந்தப் பணத்தை வாங்குவதற்கே நான் 7000 ரூபாய் செலவழித்திருப்பேன் என்று தோன்றியது. ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததும் இந்தப் பணத்தை வாங்கியே தீருவது என்று ஒரு வெறி ஏற்பட்டது. போலீஸில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினேன். பலன் இல்லை.

அந்த விற்பனையாளரின் நண்பரான நாஞ்சில் நாடனிடம் (அவர் எனக்கும் நண்பர்) சொல்லி பணத்தை அனுப்பும்படிச் சொன்னேன். அவர் சொல்லியும் பலன் இல்லை. பிறகு நான் ஒரு போன் போட்டு “நாளை காலைக்குள் பணத்தைத் தராவிட்டால் (எனக்கு மிகவும் நண்பரான ஒரு தினசரி ஆசிரியரின் பெயரைச் சொல்லி) அந்த தினசரியில் இந்த ஏமாற்று வேலை பற்றி இரண்டே நாட்களில் செய்தி வருமாறு செய்வேன் ” என்று மிரட்டினேன். மறுநாள் காலை ஒரு ஆள் நேரடியாக என் வீட்டுக்கு வந்து அந்த 7000 ரூபாயைப் பணமாகக் கொடுத்து விட்டுப் போனார்.
இந்தச் சம்பவத்தினால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அந்த நபர் மீது நான் 10 லட்ச ரூபாய் நட்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். நான் என்னுடைய வாழ்நாளில் எதற்க்காகவும் நீதி கேட்டு நீதிமன்றத்தின் வாசலைத் தட்டியதில்லை. என்னுடைய நீதிபதி பாபா, அல்லா மாலிக்.

இந்தச் சம்பவத்திலிருந்து என்னுடைய புத்தகங்களை நானே என் நண்பர்களுக்குப் பரிசுப் பொருளாகத் தரும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறேன். புத்தக விற்பனையாளர் யாருடனும் ஒரு ஹலோ கூட சொல்வதில்லை.

நீங்கள் ஆசிரியராக இருந்த இந்தியா டுடே ஒரு விதி விலக்கு. தினமலருக்கு அடுத்தபடியாக இந்தியா டுடேவிலிருந்துதான் எழுத்தாளர்கள் ஆயிரங்களில் சன்மானத்தைப் பார்த்தார்கள். (ஆனால் ஒரு விஷயம்; இந்தியா டுடே செக் வர ஆறு மாதம் ஆகிறது. தில்லி, பம்பாய், கல்கத்தா, லண்டன், நியூயார்க் என்று பல நகரங்களுக்குப் பறந்து கொண்டிருக்கும் அதன் முதலாளியிடம் செக்கில் கையெழுத்து வாங்க அவ்வளவு காலம் பிடிக்கிறது போலும். ஆனால் தினமலரில் ஞாயிறு அன்று படைப்பு வந்தால் செவ்வாய்க்கிழமை காலை செக் குரியரில் வந்து விடும். ஜோக்காக இருந்தால் 500 ரூ; கட்டுரை கதையாக இருந்தால் 5000 ரூ.)

புத்தக விழாவில் என்னுடைய புத்தகங்கள் ஹாட் கேக்குகளாக விற்றது பற்றி. உண்மைதான். ஆனாலும் வாஸந்தி, இதனாலெல்லாம் எழுத்தாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது. ஒரு கால் செண்டரில் வேலை பார்க்கும் இளைஞரின் மாத வருமானம் 60,000 ரூ.

என்னுடைய நண்பரும் மலையாள எழுத்தாளருமான புனத்தில் குஞ்ஞப்துல்லா சொன்ன ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. அவரிடமிருந்து ஒரு நாவல் வேண்டுமானால் அவருக்கு இரண்டு மூன்று மாதங்கள் ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை போட்டுக் கொடுத்து கவனித்துக் கொள்வார்களாம். குடியும் உண்டு என்று சொல்லத் தேவையில்லை. இங்கே 120 ரூபாய்க்கு சிட்டி செண்டர் ஐநாக்ஸ் ஹாலில் சினிமா பார்க்க நான் என்னுடைய நண்பர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஒரே ஒரு உதாரணம் கொடுத்து முடித்துக் கொள்கிறேன். அந்த எழுத்தாளர் சினிமா உலகில் ரஜினி எப்படியோ அப்படி எழுத்து உலகில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர். அவர் பெயரைச் சொல்ல வேண்டாம். ஏனென்றால், அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. ஜெயகாந்தன் கஞ்சா புகைப்பார்; அவருக்கு இரண்டு மனைவிகள். இது எல்லாமே திறந்த புத்தகம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் புகைப்பாரா, மது அருந்துவாரா, பெண் சகவாசம் உண்டா, அவருடைய நண்பர்கள் யார் – எதுவும் யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். அவரும் எங்குமே எழுதியது கிடையாது. எனவே அவர் காலமாகி விட்டாலும் அவரது அந்தரங்கத்தை எழுத வேண்டாம். ஆனால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது வருமானம் பற்றி நீங்கள் பிரஸ்தாபித்து விட்டதால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அந்த எழுத்தாளர் உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் இருந்த போது செலவான 5 லட்சம் ரூபாயைக் கட்டுவதற்கு அவரிடம் பணம் இல்லை. இதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை. ஒரு சிறிய அபார்ட்மெண்டும், ஒரு காரும்தான் அவருடைய சொத்து. வங்கிக் கணக்கு பூஜ்யம். பிறகு அந்தப் பணத்தை அரும்பாடுபட்டு அவரது மனைவி கட்டியிருக்கிறார்.

இதற்குக் காரணம், அவருடைய புத்தகங்களே கூட ஒரு சில ஆயிரங்கள்தான் விற்கின்றன. லட்சம் பிரதிகள் அல்ல.

அவருக்கே அந்த நிலைமை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்? இருந்தாலும் இந்த அளவுக்காவது நான் ஒரு Dandy யைப் போல் வாழ்வதற்கு என்னுடைய நண்பர்களே காரணம்; அவர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

உங்களுடைய அன்பு நண்பன்,
சாரு நிவேதிதா
22.2.2009.
6.00 p.m.
 
பின் குறிப்பு: சரி, இந்த விஷயங்களையெல்லாம் – படைப்புக்கு 75 ரூ அனுப்புவது எட்ஸெட்ரா – ஏன் எந்த எழுத்தாளரும் வெளியே சொல்வதில்லை ? சொன்னால் ப்ளாக்லிஸ்ட் செய்யப்படுவோம் என்ற பயம். எனக்கு அந்தப் பயம் இல்லை. ஏனென்றால், எனக்குப் புகழில் ஆர்வமில்லை.

No comments:

Post a Comment