Friday, 15 March 2013

சாருவிற்கு அமெரிக்காவில் ஒரு தத்துப்பிள்ளை!


காணாமல் போனவர்கள்…  October 30th, 2011

 “என்னைப் போல் அனாதையாக வாழும் ஆத்மாக்கள் பண்டிகை தினங்களில்தான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போகிறார்கள்.”
காலையில் ஒரு குறுஞ்செய்தி, முன்னூறுக்கும் மேற்பட்ட வாசகர்களிடமிருந்து வாழ்த்துக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட்ட உறுப்பினர்கள்..எல்லோரும் இருந்தும் தங்களுடைய எழுத்தில் இப்படி ஒரு வரி.
யோசித்தேன்.  குடும்பத்தை விட்டு, அமெரிக்காவில் வந்து மாதங்கள் ஆறு ஆகிவிட்டன.  தீபாவளியைத் தனியாகக் கொண்டாட வேண்டிய கட்டாயம்.  ஏறக்குறைய இதே எண்ணம் என்னுள்ளும் இந்நாளில் ஏற்பட்டது.  காலையில் ஒரு குறுஞ்செய்தி, முன்னூறுக்கும் மேற்பட்ட வாசகர்களிடமிருந்து வாழ்த்துக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட்ட உறுப்பினர்கள்..எல்லோரும் இருந்தும்… உங்களுக்கும் இதே எண்ணம் எனும்போது மனது கனத்துப் போனது.
சிலரால் கொண்டாடப்பட்டும், பலரால் விமர்சிக்கப்பட்டும், இளமை பொங்கும், சந்தோஷம் ததும்பும் எழுத்துக்கள் என்கிற வரையில் இருந்த என் பார்வை போய், ‘அடடா! இப்படி ஒருவரை எழுத வைத்து விட்டோமே!’ என்கிற வருத்தம் வந்து விட்டது.
இதற்காகவாவது, அமெரிக்காவில் இருந்து விரைவில் திரும்பி, பெங்களூர்-இல் இருந்து, சென்னைக்கு தங்கள் இல்லத்துக்கு அருகில் செட்டில் ஆகி இம்மாதிரித் தருணங்களில் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.  இறை அருளால் இது நிகழ்ந்தால் எங்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியே!
‘நாங்கள் இருக்கிறோம் சாரு…இன்று தொலைவில்…என்றும் நெஞ்சம் அருகில்..’
என்றும் அன்புடன்,
ரங்கநாதன் கோதண்டராமன்
மில்வாக்கி, விஸ்கான்சின்  .
அன்புள்ள ரங்கா,
எனக்கு ஒரு தோழி இருந்தார்.  பெங்களூரில் இருந்து கொண்டு சென்னையில் இருக்கும் எனக்கு டின்னர் ஆர்டர் செய்வார்.   லஸ் முனையில் உள்ள ஹல்வா கடையைக் கூட அவர்தான் எனக்கு அறிமுகம் செய்தார்.  அந்த ஹல்வா கடையில் மிக அருமையான வட இந்திய உணவு கிடைக்கும்.  தில்லியில் வெகுகாலம் இருந்ததனாலோ என்னவோ எனக்கு வட இந்திய உணவுதான் பிடிக்கும்.  பொதுவாகச் சொன்னால், எனக்கு ஐரோப்பிய உணவுதான் பிடிக்கும்.  அதுவும் என் வீட்டுக்கு அருகிலேயே உள்ள சேமியர்ஸ் சாலையில் உள்ள Anokhi  என்ற உணவகத்தில் மிகச் சிறப்பான ஐரோப்பிய உணவு கிடைக்கும்.  என்றாலும் சற்று விலை அதிகம்.  (பாஸ்தாவும் ஹெர்பல் தேத்தண்ணியும் குடித்தாலே 500க்கு மேல் ஆகி விடுகிறது. ஒரு ஏழை எழுத்தாளனுக்கு இது கட்டுப்படி ஆகுமா?  அதனால் அங்கே அடிக்கடி செல்வதில்லை).
ஆனால் பண்டிகை தினங்களிலும் அனோகிக்கும் ஹல்வா கடைக்கும் போக முடியுமா?
மேலே குறிப்பிட்ட தோழி இப்போது காணாமல் போய் விட்டார்.  என் வாழ்வில் அடிக்கடி இப்படி ஆண்களும் பெண்களும் காணாமல் போவது சகஜம் என்பதால் நானும் கண்டு கொள்ளவில்லை.  இருந்தாலும் ‘குட்பை’ சொல்லாமல் போய் விட்டாரே என்று தோன்றியதால் அவரை மிகுந்த சிரமப்பட்டு ஃபோனில் பிடித்துக் காரணம் கேட்டேன்.  “எனக்கு பழைய சாரு தான் பிடித்திருக்கிறது; இப்போதைய சாரு அல்ல” என்றார்.
காரணம் தெரிந்ததும் அமைதியானேன்.  எதற்கு இதை இங்கே சொல்கிறேன் என்றால், அவர் இருந்திருந்தால் பண்டிகை தினத்திலும் ஏதாவது உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருப்பார்.  ஆனால் அந்த ஒருவருக்காக நான் ஊர் வாயில் மாட்டிக் கொள்ள இனிமேல் தயாராக இல்லை. சமீபத்தில் கூட ஒரு படம் பார்த்தேன்.  ஊரே கொண்டாடிய படம்.  என்னால் இடைவேளை வரை கூட உட்கார முடியவில்லை.  இயக்குனர் ஃபோன் செய்து படம் எப்படி என்றார்.  காவியம் என்று சொல்லி விட்டு வந்தேன்.  எதற்கு வம்பு?  இல்லாவிட்டால் அவருடைய ஜென்ம எதிரி லிஸ்டில் என் பெயர்தான் முதலில் நிற்கும்.  என்னுடைய வேலை தமிழ் சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவது அல்ல.  வரும் நவம்பர் 10-ஆம் தேதி சென்னையில் Hay Festival-இன் துவக்க விழா நடக்க உள்ளது.  அதில் எக்ஸைல் நாவலிலிருந்து ஒருசில பக்கங்களை ஆங்கிலத்தில் வாசிக்க இருக்கிறேன்.  அந்த மொழிபெயர்ப்பு வேலைதான் எனக்கு முக்கியமே தவிர யார் எப்படிப் படம் எடுத்தால் எனக்கு என்ன?
ரங்கா, உங்கள் அன்புக்கு நன்றி.  நான் இருக்கும் இடத்தில் நீங்கள் வீடு கட்டிக் குடியேற உங்களுக்கு இறையருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.  அதற்கு இறையருள் நிச்சயம் தேவை.  இறையருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.  ஏனென்றால், இங்கே நான் வசிக்கும் மயிலாப்பூர் பகுதியில் ஒரு க்ரௌண்ட் மூன்று கோடி ரூபாய்.  இப்படிப்பட்ட இடத்தில் ஒரு தனி வீட்டில், மரங்கள் அடர்ந்த தோட்டத்துக்கு மத்தியில் வாழ வழி வகுத்த என் அய்யப்பனுக்கு தினந்தோறும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றைய தினம் பொருளங்காய் உருண்டை கொண்டு வந்து கொடுத்த வெங்கட்டுக்கு நன்றி.  கிருஷ்ணமூர்த்தி சேலத்தில் இருந்து அனுப்பிய தீபாவளி லேகியம் பிரமாதமாக இருந்தது.  அவந்திகாவே பாராட்டினாள்.  அவளிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்…
சாரு
பின்குறிப்பு: காணாமல் போனவர்கள் பட்டியலில் பழைய சாருவையும் சேர்த்துக் கொள்ளலாம்.  இன்னொரு விஷயம்.  முன்பு நல்லவனாக இருந்தேன். கெட்டவன் என்றார்கள்.  இப்போது கெட்டவனாக வாழ்கிறேன்.  நல்லவன் என்கிறார்கள்.  வினோதமான உலகம்!

No comments:

Post a Comment