முகமூடிகளை நம்ப வேண்டாம்…
March 18th, 2012
March 18th, 2012
என்னுடைய அனைத்து வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நான் எழுத்து வேலையில் சற்று பிஸியாக இருப்பதால், சில நண்பர்கள் என்னுடைய முகமூடியை அணிந்து கொண்டு என் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்தேன். இங்கே ஒரே ஒரு சாரு தான் இருக்கிறேன். நான் யாரையும் என் பிரதிநிதியாக நியமிக்கவில்லை. எனவே நீங்கள் என்னோடு தொடர்பு கொள்ள நினைத்தால் எனக்கு மெயில் எழுதுங்கள். என் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஒரு பிரபலம் என்பதால், என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் அத்தனை பேரோடும் புகைப்படம் எடுத்துக் கொள்வேன். அதை நான் மறுப்பதில்லை. அதனால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களெல்லாம் என் நண்பர்கள் என்று ஆகி விடாது.
மேலும், என்னுடைய எழுத்திலிருந்து குடி என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு குடித்துத் திரிபவர்களை நான் வெறுக்கிறேன். என் எழுத்தின் அடிப்படை குடி அல்ல. கடமையைச் செய்யாமல் குடித்து விட்டு விழுந்து கிடப்பவன் சமூக விரோதி. ஹெடோனிசம் என்பது குடிப்பது அல்ல; வாழ்க்கையைக் கொண்டாடுவது என்பது வெறும் குடி அல்ல. ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். வாசகர் சந்திப்புக்காக ஏற்காடு சென்ற போது இடைவெளியே இல்லாமல் சுமார் 30 மணி நேரம் டைப் பண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு அவசர எழுத்து வேலை. என் கூட இருந்த 50 பேரும் அதற்கு சாட்சி. சுரேஷ் ராஜமாணிக்கம் வீட்டில் எனக்கு காப்பியும் தின்பண்டங்களும் கொடுத்தார். அப்போது கூட டைப் பண்ணிக் கொண்டே தான் காப்பி குடித்தேன். அந்த dedication ஐயும், commitment-ஐயும் என்னிடமிருந்து கற்றுக் கொள்ளாமல் குடிப்பது மட்டுமே சாரு என்று அர்த்தப்படுத்திக் கொள்பவர்களை நான் வெறுக்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது போன்ற பொறுப்பற்ற போக்கிரிகளை நான் என்றுமே ஆதரிக்க மாட்டேன்.
மீண்டும் சொல்கிறேன். எனக்கும் வாசகர்களுக்கும் இடைத்தரகர்கள், ஏஜெண்டுகள், பிரதிநிதிகள் யாரும் கிடையாது. நேரடியாக என்னை அணுகுங்கள். தயாநிதி என்ற வாசகர் ஒரு வருடமாக என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. திடீரென்று ஒரு வாரத்துக்கு முன்பு பேசினார். மிகவும் கோபத்துடன் “ஒரு வருஷமா என்னய்யா பண்ணுனீர்?” என்றேன். அவர் சொன்ன பதில் என்னை திகைக்க வைத்தது. “சாரு, நீங்கள் பிஸி என்பதால் ——————————ஓடு (ஒரு நண்பரின் பெயர்) தினமும் பேசிக் கொண்டுதான் இருந்தேன்” என்றார். இந்த பதிலை இனிமேல் யாரும் என்னிடம் சொல்லாதீர்கள். எனக்கு யாரும் பிரதிநிதி கிடையாது. எனக்கு வரும் எல்லா மெயில்களுக்கும் நான் பதில் எழுதி விடுகிறேன்.
நான் எல்லா விதமான அதிகாரத்துக்கும் எதிரானவன். என் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலர் வாசகர்களிடையே நாட்டாமை செய்வதை நானே நேரில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன். நான் எவ்வளவு அடக்கமானவன் என்பதை என்னோடு நேரில் பழகியவர்கள் அறிவார்கள். தொண்டனுக்குத் தொண்டன் நான். அடியார்க்கு அடியான். இலக்கியம் படித்தால் உங்கள் பாதம் பணிபவன். அப்படிப்பட்ட என் பெயரைச் சொல்லிக் கொண்டு நாட்டாமையா? ஆனால் ஒன்றிரண்டு பேர் தான் இப்படி. மற்றபடி வாசகர் வட்டத்தில் மிக மிக ஆரோக்கியமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
எனவே, என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் முகமூடிகளின் பின்னால் போகாதீர்கள். எனக்கு எழுதுங்கள்.
"நான் எவ்வளவு அடக்கமானவன் என்பதை என்னோடு நேரில் பழகியவர்கள் அறிவார்கள். தொண்டனுக்குத் தொண்டன் நான். அடியார்க்கு அடியான். "
ReplyDeleteபிச்சை போடுபவர்களுக்கு நான் பிச்சைகாரன்
|| அப்போது கூட டைப் பண்ணிக் கொண்டே தான் காப்பி குடித்தேன். ||
ReplyDeleteஅடடை..அதிசயமாயிருக்கிறதே..
இது போன்ற சர்க்கஸ் வித்தைகளை துண்டு விரித்துக் கொண்டு செய்தாலே காசு குமியுமே..இணையப் பிச்சை எடுக்க வேண்டிய தேவையே இருக்காதே !!