Thursday, 4 April 2013

ராஜேஷ் கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ஜொள்ளு விட்ட அறிக்கி கூட்டம்!

பெண்களே இல்லாத உலகம்

ஹலோ சாரு,
எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட நாட்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உங்கள் இணையதளத்தில் வரும் பல விளம்பரங்களைப் பார்த்து ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற விளம்பரங்களை நான் விரும்புவதில்லை. இப்போதுதான் முதல் முறையாக விளம்பரங்களைக் கண்டு மகிழ்ச்சி அடையும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நிச்சயம் உங்கள் வாசகர்களில் பலரும் நான் அடைந்த உணர்வையே அடைந்திருப்பார்கள்.
இப்போதெல்லாம் நான் தமிழ் நாவல்கள், சிறுகதைகள் எதுவும் படிப்பதில்லை. ஆங்கிலத்திலும் படிப்பதில்லை; எப்போதாவது பொழுதே போகவில்லை என்றால் படிப்பேன். அவ்வளவுதான். இந்த நிலையில் உங்கள் எழுத்தைப் படிப்பதால் மட்டும்தான் நான் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டைப் பற்றியும், அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.
அங்கே இருக்கும் என் பெற்றோருடன் தினமுமே தொலைபேசியில் பேசுகிறேன். இருந்தும் அந்த பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகத்தான் தோன்றியது. ஆனால் உங்கள் எழுத்தைப் படிப்பதன் மூலம்தான் நான் இன்னமும் தமிழ்நாட்டில் இருப்பதான உணர்வு ஏற்படுகிறது. தமிழ்நாட்டை விட்டு இங்கே வந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன; அங்கே எனக்கு நண்பர்களும் யாரும் இல்லை. இந்த நிலையில் இந்த ரசாயன மாற்றம் எப்படி என் மனதில் ஏற்படுகிறது என்றே புரியவில்லை.
உங்கள் எழுத்திலிருந்து இந்தக் காலத்து இளைஞர்களின் போக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. அது எனக்குக் கவலையையும் அதிர்ச்சியையும் தருகிறது. பத்து ஆண்டுகளில் இவ்வளவு மாற்றமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னை என் மக்களோடும் மண்ணோடும் இணைக்கும் உங்களுக்கு என் நன்றி.
பிச்சாவரத்தில் புகைப்படங்களைக் கண்டு நானும் அங்கு இல்லையே என்று பொறாமை கொண்டேன். அது ஒரு அற்புதமான இடம். நீங்களெல்லாம் என்ன ஆட்டம் ஆடியிருப்பீர்கள் என்பதை யூகிக்க முடிகிறது. நான் இந்தியாவில் இருந்த போதே உங்களைத் தெரிந்து கொள்ளாமல் போனேனே என்று இருக்கிறது.
Again I wanted to say, how good a work your website team is doing.
நன்றி.
ஜெயந்தி, Charlotte, USA.
---------------------------------------------------------------------------------
நன்றி ஜெயந்தி. என்னுடைய பத்து புத்தகங்களில் ஒன்றை உங்களுக்கு சமர்ப்பணம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் வெளி வந்திருக்கும் என்னுடைய பழைய எழுத்துக்களை நான் தொகுத்துக் கொண்டிருந்த போது வேலை மிகுதியின் காரணமாக என்னால் அவற்றைத் தட்டச்சு செய்ய முடியாமல் போனபோது நீங்கள்தானே உடனுக்குடன் எல்லாவற்றையும் டைப் செய்து அனுப்பி வைத்தீர்கள் ? அந்த நன்றிக்காகவே அப்படி ஒரு புத்தகத்தை சமர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால் குட்டிக்கதைகளை எழுதி மனம் ரணமாகி ஒரு மாதிரி மந்திரித்து விட்ட நிலையில் இருந்ததால் பத்து புத்தகங்களையும் ஆண்களுக்கே சமர்ப்பணம் செய்து விட்டேன். இதனால் ரொம்ப வருத்தமடைந்தது அலெக்ஸ்தான். விடுங்கள், அடுத்த கலாட்டாவின் போது ஜமாய்த்து விடுகிறேன்.
சரி, என்னிடம் லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி நான் கையால் எழுதிய காகிதங்கள் உள்ளன. சுமார் 300 பக்கங்கள் இருக்கும். கணினியில் தமிழ் டைப்பிங் வசதி இல்லாத போது கையால் எழுதியது. அதை நீங்கள் டைப் செய்து அனுப்ப முடியுமா? அவசரம் இல்லை. மெதுவாக அனுப்பினால் போதும்.
அடுத்து, இந்த விளம்பர விஷயம். என் நண்பர் ஒருவர். அவருடைய பத்திரிகை இணையதளமாகவும் வருகிறது. அதில் பல விளம்பரங்கள் உள்ளன. அது பற்றிப் பேச்சு வந்த போது “அதுக்காக நாம ஒன்னுமே பண்றதில்ல; ஏதோ விளம்பரம் வருது; போடுறோம்; அதுபாட்டுக்க மாசம் பன்னெண்டு லட்சம் அனாமத்தா வருது ” என்றதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. கையில் பணம் இல்லாமல் நான் மூன்று மாதமாக நான் சாப்பிட்டே ஆக வேண்டிய மாத்திரைகளைக் கூட சாப்பிடவில்லை. நானும் யார் யாரிடமோ விளம்பரம் கேட்டு சலித்துப் போய் விட்டேன். அதனால்தான் தடாலடியாக தங்கவேலிடம் சொல்லி விளம்பரங்களுக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் நல்லியின் விளம்பரம் வேறு; மற்ற விளம்பரங்கள் வேறு. நல்லியின் விளம்பரத்தை நீங்கள் பார்த்தாலும் சரி, பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டாலும் சரி, எனக்குப் பணம் வரும். ஆனால் மற்ற விளம்பரங்களை நீங்கள் சொடுக்க வேண்டும். அதுவும் எப்படி? உதாரணமாக, ஷாதி விளம்பரத்தை தினமும் 50 பேர் சொடுக்கினால் எனக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். சரியா? தங்கவேலிடம் எத்தனை பேர் சொடுக்குகிறார்கள் என்று விபரம் கேட்டேன். சிவாஜி கணேசன் குரலில் ” வாரத்துக்கு 30 பேர் ” என்றார். ரொம்ப நல்லது என்று போனை வைத்து விட்டேன். அன்று இரவு கனவில் நான் யார் யாருடைய விரலையோ முறிப்பது போல் வந்து அரண்டு பயந்து எழுந்து விட்டேன்.
ஒரு மூன்று மாதம் பார்த்து விட்டு எல்லா விளம்பரங்களையும் தூக்கி விடுவேன்; கவலைப்படாதீர்கள். என் நண்பருக்கு பன்னெண்டு லட்சம்; எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? ட்டி.ஓ.வி.
***
நீங்கள் எழுதியிருக்கும்படி நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் பக்கம் திரும்பியிருப்பீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது ஜெயந்தி. இதே போல் பல வாசகிகள் கூறுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை. இந்திய வாழ்க்கை அப்படி. இந்திய வாழ்க்கை முறை பெண்களைச் சுதந்திரமாக வாழ அனுமதிப்பதில்லை.
அந்தப் பிச்சாவரம் கார்னிவலையே எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் மொத்தம் 49 பேர் கூடியிருந்தோம். படகோட்டும் தோழர்கள் 6 பேர். இன்னும் ஒருவர்தான் பாக்கி. அவர் பெயர் ராஜேஷ். அவர் தன்னுடைய தோழியோடு வருவதாகச் சொல்லியிருந்தார். தோழி பெங்களூரில் இருக்கிறார். ராஜேஷ் சென்னை. ராஜேஷ் அவருடைய தோழியோடு வரப்போகும் விஷயம் எங்கள் 49 பேருக்கும் தெரியும். என்னைத் தவிர யாரும் ராஜேஷை அதுவரைப் பார்த்ததில்லை. இருந்தாலும் எல்லோருக்கும் ராஜேஷ் மீது ரொம்பப் பிரியமாகி விட்டது. எல்லோரும் வழி மேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராஜேஷ் ராஜேஷ் என்று அவருடைய பேச்சாகவே கிடந்தது. நான் சாதாரணமாக “என்ன இன்னமும் ராஜேஷைக் காணோம்? ” என்று கேட்டதற்கு 48 பேரும் சேர்ந்து பலத்த ‘ஓ ’ போட்டார்கள். கடைசியில் அண்ணன் தனியாக வந்தார். எல்லோருக்கும் முகமே சுண்டி விட்டது. எல்லோரும் அவர் மீது கொலை வெறியில் இருந்தார்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் யாருமே வாய்விட்டுக் கேட்டுக் கொள்ளவில்லை. எனக்குக் கேட்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் யாருமே கேட்காததால் நானும் மௌனமாகி விட்டேன். தீவுக்குச் சென்று ஒரு ரெண்டு ரவுண்டு முடிந்ததும் சீனிவாசன் ஆரம்பித்தார்.
“எங்கே ராஜேஷ் உங்களுடைய கேர்ள் ஃப்ரெண்ட்? ”
ஆங்காங்கே நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் பேசிக் குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் ராஜேஷைப் பார்த்தார்கள். ராஜேஷ் “ஒன்றரை நாள் பயணம் செய்ய வேண்டும் என்பதால் வரவில்லை ” என்றார். அதோடு அந்தப் பேச்சு முடிந்து விட்டது. சீனிவாசன் மட்டும் என் காதருகே வந்து “காலம் கலிகாலமாகி விட்டது பாருங்கள்; பெங்களூரிலிருந்து மெட்ராஸ் ஒன்றரை நாள் பயணம் என்று கூசாமல் பொய் சொல்கிறான் பாருங்கள் ” என்றார். ” அதற்குப் போய் ஏன் சீனிவாசன் அவன் இவன் என்கிறீர்கள்? ” என்றேன். சீனிவாசன் முறைத்ததால் நான் வேறு பக்கம் நகர்ந்து விட்டேன்.
யோசித்துப் பாருங்கள் ஜெயந்தி, ஒரு பௌர்ணமி நிலவில் ஒரு தீவில் 55 தடியர்கள் (ஸ்லிம்மான உடல்வாகு கொண்ட நண்பர்கள் மன்னிக்கவும்) விதவிதமான உணவு, மது வகைகளோடு கூடிப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஒரு பேச்சுக்கு ஒரு தோழி கூட இல்லை. அட, அந்த ராஜேஷ் அவருடைய பாட்டியை அழைத்து வந்திருந்தால் கூட அவரோடு கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கலாம்.
எனக்கு என்னவோ இந்த உலகத்திலிருந்த பெண்களெல்லாம் மாயமாக மறைந்து ஆண்கள் மட்டுமே அனாதையாக விடப்பட்டது போல் தோன்றியது. வேறு எந்த தேசத்திலும், எந்தக் கலாச்சாரத்திலும் இப்படி ஒரு கார்னிவலுக்கு 50 ஆண்கள் மட்டுமே கூடுவார்கள் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. பாரிஸில் என் நண்பர் ஒருவர் என்னுடைய பிறந்த நாள் அன்று இரவு ஒரு விருந்து கொடுத்தார். சாப்பாடு இல்லை; வெறும் மதுதான். சுமார் 60 பேர் வந்தார்கள். தமிழர்கள் என்று சொன்னால் விருந்தளித்த நண்பர், நான், என்னுடைய நண்பரும் எழுத்தாளருமான கலாமோகன் மட்டும்தான். மற்ற அனைவரும் வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 30 பேர் பெண்கள். காலை ஐந்து மணி வரை ஒரே கூத்தும் பாட்டுமாக இருந்தது.
***
20.2.2009.
1.00 p.m.

No comments:

Post a Comment