மனுஷ்ய புத்திரனின் கோபமான கடிதமும் ஒரு வருத்தமான பதிலும்
January 7th, 2011
January 7th, 2011
உங்கள் புத்தகங்கள் கிடைக்காதது தொடர்பாக
அன்புள்ள சாரு
சமீப காலமாக உங்கள் வலைத் தளத்தை திறக்கவே எனக்கு பயமாக இருக்கிறது. உங்கள் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று உங்கள் வாசகர்கள் எழுதும் கடிதங்கள் பஞ்சகாலத்தில் அரிசிக்கும் கோதுமைக்கும் மக்கள் கூக்குரலிடுவதை எனக்கு நினைவுவூட்டுகிறது. இவற்றை படிக்கும்போது இதில் இரண்டு விதமான உண்மைகள் இருக்கவாய்ப்பிருக்கிறது. ஒன்று நான் மிகவும் மோசமான ஒரு பதிப்பாளனாக இருக்கவேண்டும் அல்லது உங்கள் வாசகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களில் சிலர் உங்களை ஒரு குழந்தையை நடத்துவது போல நடத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சுவாரசியம் வந்துவிட்டது.
சில எளிய உண்மைகளை இங்கே சொல்ல கடமைப்பட்டிருகிறேன்.
தமிழ் நாட்டில் 500க்கும் மேற்பட்ட புத்தக்கடைகள் இருக்கின்றன. எந்தக் கடையிலும் எந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகமும் ஒருபோதும் இருந்ததில்லை. அது கற்பனையில்கூட சாத்தியமாகாத ஒன்று. பல கடைக்காரர்களுக்கு சமீபத்தில் என்ன புத்தகம் தமிழில் வந்திருக்கிறது என்றுகூடத் தெரியாது. அவர்கள் தெரியவந்து அவற்றை ஆர்டர் செய்யும் வரை நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது. அல்லது எமது விற்பனை பிரதிநிதிகள் அவர்களை அணுகி அறிவுறுத்தும்வரை அந்தப் புத்தகங்கள் கடைக்கு போகாது. இதெல்லாம் சற்று கால அவகாசம் பிடிக்கக் கூடியவை. ஹிக்கிம் பாதம்ஸ், லாண்ட் மார்க் போன்ற நிறுவங்களில் நாம் புத்தக சாம்பிள் கொடுத்து அதன் பிறகு ஆர்டர் அளித்த பிறகே புதிய புத்தகங்களை சப்ளை செய்யமுடியும். அது கடைக்கு விற்பனைக்கு வர மேலும் சில நாட்கள் ஆகும். புத்தகம் காலியானாலும் உடனே அதற்கு மட்டும் ஆர்டர் தர மாட்டார்கள். ஒரு மாதம் கழித்து மொத்தமாக ஆர்டர் தரும்போதே காலியான புத்தகங்களுக்கும் சேர்த்துத் தருவார்கள். யார் கண்ணீர் விட்டுக் கதறினாலும் புத்தகம் சில நாட்களுக்கு இல்லாமல்தான் இருக்கும்.
அடுத்ததாக மறுபதிப்பு சம்பந்தமான பிரச்சினை. எந்தப் புத்தகமும் காலியான உடனேயே மறுமதிப்பு கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியமில்லை. புதிய புத்தகங்கள் அச்சிடும் நேரத்தில் அச்சகத்தார் மறுபதிப்புகளை தாமதப்படுத்துகின்றனர். வேண்டும் என்று செய்வதில்லை. மணி ஆஃப் செட்டில் ஒரு மாதமாக இரண்டு மிஷின்கள் உயிர்மைக்காக மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வளவு வேலைகள் குவிந்து போயிருக்கின்றன. எந்த முக்கியமான சர்வதேச எழுத்தாளரின் எல்லா புத்தகங்களையும் போய் புத்தகக் கடைகளில் கேட்டுப் பாருங்கள். எல்லாம் உடனே கிடைக்கிறதா பார்ப்போம். இதெல்லாம் இந்தத் தொழிலின் தவிர்க்கவியலாத விதிகள்.
அப்புறம் உயிர்மை ஆன்லைனின் உங்கள் புத்தகங்கள் கிடைக்காதது தொடர்பாக எழுதப்படும் புகார்கள். கடந்த இரண்டு வாரங்களாக உயிர்மை ஏராளமான நூல்களை பதிப்பித்து வருகிறது. தொடர்ச்சியான நூல்வெளியீடுகள் தொடர்பான வேலை நெருக்கடிகளும் நூல்களுக்கு இறுதிவடிவம் கொடுத்து செப்பனிடும் வேலகளும் ஒன்று சேர்ந்து உயிர்மையின் சிறிய குழு இரவு பகலாக தூக்கமின்றிப் போராடி வருகிறது. ஆன்லைனில் அவற்றை பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் இல்லாததுதான் காரணம். யாரோ ஒரு ஆன்லைனில் புத்தகம் விற்பவர் உங்கள் கூட்டத்திற்கு வந்து உங்கள் புத்தகங்களை ஒரு செட் வாங்கிக் கொண்டுபோய் அதன் அட்டைப் படத்தை ஸ்கேன் செய்து தமது தளத்தில் போட்டுவிட்டு எங்களிடம் சாருவின் புதிய புத்த்கங்கள் கிடைக்கின்றன் என்று சொல்வது வேடிக்கை. அவருக்கு அது மட்டுமே வேலை. உயிர்மை ஒரு பதிப்பகம். ஒரு அமைப்பு. உங்கள் புத்தகத்தை சீராக பதிப்பித்து, அதற்கு விழா எடுத்து இதே காரியத்தை அடுத்தடுத்து வேறுபல எழுத்தாளர்களுக்கும் செய்யும் ஒரு அமைப்பினால் சில்லரை விற்பனையாளரோடு போட்டு போடமுடியாது. எங்களுக்கு எல்லாவற்றுக்கும் கொஞ்சம் அவகாசம் தேவையாக இருக்கிறது. பொத்தாம் பொதுவாக எழுதப்படும் இது போன்ற ஒப்பீடுகள் எனக்கு ஆழ்ந்த மன வருத்ததை அளிக்கின்றன.
சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள்? உயிர்மை அதை வெளியிட்ட பிறகு 2 மாதம் அச்சில் இல்லாமல் போனால் ஏன் உங்களை தொடர்ந்து பதட்டப்பட வைக்கிறார்கள்? 2 மாதம் காத்திருந்தால்தான் என்ன? நாம் அப்படி காத்திருந்து தேடி எவ்வளவோ புத்தகங்களை படிக்கவில்லையா? குமுதமும் விகடனும் கிடைப்பதுபோல உங்கள் புத்தகங்கள் எல்லா இடத்திலும் கிடைக்கும் என்று நம்பும் வாசகர்களை நான் எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. குமுதம் விகடன்கூட போன வார இதழை இந்தவாரம் வாங்க நினைத்தால் நீங்கள் வாங்கமுடியாது. நூலகத்திற்கோ பழைய புத்தக கடைக்கோ தேடிப்போக வேண்டும்.
இன்னும் பத்து நாளில் சென்னை புத்தக கண்காட்சி முடிந்துவிடும். இன்னும் ஒருவாரத்திற்குள் உங்களது எல்லா புத்த்கங்களும் உயிர்மை ஆன்லைனில் விற்பனைக்கு வந்துவிடும். வரும் மாதங்கள் முழுக்க காரைக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், கோவை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, வேலூர் என எங்கெல்லாம் புத்தக் கண்காட்சிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் புத்த்கங்களை தூக்கிகொண்டு அலைவேன். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 ஆயிரமோ 10 ஆயிரமோ நவீன எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்கும். அதைப் பற்றி எனக்கு எந்தக் களைப்போ வருத்தமோ இல்லை. இது சூழலோடு செய்யும் யுத்தம். இதை நான் வாழ்நளெல்லாம் தொடர்ந்து செய்வேன்.
சென்னை புத்தக் கண்காட்சியின் முதல் நாள் நான் உள்ளே நுழைந்ததும் யாரோ ஒருவர் காமரூபக் கதைகள் கிடைக்கவில்லை என்று உங்களிடம் புகார் செய்துகொண்டிருந்த்தார். நீங்கள் மிகவும் வருத்ததுடன் அந்தப் புகாரை என்னிடம் கொண்டுவந்தீர்கள். நான் எரிச்சலுடன் அங்கிருந்து உடனே கிள்ம்பிப் போய்விட்டேன். அடுத்த நாள் காலையில் 200 பிரதிகள் காமரூபக் கதைகள் கடைக்கு வந்து அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ராஸலீலா பைண்டிற்கு வந்துவிட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் கடைக்கு வந்துவிடும்.
சுஜாதா அவருடைய புத்தகங்கள் கிடைப்பது தொடர்பாக அவருக்கு எழுதப்படும் கடிதங்களை எனக்கே அனுப்புவார். அவற்றை பகிரங்கமாக வெளியிடுவது இந்தப் பிரச்சினையில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் புரியாத வாசகர்களிடம் பதிப்பகம் குறித்த தப்பண்ணெங்களை உருவாக்கும். சுஜாதா பின்பற்றிய அதே நடைமுறைதான் ஒரு எழுத்தாளன் அவனது பதிப்பாளனுக்கு செய்யக் கூடிய நியாயம் என்று நினைக்கிறேன். உங்கள் புத்தகங்களை முதன்முதலாக உலகெங்கும்கொண்டு சேர்த்தவன் என்ற முறையில் இதை உங்களிடம் கோருவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. மேலும் உங்களுடை பணி புதிய நாவலை எழுதுவதே தவிர ஒரு தமிழ் பதிபாளனின் துயரமான தலைவிதியை பகிர்ந்துகொள்வது அல்ல.
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
– uyirmmai
11/29subramaniyan street,
abiramapuramchennai-60018
phone:91-4424993448mobile:9444366704
website:www.uyirmmai.com
மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு விளக்கம்:
தாங்கள் இது சம்பந்தமாக என் மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பது போன்ற கடிதங்களை முதலில் நான் உயிர்மைக்குத்தான் அனுப்பிக் கொண்டிருந்தேன். பிறகு அவற்றைப் பிரசுரித்து உயிர்மை முகவரியையும் மற்ற இடங்களில் கிடைக்கும் விபரங்களையும் சேர்த்தே கொடுத்து வருகிறேன். உயிர்மை பதிப்பகத்துக்கு இதனால் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றால் தினமும் தங்களை நேரில் சந்திக்கும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இப்படிப் பதிவேற்றம் செய்வதை நிறுத்தியிருப்பேன். நேரில் சொல்லித் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு விஷயத்துக்கு இப்படி பகிரங்கக் கடிதம் எழுதி என்னைத் திட்டியிருக்க வேண்டாம். நான் அந்தக் கடிதங்களை வெளியிட்டு கிடைக்கும் விபரங்களையும் தெரிவிப்பதற்குக் காரணம், மற்றவர்களும் இது பற்றித் தெரிந்து கொண்டு என் உயிரை எடுக்க வேண்டாம் என்பதற்காகத்தான். மேலும், தேவரீர் சொல்வது போல் நான் நாவல் மட்டும் எழுதிக் கொண்டிருக்கவில்லை. என் வாசகர்களோடு தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறேன். அதில் தங்களுடைய பதிப்பகத்துக்கு ஏதேனும் என்னால் கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தால் தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். விஜய் டிவிகாரர்களிடமே மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போது உங்களிடம் கேட்பதில் என்ன தவறு? இன்னமும் என் சிற்றறிவுக்கு விளங்காத விஷயம் என்னவென்றால், நேரிலேயே சொல்லித் தவிர்த்திருக்க வேண்டிய விஷயத்துக்கு ஏன் இவ்வளவு நேரத்தை நாம் இருவரும் விரயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே எனக்கு எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத அடிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு விருந்துக்குப் போனால் கூட நிம்மதியாக இருந்து சாப்பிட்டு விட்டு வர முடியாமல் பேர் ஊர் தெரியாதவர்களெல்லாம் என்னை அசிங்கப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் தேவரீரின் பதிப்பகத்துக்கு என்னால் கெட்ட பெயர் என்கிறீர்கள். எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.
வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உயிர்மை பற்றிய ஒரு விளம்பரம் நம் இணையதளத்தின் முகப்பிலேயே இருக்கிறது. அங்கே சென்று புத்தகங்களைக் கேட்காமல் ஒரு எழுத்தாளனான என்னிடம் வந்து புத்தகம் கிடைக்கவில்லை என்று அழுதால் நான் என்ன செய்யட்டும்? ஏற்கனவே என்னை ஒரு மனிதனாக மதித்து நான் ஹலோ சொன்னால் மூஞ்சியைத் திருப்பிக் கொள்ளாமல் பதிலுக்கு ஹலோ சொல்லும் ஒரே எழுத்தாள நண்பர் மனுஷ்ய புத்திரன் தான். இப்போது நீங்கள் அதையும் கெடுக்கிறீர்கள். அதோடு, மனுஷ்ய புத்திரன் சொல்லும் ஒரு முக்கிய விஷயத்தை கவனியுங்கள். திருப்பூரிலோ, நெய்வேலியிலோ, பாண்டிச்சேரியிலோ புத்தகக் கண்காட்சி நடந்தால் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது. இது போன்ற அவலமான தேசத்தை உலகிலேயே காண முடியாது.
இனிமேல் புத்தகம் கிடைக்கவில்லை என்று எனக்கு வரும் நான்சென்ஸ் கடிதங்கள் இணையதளத்தில் இடம் பெறாது. உயிர்மைக்கும் அவற்றை அனுப்பி வைக்கப் போவதில்லை. மேலும், மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு முக்கிய விளக்கம். என் புத்தகம் கிடைக்காவிட்டால் அது பற்றி எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. உங்களிடம் நான் பத்தாயிரம் முறை விளக்கியபடி என் புத்தகங்கள் குறைந்த பட்சம் 50,000 பிரதிகள் விற்றால்தான் புத்தக விற்பனை பற்றியே நான் யோசிப்பேன். என்னைப் பொறுத்தவரை என் புத்தகங்கள் 1000 பிரதி விற்றாலும் 5000 பிரதி விற்றாலும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. 50,000ஐத் தொட்டால் சொல்லியனுப்புங்கள். உட்கார்ந்து பேசுவோம்.
சாரு
7.1.11.
3.39 p.m.
No comments:
Post a Comment