சில தினங்களுக்கு முன்பு பாலா போன்
செய்தான். வயது 24. என் மகன் கார்த்திக்கின் நண்பர்கள் அனைவரும் என்னை
அங்கிள் என்று அழைப்பதால் அவர்களுடன் நெருங்க முடிவதில்லை. ஆனால் பாலா
அப்படி அல்ல. பெயர் சொல்லியே அழைப்பான். இவ்வளவுக்கும் அவனுடைய அம்மாவின்
மூலம் நண்பனானவன் பாலா. ஒருநாள் என் நண்பர் ஜோவுக்கு போன் செய்து செருப்பு
வாங்க வேண்டும்; எங்கே போகலாம் என்று கேட்டேன். அவர் பாட்டா ஷோ ரூம்
இருக்கும் இடத்தைச் சொன்னார். என் எழுத்தின் மிகத் தீவிர வாசகராக
இருந்தும், ரெமி மார்ட்டின் குடித்தும், Calvin Klein ஆடைகள்
அணிந்திருந்தும் இப்படி பாட்டா பெயரைச் சொல்லி விட்டாரே என்று அன்றைய நாள்
முழுதும் எனக்கு விசனமாகப் போனது. எத்தனை முறை எழுதியிருக்கிறேன், எனக்கு
இந்த ஹமாம் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், பனியன், பாக்கெட்டில் சொருகிய
ரெனால்ட் பேனா போன்ற மிடில் க்ளாஸ் விஷயங்களெல்லாம் பிடிக்கவே பிடிக்காது
என்று. ஜோ மறந்து விட்டார். காரணம், வயது. ஜோவின் வயது 35. உடனே
பாலாவுக்கு போன் செய்தேன். ஆழ்வார்ப்பேட்டையில் காப்லர் செல்லுங்கள்
என்றான்.
சில தினங்களுக்கு முன்பு “இன்று ஐ.பி.எல்.
மேட்ச் இருக்கிறது; எங்கேயாவது போய் குடித்துக் கொண்டே மேட்ச்
பார்க்கலாமா?” என்று கேட்டான் பாலா. நான் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை
என்பதால் இந்த ஐ.பி.எல். என்ற விஷயத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
ஆனால் பாலா பார்ப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்பதால் மாலை
நான்கு மணிக்குக் கிளம்பினோம். பாலா ஷூ அணியாமல் வந்து விட்டதால்
டென்.டௌனிங் செல்ல முடியவில்லை. செருப்புக் காலோடு போவதானால் டாஸ்மாக்தான்
போக வேண்டும். பிறகு யோசித்துப் பார்த்த போது செருப்புக் காலோடு
அனுமதிக்கும் இடம் சவேரா ஓட்டலில் உள்ள மூங்கில் பார் தான் என்பது ஞாபகம்
வந்தது.
பாலாவின் செருப்புக் காலைப் பார்த்ததும்
இன்னொரு பாலா ஞாபகம் வந்தார். அல்மோஸ்ட் ஐலண்ட் கருத்தரங்கிற்காக தில்லி
சென்ற போது அதே விமானத்தில் வந்த இயக்குனர் பாலா. நான் கடவுளுக்காக
ஜனாதிபதி விருது வாங்கச் செல்கிறார். அவருடைய செருப்புக் காலைப் பார்த்து
ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இப்படியேதான் ஜனாதிபதி மாளிகைக்கும் போவாரோ
என்று நினைத்தேன். பிறகு புகைப்படங்களைப் பார்க்கும் போது ஜனாதிபதியிடம்
விருது வாங்கும் போதும் அதே செருப்புக் கால்தான். அதோடு சட்டையில் வேறு
இரண்டு பட்டன்களைத் திறந்து விட்டிருந்தார். கலைஞன் என்றால் இப்படித்தான்
இருக்க வேண்டும். அதிகாரிகளுக்காக நம்மை மாற்றிக் கொள்ளவே கூடாது.
மூங்கில் பாரில் தொலைக்காட்சிப் பெட்டி
என் முதுகுப் பக்கம் இருக்குமாறு பார்த்து அமர்ந்து கொண்டு பாலாவிடம்
“ஐ.பி.எல். மேட்சில் எத்தனை ஓவர்?” என்று கேட்டேன். அப்போது அந்தப்
பக்கமாக வந்த பேரர் என்னை வெளிநாட்டுக்காரன் என்று நினைத்துக் கொண்டு
ஆங்கிலத்தில் ஐ.பி.எல். பற்றி விளக்க ஆரம்பித்தார். ஐ.பி.எல். பற்றித்
தெரியாதவர் நிச்சயமாக இந்தியராக இருக்க முடியாது என்ற அவருடைய எண்ணத்தை
மெச்சிக் கொண்டே “நான் லோக்கல் மைலாப்பூர்காரன்தான்” என்றேன்.
இப்போதெல்லாம் அவ்வளவாக ராயர் கஃபே பக்கம்
செல்வதில்லை. கொழுப்பைக் குறைக்க கன்னாபின்னா என்று நடைப் பயிற்சி செய்து
விட்டு ராயர் கஃபேயில் இட்லியாக முழுங்கினால் சரி வராது என்றுதான் அங்கே
அடிக்கடி செல்வதில்லை. சென்ற வாரம் ஒருநாள் காலையில் ஏழு மணிக்குச்
சென்றேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண், பார்த்த முகமாகத் தெரிந்தது.
பிறகு அவரே ஹலோ சொன்னதும் தெரிந்து விட்டது. முன்னாள் நடிகை சங்கீதா.
அவர் பக்கத்தில் அவர் கணவர் சரவணன். இருவரையும் இரண்டொரு முறை தியான
வகுப்புகளில் சந்தித்திருக்கிறேன். எனக்கு சங்கீதாவைப் பார்க்கும்
போதெல்லாம் நடிகர் விஜய்யின் ஞாபகம் வரும். பிட் படங்களில் நடித்துக்
கொண்டிருந்த விஜய்க்கு நல்லதொரு திருப்பத்தைக் கொடுத்த படம் ’பூவே
உனக்காக’. அதில் விஜய்யின் ஜோடி சங்கீதா. அந்தப் படம் வந்து இந்தப்
பதினான்கு வருடங்களில் விஜய்யின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. விஜய்யின்
வளர்ச்சியைப் போன்றதுதான் ஜெயமோகனின் வளர்ச்சியும். இப்படிப்பட்ட நடிகரும்
இப்படிப்பட்ட எழுத்தாளரும் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.
19-02-2010
No comments:
Post a Comment