Friday, 15 February 2013

எக்ஸைல் பற்றி…(October 11th, 2011)

ஊண் உறக்கம் இல்லாமல் நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  தமிழில் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைத் தாண்டும் வகையில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது.  இப்போது அந்த ஆசை பூர்த்தியாகி விட்டது.  எக்ஸைலைப் படிக்கும் போது இதை நீங்கள் உணர்வீர்கள்.  உலகின் மிகச் சிறந்த 50 நாவல்களில் எக்ஸைலும் ஒன்றாக இருக்கும்.  அதை விட இன்னொரு விஷயம், உலகில் எந்த நாவலிலும் கதாபாத்திரங்களே நாவலை எழுதியதில்லை.  உதாரணமாக, எக்ஸைலில் ஒரு பாத்திரம் பயங்கர ஆணாதிக்கவாதி.  அவன் பேசும் ஒரு வார்த்தையில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது.  ஆனால் அவன் இந்த நாவலில் ஒரு முக்கியமான பாத்திரம்.  மேலும், ஒரு விஷயம்.  எக்ஸைலில் வரும் பகடி அளவுக்கு உலக நாவல்களிலேயே அரிது.  சமீபத்தில் என் தோழியிடம் அந்த நாவலில் வரும் சொய்ங் வாத்தியார் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தோம்.  சொல்லும் போது சிரித்து சிரித்து என் கண்களில் கண்ணீர் ஊற்றுகிறது.  தோழிக்கும் அப்படியே.  ரெஸ்டாரண்டே எங்களை வேடிக்கை பார்த்தது.  பத்து நிமிடம் சிரித்துக் கொண்டே இருந்தோம்.  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  சொய்ங் வாத்தியார்.
இந்த சிறப்பையெல்லாம் நானே சொல்லிக் கொள்வது பற்றி எனக்கு எந்த லஜ்ஜையும் இல்லை.  நான் ஒரு கருவியே.  எழுதியது இறைவி.  என்னை ஆட்கொண்ட சோட்டாணிக்கரை பகவதி.
மேலும், நம் பெருமைகளை நாமே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருப்பது தமிழ்நாட்டின் அவலங்களில் ஒன்று.  ஏனென்றால், ஸீரோ டிகிரி ஒரு lipogrammatic நாவல்.  உலகில் இதுவரை இரண்டே இரண்டு லிப்போக்ரமாட்டிக் நாவல்கள்தான் எழுதப்பட்டுள்ளன.  ஜார்ஜ் பெரக் எழுதிய La Disparition (ப்ரெஞ்ச்)  மற்றும் வால்டர் அபிஷ் எழுதிய Minds Meet (ஆங்கிலம்).  மூன்றாவது, ஸீரோ டிகிரி (தமிழ்).  இதையும் நானே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.   தமிழ்நாடே கொண்டாடி, பெருமைப்பட்டிருக்க வேண்டிய விஷயம் இது.  ஆனால் நடக்கவில்லை.  லிப்போக்ரமாட்டிக் என்றால் என்ன?  ஃப்ரெஞ்சில் e என்ற எழுத்து இல்லாமல் ஒரு வாக்கியத்தைக் கூட எழுத முடியாது.  பெரக் e இல்லாமல் 311  பக்க நாவலை எழுதியிருக்கிறார்.  அதேபோல் தமிழில் ஒரு என்ற வார்த்தை இல்லாமல் ஒரு நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை.  நான் ஸீரோ டிகிரியை அப்படி எழுதியிருக்கிறேன்.  மேலும், அதில் கமாவும் மற்ற குறிகளும் கிடையாது.  முற்றுப் புள்ளி மட்டுமே உண்டு.
சமீபத்தில் வந்த கடிதம் ஒன்று இது.
டியர் சாரு,
கடந்த ஒரு வருடமாக தங்களை தங்களின் எழுத்துகளின் வழியே தரிசித்துவருகின்றேன் ,உங்கள் எழுத்து என்னை பல நிலைகளில் விழிப்புனுர்வு அடைய வைத்துக்கொண்டிருக்கின்றது .நான் உங்கள் எழுத்தை பற்றிக்கொண்டு சென்றுகொண்டே இருக்கின்றேன் ,எந்த விஷயத்தை யாரிடம் பேசினாலும் உங்களை பற்றி பேசாமல் , மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை . உங்கள் புத்தகமோ,எழுத்தோ  என்னிடம்  இல்லாலத நேரங்களில் நான் வெறுமையுடனும் பதற்றத்துடனும் இருக்கின்றேன் ,எனக்கு  உங்களையும்  நீங்கள் காட்டும் எழுத்தாளர்களயும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகின்றது. தங்களை   ஒருமுறை உங்கள் வீட்டில் சபரிமலைக்கு  செல்லும் முன் நடந்த பூஜையில் கலந்து கொண்டு சந்தித்திருக்கின்றேன்.(மறக்க முடியாத நாள்).தங்களுக்காக எதைவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் உங்கள் தீராத வாசகனாக  இருக்க விரும்புகின்றேன்.
நான் அறிந்த வரை தமிழுலகில் 1.பாரதி ,2.பெரியார், 3.சாரு நிவேதிதா.
இப்படிக்கு,
தேனில் சிக்குண்ட வண்டாக உங்கள் எழுத்துகளில் மூழ்கி கிடக்கும்,
தஞ்சாவூர் சம்பந்தர்.
டியர் சம்பந்தர்,
உங்கள் கடிதம் என்னை நெகிழ வைத்தது.  வரும் சனி ஞாயிறில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்.

அறமும், தார்மீகமும் இல்லாத… (June 12th, 2011)

மீண்டும் சொல்கிறேன்.  சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் பல நல்ல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  அதில் நான் எழுதிய ஒரு சிறு பதிவு இது:
டியர் விநாயக முருகன்,
நீங்கள் கொடுத்த லிங்கில் இருந்த அவதாரம் என்ற கதையைப் படித்தேன். அதை என்றும் கட்டுரை என்றும் கொள்ளலாம். சிலருக்கு வார்த்தை என்பது பூக்காரிகளின் பூ போல. ஒரு பூக்காரி தன் வாழ்வில் எவ்வளவு பூக்களைத் தொடுத்திருப்பாள்? யோசித்துப் பாருங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் அவளுடைய தலையாய வேலை பூத்தொடுப்பது. எத்தனை கோடிப் பூக்கள்! ஆனால் உங்களாலும் என்னாலும் பூத் தொடுக்க முடியாது. தெரியாது. அது ஒரு வேலை. அதேபோல் உ.த.எ. வார்த்தைகளை வைத்துத் தொடுக்கிறார். தொடுத்துக் கொண்டே இருப்பார். அதில் அடி உதை இருக்கலாம்; அறம் மறம் முறம் எல்லாமும் இருக்கலாம். வெறும் வார்த்தைக் கூட்டம். குஷ்வந்த் சிங் சொன்னார், சில எழுத்தாளர்களின் விரல்களுக்குக் காண்டம் போட்டால் என்ன என்று. அதுதான் உ.த.எ. விஷயத்திலும். நாம் நம்முடைய வாழ்நாளில் எத்தனை லிட்டர் மூத்திரம் போகிறோம்? யாருக்காவது கணக்கு தெரியுமா? உ.த.எ.விடம் அப்படி வெளிப்படுவது வார்த்தை. ஆனால் எனக்கு வார்த்தை என்பது ஆன்ம சுத்தி. 20 லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக நான் மணி ரத்னத்தின் காலில் போய் விழ மாட்டேன். பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயைப் போன்ற ஈனச் செயலை நாள் தோறும் செய்து கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து உங்களுக்குத் தார்மீகக் கோபம் வர வேண்டாமா விநாயக முருகன்? கதை என்பது, வார்த்தை என்பது, எழுத்து என்பது நாம் தினம்தோறும் பெய்யும் மூத்திரத்தைப் போன்றதுதானா? நாம் சொல்கின்ற வார்த்தைக்காக நாம் நம்முடைய உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டாமா?
இப்படி பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயின் குணத்தையா நம் ஆசான் பாரதி நமக்குக் கற்றுக் கொடுத்தான்? உத்தமத் தமிழ் எழுத்தாளர் நாள் தவறாமல் பேசும் அறமும் ஆன்மீகமும் அவரது ஒரு நடவடிக்கையிலாவது இருக்கிறதா? சினிமா உலகில் அவர் செய்து கொண்டிருக்கும் அசிங்கமான வேலைகளைப் பார்த்து சினிமாத் துறையில் இருப்பவர்களே காறித் துப்புகிறார்கள்… ஒரு பக்கம் இந்துத்துவம் பேசுவார். இன்னொரு பக்கம் ஏதாவது இஸ்லாமிய அமைப்பு அவரை மதித்து ஒரு கூட்டத்துக்கு அழைத்தால் இந்துத்துவத்தைத் திட்டுவார். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கிறிஸ்தவ பாதிரி இவரைப் பாராட்டிக் கடிதம் எழுதிவிட்டார் என்பதற்காக இவர் “தங்கள் காலில் விழுகிறேன். என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள்” என்று எழுதி அதையும் தன் ப்ளாகில் போட்டிருந்தார். அதில் என்ன வேடிக்கை என்றால், அந்தப் பாதிரியார் மீது ஊர் சொத்தைக் கொள்ளையடித்த ஊழல் வழக்கு நிலுவையில் இருந்தது… காசுக்காகவும், புகழுக்காகவும் பிணத்தின் நெற்றியில் உள்ள நாணயத்தைக் கூட சுரண்டத் தயாராக உள்ள ஒருவரைப் பற்றி நம்முடைய வாசகர் வட்டத்தில் நீங்கள் எழுதலாமா முருகன்? உங்களுடைய வாசிப்பை நான் குறை சொல்லவில்லை. ஆனால் இதைப் பலர் முன்னிலையில் விவாதிக்கும் அளவுக்கு அவர் ஆளா என்று மட்டுமே கேட்கிறேன். நான் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.
ஒரு எழுத்தாளனுக்குத் தார்மீக பலம் வேண்டும். ராம் ஜெத்மலானியை எடுத்துக் கொள்ளுங்கள். பணம் கொடுத்தால் இந்திய தேசத்தை தாவூத் இப்ராஹீமிடம் விற்ற ஆளுக்காகக் கூட வாதாடுவார். ஒரு எழுத்தாளன் அப்படி இருக்கலாமா?
நீங்கள் குறிப்பிடும் கதையில் – அல்லது, கட்டுரையில் – எனக்குத் தெரிய வந்த ஒரே விஷயம். உ.த.எ.வுக்கு நன்றாக சினிமா வசனம் எழுத வருகிறது… அதாவது, விஜய் போன்ற நடிகர்களின் சினிமாவுக்கு… இப்படிப்பட்ட கமர்ஷியல் சினிமா வசனகர்த்தாக்களைப் பற்றி நாம் இவ்வளவு சீரியஸாக விவாதிக்கத்தான் வேண்டுமா?
***
மேற்கண்ட விஷயத்தை எழுதிய பிறகுதான் தெரிந்தது; அந்தக் குறிப்பிட்ட அவதாரம் பைபிளிலிருந்து தூக்கியது என்று.  இதோ லிங்க்:

Wednesday, 30 January 2013

மழையா பெய்கிறது?

இரவு பனிரண்டு மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது.  தண்ணி அடித்து விட்டுப் படுத்தாலும் நான்கு மணிதான்.  ஒருக்கணம் ‘என்னடா வாழ்க்கை இது?’ என்று தோன்றும்.  ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளில் 24 மணி நேரம் என்றால் இப்படி நான்கு மணிக்கு எழுந்து கொள்வதால் நமக்கு 30 மணி நேரம் கிடைத்தது போல் இருக்கும்.  அதனால்தான் ஆண்டுக்கு பத்து புத்தகங்களை எழுத முடிகிறது.  இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எனக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு.  இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமை உண்டு. நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்காதீர்கள்.
என்னுடைய எழுத்து எக்காரணம் கொண்டும் நாட்குறிப்பாக ஆகி விடக் கூடாது என்று கவனமாக இருப்பேன். ஆனால் அதையும் மீறி ஓரிரு சமயங்களில் அப்படி ஆகிவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.  அப்படி ஒருநாள் நேற்று.  வழக்கம் போல் நேற்றும் நான்கு மணிக்கே எழுந்தேன்.    ஆனால் காலையில் எழுந்ததும் வழக்கமாகச் செய்யும் ஆயில் புல்லிங், தியானம் போன்ற எந்த வேலைகளையும் செய்யவில்லை.  மெரீனா பீச்சுக்கு வாக்கிங் செல்லவில்லை. (வாக்கிங் செல்லும் போது ஒரு குழப்பம்.  காலை ஐந்தரைக்கு சரியாக விவேகானந்தர் இல்லம் அருகே நான் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஒரு நடிகை முழங்கால் வரை நீளும் ட்ரௌசர் போட்டுக் கொண்டு வாக்கிங் செல்கிறார்.  ஆனால் யார் என்று எனக்குத் தெரியவில்ல. ஆனால் நடிகைதான்.) மெரினா வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆறரை ஆகியிருக்கும்.  அதன்பிறகு பப்பு, ஸோரோவை வாக்கிங் அழைத்துச் செல்வேன். அந்த வேலையும் செய்யவில்லை.
எழுந்ததும் கணினியின் முன்னால் அமர்ந்து டைப் செய்ய ஆரம்பித்து விட்டேன்.  செமத்தியான கோடை மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.  அதுவும் கோடை மழை அக்னி நட்சத்திரத்தில் பெய்தால் ரொம்ப அதிர்ஷ்டம்.  பின்னி எடுத்துக் கொண்டிருந்தது மழை.  ஆனால் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.
சாலக்குடியில் நின்ற போது ஒரு பத்திரிகைக்காக ஒரு பெண் என்னைப் பேட்டி எடுத்தார்.  காலை உணவை சாப்பிட்டுக் கொண்டே (எனக்குப் பிடித்த புட்டு, கடலை) பேட்டி கொடுத்தேன்.  பிறகு உடனே போராட்டக் களத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் கேள்விகளை மின்னஞ்சல் செய்யச் சொல்லி விட்டு வந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு என் பதில்களை அனுப்பி வைக்க வேண்டும்.  ஒவ்வொரு கேள்விக்கும் என் பதில்கள் இரண்டு இரண்டு வரிகளே இருந்தன.  என்றாலும் அதற்காக மிகவும் யோசிக்க வேண்டியிருந்தது.
மாத்யமம் பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள்.  அதையும் நேற்று மதியமே அனுப்ப வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்மை கட்டுரை பாதியிலேயே தொங்கிக் கொண்டிருந்தது.  எந்தப் பத்திரிகைக்கும் தாமதமாக அனுப்புவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.  அந்தத் தவறை நான் ஒருமுறை கூட செய்ததில்லை. இவ்வளவு வேலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டியிருந்ததால் நேற்று பெய்த கோடை மழையைக் கூட ரசிக்க முடியவில்லை.
இதற்கிடையில் தூர தேசம் ஒன்றிலிருந்து அழைத்த தோழி “கோடை மழையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று வேறு கேட்டு வெறுப்பைக் கிளப்பினார்.
சில சமயங்களில் என் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது மழையில் சென்னை பூராவும் மிதந்து கொண்டிருப்பது கூடத் தெரியாது.  ஒருமுறை இரண்டு தினங்கள் அறைக்குள்ளேயே கிடந்து எழுதிக் கொண்டிருந்த போது ஹமீது போன் செய்தார்.
“மதியத்துக்குள் எழுதி முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்; நேரில் வருகிறேன்; பேசலாம்” என்றேன்.
”என்னது, நேரில் பேசலாமா?”
”ஏன், என்ன விஷயம்?”
”நீங்கள் வெளியூரில் – கேரளாவில் – இருக்கிறீர்களா?”
”இல்லையே, வீட்டில்தான் இருக்கிறேன்.”
”அப்படியானால் உங்களுக்கு விஷயம் தெரியாதா?”
“என்ன விஷயம்?”
”என்னங்க இது, ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது. உங்களுக்குத் தெரியாதா?”
”என்னது, வெள்ளமா? மழையா பெய்கிறது?”
ஹமீது அதற்கு மேல் பேசவில்லை; இணைப்பைத் துண்டித்து விட்டார்.
சத்தியமாக இப்படித்தான் நடந்தது.  நம்ப முடியாவிட்டால் ஹமீதிடம் கேட்டுப் பாருங்கள்.
20.5.2010.
10.28 a.m.

Monday, 28 January 2013

சூடு, சொரணை, மானம் இல்லாமல் உண்டியல் குலுக்குவது எப்படி?

இதுவும் ஏற்கனவே எழுதியதுதான்.  எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவதன் காரணம், என் எழுத்தைப் படிக்க வரும் புதிய வாசகர்களும் அவர்களுடைய கேள்விகளும் சந்தேகங்களும்தான்.  இதெல்லாம் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்பது, பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை.  அதனால் ஏற்கனவே இதைப் படித்து விட்ட வாசகர்கள் இதைத் தாண்டி செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு போன் செய்து “என் மகள் உங்களுக்கு 5000 ரூ. அனுப்பச் சொன்னாள்; உங்கள் வங்கி எண் என்ன?” என்றும் கேட்டார்.  அப்போதெல்லாம் நான் அடுத்த வேளை சோற்றுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  இருந்தாலும் மாணவர்களிடமிருந்து பண உதவி பெறுவதில்லை என்று மறுத்தேன்.  ஆனாலும் பிடிவாதமாக அனுப்பி வைத்தார்.  அந்த மாணவி அப்போது என்னுடைய தீவிர வாசகி.  பிறகு அவருக்குத் திருமணமான பிறகும் அதே வேலையை ஆரம்பித்தார்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பை 50 பிரதிகள் வாங்கினார்.  அவர் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே அதை விநியோகிக்கப் போவதாகவும் கூறினார்.  ”இதெல்லாம் ஆபத்தான காரியம்; உங்கள் கணவர் ஆட்சேபிக்கலாம்; வேண்டாம்” என்றேன்.  கேட்கவில்லை.  கணவர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து விட்டதாக பின்னர் அறிந்தேன்.  அந்தப் பெண்ணும் என்னைத் தொடர்பு கொள்வதில்லை.
பெண்ணுக்கு மட்டும் இல்லை; என் நெருங்கிய சகா ஒருவன் திருமணமான புதிதில் ஸீரோ டிகிரியைக் கொண்டு போய் தன் மனைவியிடம் கொடுத்து படிக்கும்படி சொல்லியிருக்கிறான்.  நல்ல ஆசாரமான பெந்தகோஸ்தா குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அடுத்த மாதமே அவனை விவாகரத்து செய்து விட்டார்.  அந்தப் பெண் விவாகரத்து வேண்டி என் நண்பனுக்கு அனுப்பியிருந்த நோட்டீஸைப் படித்து நானே மிரண்டு போனேன்.  ஏதோ க்ரூப் செக்ஸ், அனிமல் செக்ஸ் என்று என்னென்னவோ எழுதியிருந்தது.  பஸோலினி இயக்கிய 120 days  of  a Sodom  என்ற பட்த்தைப் பார்ப்பது போல் இருந்த்து அந்த நோட்டீஸ்.  இப்படி இலக்கியத்துக்கு சம்பந்தமில்லாத சராசரிகளிடம் கொண்டு போய் என் எழுத்தை அறிமுகப்படுத்தும் போது இம்மாதிரி மரண விபத்துகளே ஏற்படும்.
அப்படி ஒரு விபத்து என் சிநேகிதி ஒருவருக்கு ஏற்பட்டிருப்பதாக யூகிக்கிறேன்.  அவர் எனக்கு ஓரிரு சந்தர்ப்பங்களில் பண உதவி செய்திருக்கிறார்.  திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.  இனிமேல் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஒரு மெயில் வந்தது.  இது போல் அடிக்கடி நிகழ்வதால் சரி என்று விட்டு விட்டேன்.  அதோடு முடிந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன்.  இரண்டு நாட்கள் கழித்து “I would not be able to do anything for you henceforth and would not be liked to be communicated. Hope you understand and thanks for your co-operation” என்று ஒரு கடிதம் வந்தது.
என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்த மிக அவமானகரமான தருணங்களில் இதுவும் ஒன்று என எண்ணினேன்.  என்னோடு தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்று எழுதும் நபரிடம் போய் பணம் வாங்கும் அளவுக்கு நான் கீழ்த்தரமாகப் போய் விடவில்லை என்று ஒரு வரி எழுதிப் போட்டாலும் அந்தக் கடிதத்தின் அவமானகரமான அடி என்னை மிகவும் அதிர வைத்தது.
அராத்து சொன்ன சம்பவம் ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது.  அவருடைய ஊர் சிதம்பரம்.  அங்கே வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வருவதுண்டு. நமக்குப் பொதுவாகவே வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் அவர்கள் என்ன ஊர், எந்த தேசம் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படும்.  அந்த ஆர்வத்தில் அராத்தும் ஒரு வெளிநாட்டுக்காரரிடம் “நீங்கள் எந்த ஊர்?” என்று ஆங்கிகலத்தில் கேட்டிருக்கிறார்.  அப்போது அராத்தின் வயது 10.  அதற்கு அந்த வெளிநாட்டுக்கார்ர் சொன்ன பதிலைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்ப்டுவீர்கள்.  அவர் அராத்திடம் “No pen” என்று பதில் சொல்லியிருக்கிறார்.  பத்து வயதுப் பையன் அராத்துக்கு ஒன்றும் புரியவில்லை.  நோ பென் என்று ஒரு பெயர் இருக்குமா?  மறுபடியும் நீங்கள் எந்த தேசம் என்று கேட்க, அந்த வெள்ளைக்கார்ர் மறுபடியும் நோ பென் என்று சொல்லியிருக்கிறார்.  அராத்துக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை.  மறுநாளும் கோவில் பக்கம் சென்று அங்கே வந்த வேறு வெளிநாட்டுக்கார்ர் ஒருவரிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்க அவரும் நே பென் என்று சொல்லியிருக்கிறார்.  ”அட ங்கொக்கால ஓலி, என்னடா இது, எவனைக் கேட்டாலும் நோ பென் ங்கிறான்? என்னடா விஷயம்?” என்று அமைதியாக இருந்து அங்கே வரும் வெளிநாட்டுக்கார்ர்களை கவனித்திருக்கிறான் பொடியன் அராத்து.  பிறகுதான் விஷயம் தெரிந்திருக்கிறது.  அங்கே உள்ள பொடிப்பயல்கள் வெளிநாட்டுக்கார்ர்களைப் பார்த்தால் பென் ப்ளீஸ் பென் ப்ளீஸ் என்று கேட்கிறார்கள்.  வெளிநாட்டுக்காரனும் நோ பென் நோ பென் என்கிறான்.  ஆக, எந்தப் பொடியன் என்ன கேட்டாலும் நோ பென் என்று ஆகி விட்டது பதில்.
அடங் கொம்மால என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தாராம் அராத்து.  அராத்து அப்படித்தான் அசிங்க அசிங்கமாகப் பேசுவார்.  அதே அசிங்கமான வார்த்தையைத்தான் அந்தக் கடிதத்தைப் படித்தபோதும் உச்சரித்தேன்.  நான் என்ன உங்களிடம் பேனா யாசகம் கேட்கும் சிறுவன் என்று நினைத்தீர்களா?
எனக்கு உதவி செய்யும் அளவுக்கு நீங்கள் பெரிய இட்த்தில் இருக்கிறீர்களா என்ன?  ஒரு துறவியின் திருவோட்டில் நீங்கள் இடும் அன்னம் அந்தத் துறவிக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்?  உங்கள் குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்டுவதை அந்தக் குழந்தைக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்? தமிழ் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு அநாதைகளாக அலைந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எழுத்தாளர்களை ஆதரிப்பது நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவியா?
நான் மற்ற சராசரி மனிதர்களைப் பற்றிச் சொல்லவில்லை.  என் எழுத்தின் முக்கியத்துவம் தெரிந்த ஒன்றிரண்டு வாசக நண்பர்களிடம் மட்டுமே இதைக் கேட்கிறேன்.  எல்லோரிடமும் என்று நினைத்து விடாதீர்கள்.
தமிழின் மிக முக்கியமான எழுத்தாளரான கோபி கிருஷ்ணனுக்கு மாதம் 500 ரூ மட்டுமே தேவைப்பட்டது. அதுவும் தேநீர் மற்றும் சிகரெட் செலவுக்காக.  அவர் எப்போதும் புகைத்துக் கொண்டே இருப்பார்.  அதனால்தான் அவர் இறந்தார் என்று எழுதியிருக்கிறார் ஒருவர்.  அப்படி அல்ல அது.  சிகரெட் குடிக்க காசு இல்லாத்தால்தான் அவர் இறந்தார்.  பார்ப்பதற்கு 45 வயதுக்கு மேல் சொல்ல முடியாது.  அவர் குடிக்கும் சிகரெட் சுண்டு விரல் நீளம் இருக்கும். ஒரு சிகரெட் அஞ்சு பைசா.  எனக்கு அப்போது பணக்கார நண்பர்கள் கிடையாது.  நானே அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  அவருடைய கதைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகை ஆபீசாக ஏறி இறங்கினேன்.  இந்தியா டுடேயில் மட்டும் ஏற்றுக் கொண்டார்கள்.  ஒரு கதைக்கு 1500 ரூ.  ஆனால் கதை வந்து ஆறு மாதம் கழித்துத்தான் செக் வரும்.  (இப்போதும் அதே நிலைதான்).  கோபி கிருஷ்ணனின் முதல் கதை இந்தியா டுடேயில் வெளிவந்து செக் வந்து அவர் கையில் கிடைக்கும் போது அவர் பிணமாகக் கிடந்தார். தமிழ் சினிமா காட்சி மாதிரி இருக்கும்.  ஆனால் அதுதான் உண்மை.
தர்மு சிவராமு, பாரதிக்குப் பிறகு தமிழின் மிகச் சிறந்த கவி என்று அவனைச் சொல்வேன்.  அவனுக்கு சில பணக்கார நண்பர்கள் இருந்தார்கள்.  அந்த நண்பர்கள் அவனுடைய கவிதையின் மீது ஈர்ப்பு கொண்டு அவனுக்கு நண்பனானவர்கள்.  அதில் ஒரு தொழிலதிபரும் உண்டு.  ஒருவர் அவருடைய வீட்டுப் பூஜை அறையில் அவனுடைய படத்தை வைத்திருந்தார்.  60 வயது என்றாலும் பார்ப்பதற்கு 30 வயதுதான் சொல்ல்லாம்.  கட்டை பிரம்மச்சாரி.  சிலம்பாட்ட வீரனைப் போல் இருப்பார்.  பன்றிகள் வாழும் தொழுவத்தில் (சேரிக்குள் சேரி என்று ஒருமுறை என்னிடம் சொன்னார்.  அவர் வார்த்தைகள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன) வாழ்ந்த்தால்  மஞ்சள் காமாலை மாதிரி ஏதோ ஒரு கடும் நோய் தாக்கி மருத்துவம் பார்க்க வழியில்லாமல் செத்தார்.
ங்கோத்தா, இப்படி அனாதையாக தெரு நாய்களைப் போல் செத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.  இந்த நிலை எனக்கு வேண்டாம் என்று நான் தீர்மானம் செய்தேன். அதற்கு நான் முதலில் செய்ய வேண்டியது, என் சுயகௌரவத்தை விட்டுக் கொடுப்பது. சுயகௌரவத்தைக் குப்பையில் எறிந்து விட்டு குப்பையில் கிடந்த திருவோட்டைக் கையில் எடுத்துக் கொண்டேன்.
தர்மு சிவராமு செய்ய மறுத்த காரியம் அது.  அவருக்கு வேண்டிய ஒரு தொழிலதிபர் ஒரு அலுவலகத்தில் அவருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்.  தர்மு செய்ய வேண்டியது வேலை அல்ல.  அவ்வப்போது அந்த அலுவலகத்துக்குச் சென்று கையெழுத்துப் போட வேண்டும்.  ”என் கவிதைதான் என் கையெழுத்து; போடா உன் உதவியை எடுத்துக் கொண்டு” என்று உதை கொடுத்து அனுப்பி விட்டார்.  என்னோடு தேநீர் அருந்தும் போது கூட “நீ கொடுக்காதே; கொடுப்பதாக இருந்தால் குடிக்க மாட்டேன்” என்று சொல்வார்.  அந்த அளவுக்கு சுயகௌரவம் கொண்டவர்.
எனக்கு என் சுயகௌரவத்தை விட நான் வாழும் சமூகமும் தமிழும் முக்கியமாகத் தோன்றியதால்தான் திருவோட்டைக் கையில் எடுத்தேன்.  ஏனென்றால், எழுத்தாளர்களால்தான் தமிழே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மொழியையும் அம்மொழி சார்ந்த கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே.  இதை நான் தமிழ்ச் சூழலை வைத்துச் சொல்கிறேன். மற்ற சமூகங்களில் இந்த வேலை எழுத்தாளர்களின் தோளில் மட்டுமே விழுவதில்லை; அதைச் செய்ய பல்கலைக் கழகங்களும் மற்றும் பலரும் இருக்கின்றனர்.  அந்தச் சமூகங்கள் எழுத்தாளர்களைத் தங்கள் சொத்தாக நினைத்துக் கொண்டாடுவதால் எழுத்தாளர்களும் இப்படித் தெருநாய்களைப் போல் அநாதைகளாய் சாவதில்லை.
தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வதென்பது ஆஃப்கனிஸ்தானில் ஒரு இசைக் கலைஞனாக வாழ்வதற்கு ஒப்பாகும்.
உத்தமத் தமிழ் எழுத்தாளனின் நடவடிக்கைகளையும், அவருடைய எழுத்தையும் எனக்குப் பிடிக்காது.  ஆனால் தமிழில் எங்கள் எல்லோரையும் விட அதிகம் எழுதியவர் அவர்தான். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரே தான் சினிமாவில் வசனம் எழுதியதால்தான் தன் ஏழ்மை நீங்கியது என்றும், தன் மகனின் கல்லூரிப் படிப்புச் செலவுக்கு சினிமா வசனத்தினால் கிடைத்த பணம்தான் உதவியது என்றும் எழுதுகிறார்.  மாடியில் தனக்கென்று ஒரு அறை கட்டியதற்கும் சினிமா பணம்தான் அவருக்கு உதவியிருக்கிறது.  என்ன ஒரு சமூக அவலம் பாருங்கள்! உலகில் வேறு எந்த இடத்திலும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு கலாச்சார அவலத்தைப் பார்க்க முடியாது.
எஸ். ராமகிருஷ்ணன் எப்போதுமே தன்னைப் பற்றி எழுத மாட்டார்.  அந்த விஷயத்தில் அவர் சுஜாதா மாதிரி.  அதனால் நான் சொல்கிறேன்.  15 ஆண்டுகளுக்கு முந்திய கதை அது.  என்னைப் பார்க்க என் எலிப் பொந்துக்கு வருவார். உங்கள் வீட்டுக் கக்கூஸ் அளவுதான் இருக்கும் என் வீடு.  மந்தைவெளி. ”டீ குடிக்க உங்களிடம் காசு இருக்கிறதா?” என்று அவர் என்னையும் நான் அவரையும் கேட்டுக் கொண்டிருப்போம். சரி, கண்ணன் வரட்டும் என்று இன்னொரு நண்பரின் வருகைக்காகக் காத்திருப்போம். சிங்கிள் டீக்கு வழியின்றி இருந்த காலம் அது.
எனவேதான் என் சுயமரியாதையைக் கைவிட்டு திருவோடு ஏந்தத் துணிந்தேன்.  அதனால்தான் ஒரு எழுத்தாளர் 50 லட்சம் பேர் வாசிக்கும் ஒரு பத்திரிகையில் என்னைப் பற்றி ‘இண்டர்நெட் பிச்சைக்காரன்’ என்று எழுதவும், அதைப் பின்பற்றி பதிவுலக அன்பர்கள் என்னை பிச்சைக்காரன், பிச்சைக்காரன் என்று தூற்றவும் ஆரம்பித்தார்கள்.
இந்தப் பிச்சைக்காரத்தனத்திலிருந்து ஒரே நாளில் நான் வெளியே வந்து விட முடியும்.  ஒன்றுமில்லை.  15 ஆண்டுகளாக நான் எழுதி வரும் சினிமா விமர்சனம் என்ற காரியத்தை நிறுத்தி விட வேண்டும். பொய்யாகப் பாராட்டி எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.  சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்த வேண்டும்.  ஒரே நாளில் என் வறுமை என்னை விட்டு அகன்று விடும்.  வசந்த பாலனுக்கு அல்ல; அவருடைய குருநாதரான ஷங்கருக்கே வசனம் எழுதுவேன். ஆனால் என்னால் முடியுமா?  ஜெண்டில்மேனிலிருந்து ஷங்கருடைய படங்களைக் கிழித்துக் கிழித்துத் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.  ஜெண்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி என்று ஷங்கரின் ஒவ்வொரு படத்தையும் குப்பை குப்பை என்று சொல்லி நார்நாராய்க் கிழித்துக் கொண்டிருக்கிறேன்.  அவர் எப்படி என்னை வசனம் எழுதக் கூப்பிடுவார்?
என் சினிமா விமர்சனம் அப்படி என்றால், என் அரசியல் விமர்சனம் எனக்கு உயிராபத்தையே விளைவித்து விடும் போல் இருக்கிறது.  ’என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?’  என்ற அரசியல் கட்டுரையை என்னைத் தவிர வேறு எந்தத் தமிழ் எழுத்தாளராவது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எழுதுவாரா? எழுதுவதற்குத் துணிச்சல் இருக்குமா? (ஞாநி, சோ இருவரும் அரசியல் விமர்சகர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் இங்கே சேர்க்கவில்லை).
கடைசியாகச் சொல்கிறேன்.  இது எனக்குப் பண உதவி செய்யும் அன்பர்களுக்கான வார்த்தை.  மற்றவர்கள் வழக்கம்போல் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று தங்கள் இஷ்டம் போல் திட்டிக் கொண்டு திரியலாம்.
நீங்கள் எனக்குச் செய்யும் உதவி உதவி அல்ல. அது உங்களுடைய பொறுப்பு; கடமை.  நான் உங்களுடைய மனசாட்சியாக இருக்கிறேன்.  அதனாலேயே இந்த சமூகத்தால் கைவிடப்பட்ட அநாதைக் குழந்தையாக இருக்கிறேன்.  எனவே ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவதைப் போன்றதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி.  என்னுடைய தினசரி வாழ்வுக்கான சிறிதளவு பணத்தை நீங்கள்தான் எனக்குத் தர வேண்டும்.  என் எழுத்தின் முக்கியவத்தும் உங்களுக்குத் தெரிந்தால் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.  என்னுடைய எழுத்துப் பயணம் சற்று பொருட்செலவை அளிக்கக் கூடியது. 2001-இல் நான் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணம் ராஸ லீலாவின் 200 பக்கங்களாக மாறியது.  அந்த 4 லட்சம் ரூபாயையும் என் நண்பர் ஷோபா சக்திதான் ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு வெளிவந்த அவருடைய நாவல் கொரில்லாவை நான் கடுமையாக விமர்சித்தேன்.  4 லட்ச ரூபாய்க்காக என்னை விற்கவில்லை.  அந்த நாவல் ஈழப் போராட்டத்தை மிக மோசமாகக் கொச்சைப் படுத்தியது.  என்னுடைய அந்த விமர்சனம் எங்கள் நட்பில் விரிசலை ஏற்படுத்தியது.  பிறகு அவருடைய ‘ம்’ என்ற நாவல் வந்தது. அது ஒரு இனவாத நாவல்.  சிங்களர்கள் கொடுங்கோலர்கள் என்று ஒரு இனத்தையே பழிக்கும் நாவல் அது.  அதற்கு மேல் ஷோபா சக்தியும் நானும் சந்திக்கவில்லை.  இடையில் ஒருமுறை சந்தித்த போது என் புரவலர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு நான் அவரிடம் என்னை விற்று விட்டேன் என்றார்.  அவருடைய கோபத்தையும், என் விமர்சனத்தால் ஏற்பட்ட காயத்தையும் புரிந்து கொண்டேன்.  அதற்குப் பிறகு நாங்கள் சந்திக்கவில்லை.  அதற்குப் பிறகு என் பயண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
ஆக, இப்படி எந்தத் தருணத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்வதால்தான் உங்களிடம் திருவோடு ஏந்துகிறேன்.  எனவே என்னுடைய எழுத்துப் பயணத்தைத் தொடர்வதற்கு எனக்கு உங்களுடைய உதவி தேவை. அப்படியே உங்களால் எனக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் மேற்கண்டவாறு அந்தப் பெண் எழுதியபடி கடிதம் எழுதாதீர்கள். பெருமாளுக்குக் கோவில் கட்டுவதற்காக திருமங்கை ஆழ்வார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார்.  நான் அப்படியெல்லாம் செய்யவில்லை; திருவோடுதான் ஏந்துகிறேன்.  அதையும் தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள். ஏனென்றால், என்னுடைய எழுத்துக்கு உங்களால் உதவி செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருந்தாலும், என் எழுத்தின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்தால் உங்களை என்னுடைய சகபயணியாகவே கருதுவேன்.  அதில் சந்தேகமில்லை.
ஒரு துறவியைப் போலவே நான் உங்களிடம் வருகிறேன்; அன்னமிடுங்கள். அந்த அன்னம் எனக்கு நீங்கள் தரும் உணவு; உதவி அல்ல.
17.9.2010.
4.00 p.m.
(காலடியிலிருந்து)
(என் வங்கிக் கணக்கு எண்:
ICICI   602601 505045
T.Nagar, Chennai.
Account holder’s name:
K. ARIVAZHAGAN

Sunday, 27 January 2013

குஞ்சுகள் கோவணத்தை செண்டிமெண்டலாக உருவுவது எப்படி?

அன்புள்ள தல சாரு அவர்களுக்கு,
மீண்டும் உங்களின் வேலைப்பளுவின் இடையே தொல்லை படுத்துவதற்கு மன்னிக்கவும்.
உங்க வலைப்பூவில் செப் 13 ஆம் தேதி எழுதிய பதிவைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். படித்த கனம் துக்கம் தொண்டை அடைத்துக்கொண்டது. I can’t express charu. It makes us to feel like it happens to me.
உடனடியாக என்னால் இயன்ற பணத்தை, உங்கள் கணக்கில் செலுத்த முயன்றேன். என் online transfer இல் ஒரு சிறிய கோளாறு. (activation code என் மொபிலில் வரவில்லை). ஆகையால் நான் என் நண்பரின் பழைய Registered Payee கணக்கிற்கு Transfer செய்து, அவரின் அக்கௌன்ட் மூலம் உங்களுக்கு பணத்தை செலுத்துகிறேன் (ரூபாய் 2 ,000) . இந்த சிறிய தாமதத்திற்கு என்னை மன்னிக்கவும். இத்துடன் அவர் Transfer செய்த நகலை இணைத்துள்ளேன்.
சார், இவ்ளோதான் செய்ய முடிந்ததற்கு   நான் வெட்கப்படுகிறேன். உங்களின் பின்னால் நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள், அவர்களை பாஸ்கர் ஒரிங்கினைப்பார்… அந்நாள் வெகு தொலைவில் இல்லை.  சாரு, கூடிய சீக்கிரம் வாசகர்கள் ஆகிய நாங்கள் உங்களை ராஜ மகுடத்தில் உட்கார வைப்போம் என்று மிக்க நம்பிக்கை உள்ளது.
நீங்கள் நீண்ட நலமுடன் வாழ பிராத்திக்கும்,
உங்கள் தீவிர ரசிகன்
ஹரி பிரசாத்
துபாய்
டியர் ஹரி,
முதலில் உங்கள் கடிதத்தை உங்கள் அனுமதியின்றி வெளியிட்டதற்கு என்னை மன்னிக்கவும்.  உங்களுக்கு மெயில் எழுதிக் கேட்க நேரம் இல்லை.
ஒரு நண்பர் நூறு ரூபாய் மணி ஆர்டர் மூலம் அனுப்பி இருந்தார்.  அவரது நல்ல உள்ளத்தை நான் மனதாரப் பாராட்டினேன்.  அவரால் அவ்வளவுதான் முடியும்.  தொகை முக்கியம் அல்ல;  ஒரு கலாச்சார செயல்பாட்டில் நாமும் உடன் இருக்கிறோம்; தோள் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.  தேர் இழுக்கும் நாமும் ஒரு தோள் கொடுப்பது இல்லையா, அது போல.  அந்த நண்பர் முதலில் வங்கியில்தான் நூறு ரூபாயைக் கொடுத்து முயற்சி செய்தாராம்.  ஆனால் வங்கி மூலம் 100 ரூ. அனுப்பினால் என் கணக்கில் 180 ரூ. பிடிப்பார்கள் என்று தெரிந்ததால் பிறகு எனக்கு மெயில் எழுதி, என் முகவரி வாங்கி மணியார்டர் அனுப்பினார்.  அந்த நூறு ரூபாயை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்.
இன்னொரு நெருங்கிய நண்பர் பணம் அனுப்பியிருந்தார்.  நன்றி என்று எழுதினேன்.  என் தந்தைக்கு என் கடமையைச் செய்கிறேன்; இதில் நன்றி எங்கிருந்து வந்தது என்று எழுதினார்.  அதைப் படித்து என் கண்கள் கலங்கி விட்டன.  இப்போது உங்கள் கடிதம்.  இனிமேல் எக்காலத்திலும் தனியன் என்று உணர மாட்டேன்.  உங்களுக்கு ஒரு நற்செய்தி.  ஸீரோ டிகிரியின் ஹிந்தி மொழிபெயர்ப்பும் முடிந்து விட்டது.  அடுத்த ஆண்டு ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் எடிஷனுக்கான கலந்துரையாடல் பாரிஸில் நடக்க வேண்டும்.  அதுதான் என் இலக்கு.  ஃப்ரான்ஸில் அஸியா ஜெப்பார், தாஹர் பென் ஜெலோன், மிஷல் வுல்பெக் போன்ற பெயர்களோடு என் பெயர் வரும்.  அதுதான் என் வாசகர்களாகிய உங்களுக்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய அன்பளிப்பாக இருக்கும்…
உங்களுக்கும் நண்பர்களுக்கும் நான் வணங்கும் அய்யப்பனும் சோட்றாணிக்கரை பகவதியும் அருளையும் செல்வத்தையும் வழங்கட்டும்…
சாரு
(இந்தக் கடிதத்துக்காக நாவல் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று துணிந்து இந்தப் பக்கம் வந்து விட்டேன்… அநேகமாக நாவலை நாளை முடித்து விடுவேன்.  முடித்த அடுத்த கணம் ரெமி மார்ட்டின் தான்.  யார் யார் வருகிறீர்கள்? எங்கே சந்திக்கலாம்?  ஸீரோ டிகிரியை எழுதும் போது கூட இவ்வளவு மன பாரத்தை உணர்ந்ததில்லை. …  )

ஐயோ குப்பி குடுக்க ஆள் இல்லையே, பழுக்கக் காய்ச்சின கம்பியை நம்ப வேண்டி இருக்குதே!

அன்புள்ள சாரு,
உயிர்ம்மையில் நீங்கள் எழுதும் திரை விமர்சனங்கள்(அல்லது சவுக்கடிகள்..உங்களவுக்கு தைரியமான விமர்சனம் நான் படித்ததில்லை) அந்த மாதம் முடிந்தவுடன்தான் நீங்கள் உங்கள் தளத்தில் அதை வெளியிடுவீர்கள்.ஆனால் இந்த மாதம் அழகர்சாமியின் குதிரை+I am விமர்சனத்தை முதல் வாரத்திலேயே இணையத்தில் ஏன் வெளியிட்டீர்கள்?உயிர்மையை படிக்கசொல்லி உங்கள் வாசகர்களுக்கு பரிந்துரை செய்யலாமே!!பெரியார் காட்டுமிராண்டி மொழி என்பதை  மாற்ற பாடுபடுவதாக சொல்லும் நீங்கள்(வரவேற்கிறேன்) இது போன்ற தரமான  சிறு பத்திரிக்கைகளை மக்கள் படிக்க பரிந்துரைக்கலாமே  !!
நன்றிvikidare26@gmail.com

தெரியாமப் பண்ணிப் புட்டேன் சாமி.  என்னய மன்னிச்சுடுங்க… இல்லேன்னா எதாச்சும் பனிஷ்மெண்ட் குடுத்துடுங்க…  என்னா பனிஷ்மெண்ட் குடுக்கலாம் எனக்கு…  ஒரு இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி என் குதத்தில் செருகலாமா?
சாரு